அன்று ரப்பர் எரிந்த பொழுது – கபாலியின் அரசியல்

ஜெயன்நாதன் கருணாநிதி கபாலியின் அரசியல் பற்றி எழுதிய கட்டுரை இது. திரைப்படத்தின் கலையம்சத்தைத் தாண்டி, மலேசிய தமிழர்களின் வாழ்க்கை சூழலை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் என வாதிடுகிறார்.

4 min read

Read this essay in English here.


கோல்டன் மைல் டவர்

சிங்கப்பூரின் லிட்டில் தாய்லாந்து ஆன கோல்டன் மைல் காம்ப்ளெக்ஸில் நைட் ஷோ. கபாலி கிட்டத்தட்ட ஒரு phenomenon என்று தமிழர்கள் மத்தியில் பேசப்பட்டுக் கொண்டிருந்த சமயம் அது. படம் வெளியாகி ஒன்றரை நாளில் facebook முழுக்க வெகு தீவிர விமர்சனத்தினை அப்படம் சந்தித்துக்கொண்டிருந்தது.

காரணம், அப்படத்தின் இயக்குநரான இரஞ்சித் அவர்களின் அரசியல் பார்வையும் அவர் தன் சினிமாவை எப்படி தன் அரசியல் செயல்பாட்டின் நீட்சியாகப் பார்க்கிறார் என்பதைப் பற்றி ஒரு குறிப்பிட்ட சாராருக்கு இருந்த தீவிர எதிர்க் கருத்துக்கள் மற்றும் வழமையான ரஜினி படங்களுக்கே உரித்தான அரசியல் குறியீடுகளை இப்படத்தில் தேடிப் பல குறியீடுகளைக் கண்டு அதனால் கொதிப்படைந்த ரசிகர்கள். இதைத் தவிர்த்து, மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி போல, இந்தியத் தமிழ் ரசிகர்களும் மலேசியத் தமிழ் ரசிகர்களும் வேறு ஒரு காரணத்திற்காக இப்படத்தைக் கண்டு பொருமிக்கொண்டிருந்தனர்.

அதற்குக் காரணம், இப்படத்தின் சமூக, பூகோள மற்றும் வரலாற்றுப் பரப்பு. இப்பரப்பினைப் புரிந்து கொள்ள இயலாமல் இந்தியத் தமிழ் ரசிகர்கள் ஒரு புறம் புலம்பிக் கொண்டிருக்க மற்றொரு புறம் மலேசியத் தமிழ் ரசிகர்கள், இப்படம் அவர்களைப் பற்றிய cliche மற்றும் caricature களை மேலும் ஆழப்படுத்துவதாகவும் பொத்தாம் பொதுவாக அவர்களை கேங்ஸ்டர்களாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் சித்தரிக்கிறது என்றும் எண்ணினர். இதைத் தவிர்த்து படத்தின் அழகியல் அடிப்படையில் விமர்சனங்களை முன்வைத்தவர்களும் இருந்தனர்.

கபாலி என்ற திரைப்படத்தினை நாடு கடந்த, பொதுமையான, ஒடுக்கப்பட்டவர்களின் அரசியலைத் தொட்டுச்செல்லும் ஒரு படமாக, அதன் ட்ரைலர் வழியாகவும், ‘உலகம் ஒருவனுக்கா’ என்ற பாடல் வழியாகவும் மனதினில் ஒரு எதிர்பார்ப்பினை உருவாக்கி வைத்திருந்ததினால், படம் என்பதைத் தாண்டி அதனை ‘fictionalized version of a collection of non-fiction accounts’ ஆகவே நான் எதிர்பார்த்திருந்தேன்.

ஆக, இரவுக் காட்சிக்குக் கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று, மனதில் உள்ள எதிர்பார்ப்பினை மனதில் புதைத்துக்கொண்டு, நண்பர்களுடன் சந்தோஷ் நாராயணின் பாடல்களைப் பற்றிச் சிலாகித்துக்கொண்டு, சிலிர்ப்புடன் ரெக்ஸ் தியேட்டருக்குள் அடியெடுத்து வைக்கும் பொழுது அங்கிருந்த festive atmosphere, மனதில் இருந்த புனைவு, அபுனைவு, ஆண்டை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல் போன்ற விஷயங்களைப் பெரும் புயல் போல் அடித்து நகர்த்திவிட்டு, rajini film experience க்குள் இட்டுச் சென்றது, என்னையே அறியாமல்.

