Read this essay in English here.
சில ஆண்டுகளுக்கு முன், சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்பில் மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதிய “செம்மீன்” நாவல் வாசிக்கக் கிடைத்தது. என்னைத் தீவிர இலக்கிய வாசகனாக மாற்றிய மிக முக்கியமான நூல்களில் செம்மீனும் ஒன்று. செம்மீன் நாவலை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படமும் வெளிவந்திருப்பதைச் சமீபத்தில் அறிந்துகொண்டு மிகுந்த உற்சாகத்துடன் அத்திரைப்படத்தைப் பார்த்தேன். எஸ்.எல்.புரம் சதானந்தன் என்பவரது திரைக்கதையில் ராமு கார்யாட் இயக்கி, 1965ம் ஆண்டு செம்மீன் திரைப்படமாக வந்துள்ளது. மிக அட்டகாசமான முயற்சி!
நாவல்களை அடிப்படையாக வைத்துத் திரைப்படங்கள் வெளிவரும் போக்கு தமிழில் இல்லவே இல்லை என்னும் தற்போதைய சூழலில் செம்மீன் திரைப்படத்தைப் பற்றிப் பேசுவது அவசியமாகிறது. ஏனெனில், செம்மீன் ஒரு சாதாரண படம் என்று கடந்து செல்ல முடியாதபடி அது மலையாளத்தில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. 2015ம் ஆண்டு செம்மீன் வெளிவந்து ஐம்பதாண்டு நிறைவுற்றதை ஒட்டி கொண்டாட்டங்கள் நடத்தும் அளவிற்குக் கேரள மக்களின் மனங்களில் நீங்காத இடத்தை அது பெற்றிருக்கிறது!
அரபிக் கடலோரம் உள்ள ஒரு மீனவ கிராமத்தைச் சேர்ந்த கருத்தம்மாவின் கதைதான் செம்மீனின் கதை. தன் முதலாளியின் மகன் பரீக்குட்டி மீது கருத்தம்மாவுக்கு அவளது பால்யத்தில் ஈர்ப்பு ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் அந்த ஈர்ப்பு காதலாகவும் மாறுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கருத்தம்மாவின் தந்தை செம்பங்குஞ்சு தன் லட்சியமான தோணி வாங்குவதற்காகப் பரீக்குட்டியிடம் ஒரு பெரும் தொகையைக் கடனாக வாங்குகிறார். அந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்காததாலும், கருத்தம்மாவுக்கும் வேறொருவருக்கும் திருமணம் செய்யப்படுவதாலும் அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களே செம்மீன் கதையாகிறது.
இந்த நாவலில் இருந்து திரைக்கதையை உருவாக்குவதற்குப் பெரிய அளவில் நாவலில் உள்ள கதையின் போக்கில் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாமல் போனதை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். திரைக்கதையின் வடிவம் நாவலின் வடிவத்தோடு கச்சிதமாக ஒன்றிவிட்டது. நாவலிலிருந்து பல சம்பவங்களைத் திரைப்படத்தில் அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். நாவலைத் தமிழில் வாசித்துவிட்டு திரைப்படத்தை மலையாளத்தில் பார்த்ததால் அதன் வசனங்கள் குறித்து எனக்குத் தெரியவில்லை. ஆனால், திரைப்படத்திற்கான தொடக்கம், plot points (நிலக்கூறு, கதைக்கரு), முடிவு அனைத்துமே நாவலிலிருந்து கிடைத்திருப்பது திரைக்கதைக்கு மிகப் பெரிய பலம்.
கறுத்தமாவைக் காதலிக்கும் வேற்றுமத இளைஞன் பரீக்குட்டியாக நடித்திருக்கும் நடிகர் மதுவின் கதாபாத்திரம், தேவதாஸ் கதாபாத்திரத்தை ஞாபகப்படுத்தக் கூடியதாக இருக்கிறது. எப்போதும் தனிமையில் பாட்டு பாடியபடி துயரத்துடன் சுற்றித் திரியும் பரீக்குட்டியாக மிகச் சிறந்த உடல் மொழியை வெளிப்படுத்தியிருக்கிறார் மது. ஆனாலும் திரைப்படத்தைக் கருத்தம்மாவாக நடித்திருக்கும் ஷீலாதான் வேறு தளத்திற்கு இட்டுச் செல்கிறார்.