படம் ஆரம்பித்த சில நொடிகளில் தியேட்டர் முழுதும் கவ்வ ஆரம்பித்த அமைதி ஆங்காங்கே சில கரகோஷங்களைத் தவிர்த்து பெரும் சலனமின்றி நிலைத்திருந்தது. கண்ட காட்சிகள் அனைத்தும் கிட்டத்தட்ட இதுவரை புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் பற்றி கண்டும் கேட்டும் படித்தும் இருந்தமைக்கு அருகாமையில் இருந்ததால் மனதினில் ஒரு திருப்தி ஏற்பட்டு, இன்டெர்வல் போதும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் ‘மாய நதி’ பாட்டைக் கேட்டுக்கொண்டு முழுமையான கபாலி அனுபவத்தினுள் இருந்தேன். எதிர்பார்த்த pre-climax உம் கிட்டத்தட்ட open-ended ஆன climax உம் சிறப்பாய் முடிந்த பின், நண்பர்கள் நால்வரும் நள்ளிரவில் uber டாக்ஸியில் வீடு திரும்பும் போது அத்தனை கேள்விகள் அவர்களுக்கும்.

சிங்கையில் இருந்த ஒன்றரை வருடங்களும் இங்கு நான் படித்த புத்தகங்களும், கேட்ட கதைகளும் எதற்குப் பிரயோஜனமாகும் என்ற கேள்வி என் மனதில் என்றும் இருந்திருக்கிறது. இந்த மண்ணிலிருந்து வெளியாகும் நேரத்தில் வந்தது அதற்கான விடை, மலேசிய வாழ் தமிழர்களில் பெரும்பான்மையானவர்களான தோட்டக் கூலித் தொழிலாளர்களின் கதையைப் பேசும் கபாலியைப் புரிந்துகொள்ளவேயென்று.

காலம் காலமாக ரப்பர்த் தோட்டங்களில் வேலை செய்த தமிழர்கள் பின் உலகமயமாக்கல், மலிவான செயற்கை ரப்பர் உற்பத்தித் தொழிற்நுட்பம், இயற்கை ரப்பரின் விலை வீழ்ச்சிக்குப் பின் நிகழ்ந்த தோட்டத் துண்டாடல்கள் காரணமாக வேலை இழந்து அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களில் சிலர் தாயகமான இந்தியாவிற்குத் திரும்பினாலும் பெரும்பாலானோர் தங்கள் தாய்மண்ணான மலேசியாவிலேயே தங்கினர். காலங்காலமாய் தோட்ட வேலைகளில் மட்டுமே ஈடுபட்டவர்கள் மாறிப்போன உலகப் பொருளாதாரம் காரணமாகப் பெரும் படிப்போ, வாழ்க்கையை ஓட்டத் தொழிலோ தெரியாமல் பெருநகரங்களில் வந்து தஞ்சமடைந்தனர்.

பொதுவாக இந்தியத் தமிழர்களுக்கு ஓர் எண்ணம், அதாவது வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் செல்வந்தர்கள் என. அது தான் மலேசியத் தமிழர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைப் புரிந்துகொள்ளாதபடி செய்கிறது. மலேசியாவில் இந்தியர்கள் இரண்டாம் தர குடிமகன்களாகவே நடத்தப்படுகிறார்கள். மலேசிய அரசாங்கம் ‘பூமிப் புத்திரர்கள்’ என்னும் கொள்கையைப் பின்பற்றுவதால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பினில் மலாயா மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

அதே நாட்டின் குடிமகன்களான மலேசியச் சீனர்களுக்கும் மலேசியத் தமிழர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட வருகிறது இன்று வரை. இதில் சீனர்கள் அந்நாட்டின் பொருளாதாரத்தை தங்கள் வணிகத்தால் கட்டுப்படுத்துவதால் அவர்களை இது பெரிதும் பாதிப்பதில்லை. ஆனால் மலேசிய இந்தியர்கள், அதிலும் குறிப்பாக தோட்டங்களில் வேலை பார்த்த மலேசியத் தமிழர்கள் கல்விப் புலம் பெரிதும் இல்லாததாலும், கல்விப் புலம் இருந்தும் மேற்கொண்டு படிக்க வாய்ப்புகள் மறுக்கப்படுவதாலும் திசை மாறிப் போகிறார்கள் என்பதே நிதர்சனம்.