காதல் தோல்வி அடையும் நாயகர்களை நாம் அதிகம் சினிமாவில் பார்த்துவிட்டோம் என்பது ஒரு காரணம் என்றாலும், தகழி சிவசங்கரப் பிள்ளையும் சரி, பூரம் சதானந்தனும் சரி, கருத்தம்மாவை ஒரு மிக வலுவான, ஆழமான கதாப்பாத்திரமாகச் செதுக்கியிருக்கிறார்கள்! காதல் தோல்வியில் துயரப்படுதல் என்பது ஆண்களுக்கே உரிய பிரத்யேகமான செயலாகக் கருதப்படும் நம் உலகில், கருத்தம்மாக்களின் காதல் தோல்விகளைப் பேசுவது முக்கியம் என்பதைச் செம்மீன் நினைவூட்டுகிறது. காதல் தோல்வியை வெளிப்படுத்துவதற்குச் சுதந்திரமும் சூழ்நிலையும் பெண்களுக்குக் கிடைத்திராத இந்தச் சமூகக் கட்டமைப்பில், ஒரு பெண் தன் சோகத்தை மனத்திற்குள் பூட்டி வைத்துத் துயரப்படும் சித்திரமாகச் செம்மீன் திகழ்கிறது.
நாவலில் கிடைக்காத அனுபவத்தைத் திரைப்படத்தில் ஒளிச்சித்திரங்கள் மூலமாகவும், இசை மூலமாகவும் பெற முடிகிறது. என்னதான் நாவலில் மிகச் சிறந்த வர்ணனைகள் இருந்தாலும், ஒரு கடற்கரை கிராமம் குறித்த தெளிவான காட்சிச் சித்திரத்தைத் திரையில் பார்ப்பது அலாதியான அனுபவமாகிறது! ஏனெனில் தோணியையோ வலையையோ மீன்களையோ நேரில் ஒரு தடவைகூடப் பார்த்திராத ஒருவனுக்கு, வாசிப்பு மூலம் மிகத் துல்லியமான பார்வையை – அது எவ்வளவு சிறந்த எழுத்தாக இருந்தாலும் – அடைவது சிரமமாக இருக்கும் அல்லவா? இந்தக் கோணத்தில் திரைப்படம் நாவலிலிருந்து தனித்துவம் அடைகிறது.
சலீல் சௌதுரியின் பின்னணி இசை, பாடல்கள் எல்லாம் பிரமாதம்! தமிழில் 1970களில் இளையராஜாவின் வருகைக்குப் பிறகே நம் மண்ணின் இசையைத் திரையில் அதிகம் கேட்க முடிந்தது. அதுவரையில் வடக்கத்திய பாணியிலான இசைதான் பரவலாக இருந்தது. ஆனால் 1965ம் ஆண்டிலேயே தெற்கத்திய இசையைத் திரையில் சாத்தியப்படுத்தி இருக்கிறார். வசனங்களுக்கு இடையூறாகப் பின்னணி இசையைப் பயன்படுத்தாமல் மிகக் கச்சிதமாக படத்தில் அதைப் பொருத்தியிருக்கிறார்கள்! உதாரணமாக, திரைப்படத்தின் தொடக்கத்தில் கருத்தம்மாவும் பரீக்குட்டியும் கடற்கரையில் அமர்ந்துபேசிக் கொண்டிருக்கும் காட்சியில், கடலோசையைத் தவிர எந்தப் பின்னணி இசையும் சேர்க்கப்படவில்லை. ஆனால் திரைப்படம் முடியும் தருவாயில் அவர்கள் துயரத்தின் விளிம்பில் சந்தித்துக் கொள்ளும்போது முழுக்க முழுக்க அந்தக் காட்சியை இசையின் மூலமாகவே நகர்த்தி இருக்கிறார்கள். மது மற்றும் ஷீலாவின் சிறந்த நடிப்புடன் இந்த இசை ஒன்றிணையும்போது, அத்துயரத்தின் வலியை நமக்குள்ளும் கடத்திவிடுகிறது.
திரைப்படத்தில் பெண்களின் கற்பு, ஒழுக்கம் குறித்தெல்லாம் மீண்டும் மீண்டும் வரும் வசனங்கள் பிற்போக்குத்தனமாக இருக்கிறது. அவற்றை நாவலில் வாசிக்கையில் அவை அந்தக் கதாபாத்திரங்களின் வாழ்வியலில் ஓர் அங்கமாகவே புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் திரைப்படத்தில் எரிச்சலூட்டுகிறது. இருந்தாலும், பெண்ணின் காதலைத் தனித்துவமாகப் பேசிய கோணத்தில் இன்றளவிலும் செம்மீன் முற்போக்காகத்தான் தெரிகிறது.
நாவலில் கருத்தம்மாவின் தந்தை செம்பங்குஞ்சுவின் வாழ்க்கை பேசப்பட்டிருக்கும் அளவிற்கு அது திரைப்படத்தில் பேசப்படவில்லை. செம்பங்குஞ்சுவின் வாழ்க்கை மூலமாக, அந்த மீனவ கிராமத்தின் ஒட்டுமொத்த வாழ்வியலையும் நாவலில் புரிந்துகொள்ள முடிந்தது. தோணி வாங்கும் லட்சியத்தை நோக்கிய அவரது நகர்வு, அந்த லட்சியத்தை அடைந்ததும் அவர் அடையும் மாற்றங்கள் எல்லாம் திரைப்படத்தில் மேலோட்டமாக இருப்பதாகவே தோன்றியது. ஒரு திரைப்படத்திற்கான சாத்தியங்களையும் புரிந்துகொள்ள முடிகிறது.
செம்பங்குஞ்சுவின் வாழ்க்கை அனுபவங்கள் மூலமாக ஒரு மீனவன் தன் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சிக்கல்கள், அவனது வாழ்க்கை முறை, சமூகத்துடனான அவனது உறவு போன்றவை நாவலில் தரிசனமாகக் கிடைக்கிறது. அவ்வாறே கேரள மீனவ கிராமங்களின் உலகத்தை ஆழமாகப் பதிவு செய்யும் களமாகச் செம்மீன் நாவல் இருந்திருக்கிறது. அதுவே திரைப்படமாக உருமாறும்போது பரீக்குட்டிக்கும் கருத்தம்மாவிற்கும் இடையிலான காதலைப் பிரதானமாகப் பேசும் ஒரு ரொமான்டிக் திரைப்படமாகிறது. ஆனாலும், திரைப்படம் நாவலின் ஒருமித்த மையத்திலிருந்து பெரிய அளவில் விலகவில்லை.
ஒன்றும் அறியாத பிள்ளையாகக் கடற்கரையைச் சுற்றித் திரிந்து கொண்டிருந்த கருத்தம்மாவின் வாழ்க்கையில், பரீக்குட்டி மீதான ஈர்ப்பு ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. காதலன் அல்லாத ஒருவனுடன் திருமணம் செய்து வைக்கப்பட்ட பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகக் காதல் தோல்வியை மறந்து தன்னுடைய குடும்பத்தின் மீது தீராத பாசம் கொள்கிறாள். ஆனால் அதையும் இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ளாமல் அவளுக்கும் பரீக்குட்டிக்கும் இடையிலான பழைய காதலைக் குத்திக் காட்டிக் கொண்டே இருக்கிறது.
பரீக்குட்டியோ, காதல் மயக்கத்தில் ஒரு பெரும் தொகையைச் செம்பங்குஞ்சுவிடம் கடனுக்குக் கொடுத்துவிட்டு ஏமாந்து போவதால் அவனது வாழ்க்கையே ஒன்றும் இல்லாமல் ஆகிறது. செல்வச் செழிப்புடன் வாழ வேண்டியவன் கடைசியில் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகிறான். இன்னொரு பக்கம் ஒரு சாதாரண ஏழை மீனவனாக வாழ்ந்துகொண்டிருந்த செம்பங்குஞ்சு பணக்காரராக வளர்ந்தாலும், பணம் கையில் புரளப் புரள தன் மனிதத் தன்மையை முற்றிலும் இழந்து விடுகிறார்.
இப்படி மாற்றம் ஒன்றே மாறாதது எனும் வாழ்க்கைத் தத்துவத்தை நினைவூட்டும் நாவலின் ஜீவன் திரைப்படத்திலும் இருக்கிறது. நாவல்களில் இருந்து உருவாகிய இந்தியத் திரைப்படங்களில், செம்மீன் இவ்வளவு தூரம் கொண்டாடப்படுவதற்கு அந்த ஜீவன் தான் முக்கிய காரணம்!
படங்கள்: படியெடுத்தல்
எழுத்தாளரைப் பற்றி
அதியன் நல்ல இலக்கியங்கள், சினிமாக்கள், இசை போன்றவை மீது பிரியம் கொண்டவன். அபுனைவுகளில் அரசியலையும் வரலாற்றையும் வாசிப்பதில் ஈடுபாடு உண்டு. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” கூற்றுப்படி எந்தவித அடையாளங்களுக்குள்ளும் தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல் வாழ விரும்பிகறவன்.