மலேசியா, Golden Triangle என்று சொல்லப்படும் பர்மா, தாய்லாந்து, லாவோஸ் என்னும் நாடுகளுக்கு அருகே உள்ளது. பர்மிய அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்பட்டுவரும் போராளிகள் தங்கள் வருமானத்திற்காகக் கஞ்சா பயிரிட்டு, அதன் வழி போதை மருந்துகளை உற்பத்தி செய்தும் வருகின்றனர். இவர்களைத் தவிர மற்ற குழுக்களும் போதை மருந்தினை உற்பத்தி செய்து வருகின்றது. அதன் அளவு எத்தகையது என்றால், உலகின் கணிசமான சதவிகித போதை மருந்துகள் இங்கு தான் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது மலேசியாவே போதை மருந்து உற்பத்தி கேந்திரமாக உருமாறியும் வருகிறது.

வேலைவாய்ப்பில்லாத பலர் போதை மருந்து வணிகத்தில், கேங்களின் (Number Gangs) வாயிலாகச் சேர்ந்துகொண்டுவிட்டனர். சமீபத்திய கணக்கெடுப்பு, இக்கேங்களில் 71% சதவிகித பேர் இந்தியர்கள் என்று கூறுகிறது. இதோடு தான் கபாலி படத்தின் பின் கதையை நாம் புரிந்து கொள்ளவேண்டும். மலேசிய மக்கட்தொகையில் வெறும் 7 முதல் 9 சதவிகிதமே இருக்கும் மலேசிய இந்தியர்கள் எவ்வாறு கேங்களில் 71% சதவிகிதம் இருக்கிறார்கள் என்பதை ஆராய ஆரம்பித்தால் மலேசிய இந்தியர்களும் அவர்களுள் பெரும்பான்மையான மலேசியத் தமிழர்கள் படும் அல்லல்களும் விளங்கும்.

இந்த புரிதல் இருந்தால், கபாலி படத்தின் கடைசி சீனில் மாணவர்கள் பேசும் உரையாடல் தெள்ளென விளங்கும். இந்தியர்கள் தங்கள் தோலின் நிறத்தால், இந்தியர்கள் என்ற ஒரே காரணத்தினால் ஒதுக்கப்படுவதையே பேசுபொருளாகக் கொண்டிருக்கிறது இத்திரைப்படம். அதோடு எவ்வாறு ஒடுக்கப்பட்ட நிலையினிலும் மலேசிய தமிழ் சமூகத்துள் சாதி, வர்க்கப் பாகுபாடு தலைவிரித்து ஆடுகிறது என்ற அரசியலையும் பேசுகிறது.

மேலும் இந்தத் திரைப்படத்தில் வரும் வன்முறை நிஜமாகவே நிகழுமா, ஒரு கேங் தலைவன் இறந்தால் ஊரில் ஊர்வலம் நடத்துவார்களா என்றெல்லாம் கேள்விகள் வருகின்றன. நிஜம் பலநேரங்களில் கற்பனையை விடப் பயங்கரமாய் இருக்கும் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம் (Youtube-ல் funeral for gang 36 என்று தேடிப் பார்க்கவும்). மேலும் இது போன்ற கேங்களை எவ்வாறு அரசாங்கம் கட்டுக்குள் வைத்திருக்கிறது என்பதற்கு இந்தப் படமே ஒரு உதாரணம் தான். முள்ளை முள்ளால் எடுப்பது போன்று கேங்களை ஒன்றுக்கொன்றோடு சண்டையிட்டுக்கொள்ள வைத்து நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் ஒரு வகை நிர்வாகத் தந்திரமே, உலகம் முழுவதும்.

ஆக, எல்லைகள் கடந்த தமிழ்ச் சமூகத்தின் கதைகளைத் தமிழ்த் திரைப்பட உலகம் கவனிக்க ஆரம்பித்ததன் முதற் படி தான் கபாலி. தமிழ் பேசும் மக்கள் இந்தியா தவிர்த்து மலேசியா, சிங்கை, ஸ்ரீலங்கா, தென் ஆப்ரிக்கா, மொரீசியஸ், செய்செல்ஸ் போன்ற நாடுகளில் காலம் காலமாய் வாழ்ந்து வருகின்றனர். இத்தனை ஆண்டுக் காலம் நமது மண்ணின் கதைகளான பருத்திவீரன், தேவர் மகன், மறுமலர்ச்சி, சின்ன கவுண்டர், புதுப்பேட்டை போன்ற படங்களை ஆதரித்து வந்த மலேசியத் தமிழ்ச் சமூகத்தின் கதையினை நாமும் ஆதரிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். காரணம், இந்தப் படத்தின் அடிநாதமாக இருக்கும் கசப்பான உண்மை, ரப்பர்த் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழர்களின் கையறு நிலை, அவர்களை நிர்க்கதியாக்கிய அரசாங்கத்தின் பூமிப்புத்திரர் கொள்கை அதனோடு இனம் சார்ந்த ஒடுக்குமுறை.

இது ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் கதையென்பதில் துளியளவும் சந்தேகமில்லை. இத்திரைப்படத்தைக் காணுவதென்பது நமது சகோதரர்களை, எல்லை கடந்த தமிழ்ச் சமூகத்தைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவே காண்கிறேன்.

ஒரு நிஜப் பிரச்சினையை, நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒடுக்குமுறையை மிகவும் தைரியமாக எடுத்ததற்காகவே ரஜினி அவர்களுக்கும், பா. இரஞ்சித் அவர்களுக்கும் ஓர் உலகத் தமிழனாய் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இது நாள் வரை நான் அறிந்த இந்தச் சரித்திரம் இன்று தமிழ் பேசும் ஒவ்வொரு வீட்டிலும் உலகம் அதிரும் பறையிசையாய், போர்முரசாய் ஒலிப்பதற்கு வினையூக்கியாய் இருந்த கபாலிக்கு என் நன்றிகள்.

கபாலியைப் பற்றிப் பேச நினைத்ததைப் பேசி கட்டுரைக்கான கிளைமாக்சை சிறப்பாய் முடித்த திருப்தியோடு, அதன் தொடர்ச்சியாக கபாலி போன்றே கட்டுரைக்கு open ending தருதற் பொருட்டு, 90களின் நிகழ்ந்த தோட்டத் துண்டாடலினை மையமாய்க் கொண்ட ஜகத் என்ற மலேசியத் தமிழ்ப் படத்தினை name drop செய்கிறேன். கபாலி என்ற திரைப்படம், ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியலைப் பேசுகிறது என்பதைத் தவிர்த்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதத் தமிழர்கள் எவ்வாறு அவர்கள் வாழும் சூழலினாலே, கீழ்நோக்கி அழுத்தும் சுழலில் மாட்டிக்கொள்கிறார்கள் என்றும் கல்வி மாத்திரமே ஒருவரை மேல் இட்டுச் செல்லுமா அதற்கான வாய்ப்புகளை வழங்கும் நிலையில் மலேசியச் சமூகம் இருக்கிறதா போன்ற முக்கிய கேள்விகளை ஆங்காங்கே எழுப்பியது. கிட்டத்தட்ட இவ்விஷயங்களைத் தொட்டுப் பேசும் படம் தான் ஜகத் (2015) என்று நான் நினைக்கிறேன். வாய்ப்பிருந்தால், மெய்நிகர் ஜகத்தினில் ஜகத்தினைக் கண்டடைந்து பார்க்கலாமே, கண்டிப்பாக வருத்தப்படமாட்டீர்கள்.

இதனையும் காண்க மற்றும் குறிப்புகள்

மைக்கேல் ஸ்டென்சன் அவர்கள் எழுதிய புலம் பெயர்ந்த தமிழர்கள் – மலேசியா (ஒரு மார்க்சிய ஆய்வு)

நியூ மண்டலா என்ற சஞ்சிகையில் வெளியான இரண்டு பாக கட்டுரை

Plantation workers face poverty and poison

Retrenched rubber tappers demand compensation

Golden Triangle பற்றிய கட்டுரைகள்


எழுத்தாளரைப் பற்றி

ஜெயன்நாதன் கருணாநிதி. பிறந்த ஒரு சில மாதங்களில் சென்னைவாசியான இவர் தன்னை சென்னைவாசியென சொல்லிக்கொள்வதில் மாற்றுக் கருத்தினைக் கொண்டுள்ளவர். தன்னை சென்னை மண்ணின் மைந்தனாக அடையாளப்படுத்திக் கொள்வதை விட தஞ்சையிலிருந்து சென்னைக்குப் புலம் பெயர்ந்த குடும்பத்தின் ஒரு அங்கத்தினன் என்று சொல்லுவதே சரி என்று எண்ணுபவர்.

 

Did you like what you read? Support us as we explore film cultures from around the world; experience cinema in new ways with us. Let us keep The World of Apu free for all!

Become a Patron!