ஜகாட் – வாழ்க்கையை உரையாடுதல்

கே.பாலமுருகன் மலேசிய தமிழ் சினிமாவையும், ஜகாட் திரைப்படத்தின் தாக்கத்தையும், 1990களின் மலேசியாவில் தனது பால்யத்தையும் தொடர்பு படுத்தி எழுதியுள்ளார்.

6 min read

Read this article in English here.


மலேசிய சினிமா ஒரு பார்வை

2016ல் மலேசியத் திரைப்பட விழாவில் பெரும் சர்ச்சைக்குப் பிறகு முதன் முறையாக மலேசியாவின் சிறந்த படமாக ஒரு தமிழ்ப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது மலேசிய மண்ணில் ஓர் உள்ளூர்த் தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த வரலாற்றுப்பூர்வமான அங்கீகாரமாகும். அதுவரை மலேசியத் தமிழ் சினிமாவிற்கான எதிர்காலம் குறித்தும், விற்பனை வாய்ப்புகள் குறித்தும் ஐயம் கொண்டிருந்த பல இளம் இயக்குனர்களின் எண்ணங்களைத் திறந்துவிட்ட சாதனை ஜகாட் (2015) திரைப்படத்தையே சாரும்.

மலேசிய சினிமாவைப் பொறுத்தவரை யஸ்மின் அமாட், அமீர் முகமத் போன்றவர்கள் மலாய் சினிமாவின் ஆளுமைகளாக அறியப்பட்டதோடு, அவர்களின் படங்கள் உலகத் திரைப்பட விழாக்களில் கவனமும் பெற்றுள்ளன. யஸ்மின் அமாட் அவர்களின் திரைப்படமான செப்பேட் 2009ஆம் ஆண்டிலேயே உலகத் திரைப்பட விழாக்களில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவரது சினிமா அரசியல் ரீதியில் கட்டியெழுப்பப்பட்ட புனிதங்களை உடைத்து மீண்டும் அதையே இன்னொரு புனிதச் செயல்பாடாக மாற்றுவதால் தீவிர விமர்சனத்திற்கும் உள்ளாகின்றது. சினிமாவும் விமர்சனத் துறையும் இணைந்தே வளர்வது அசாத்தியமான வெளிப்பாடு. அது மலேசிய மலாய்ச் சினிமாத்துறையில் சாத்தியமானது.

அதே போல சீன சினிமாக்களும் தொழில்நுட்ப ரீதியிலும், கதைத் தேர்வுகளிலும் பல மாற்றங்களை அடைந்துள்ளது என்றே சொல்லலாம். சமீபத்தில் வெளிவந்த The Journey திரைப்படம் மலேசிய சினிமா வசூலை முறியடித்திருக்கிறது. சீனக் கலாச்சார வாழ்வைக் காட்டியிருப்பதோடு அதனை உடைத்து மீறி வெளிப்பட முடியும் என்ற சாத்தியத்தையும் படம் பேசுகிறது. யஸ்மின் அமாட் உருவாக்கி வைத்திருக்கும் கலைப்படம் என்கிற மாயையை இப்படம் தன்னுடைய நுண்ணரசியலால் மிஞ்சி நிற்கிறது என்றே சொல்ல முடிகிறது.

பிரகாஷ் ராஜாராம் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிற இரவுகள் படமும் மலேசியத் தமிழ்ச் சூழலில் மாற்று முயற்சிகளுடன் வெளிவந்த முதல் முழு நீளப் படமாகும். அதன் வழியில் இளம் இயக்குனர் சஞ்சய் குமார் அவர்கள் மலேசிய அரசியல், பண்பாடு, கலை குறித்தான தீவிரமான புரிதலுடன் தனது முதல் சினிமாவை இயக்குகிறார். அச்சினிமா மலேசியாவில் அனைத்து மொழிகளிலும் அவ்வருடத்தின் சிறந்த படமாகத் தேர்வாகிறது. அதற்கு அனைத்து மொழி சினிமா ஆளுமைகளும் ஆதரிக்கிறார்கள் என்றால் ஜகாட் அப்படி என்ன சொல்ல முனைந்துள்ளது?

ஜகாட் – குறும்படமும் திரைப்படமும்

முதலில் குறும்படமாக இயற்றப்பட்ட ஜகாட் தான் 2016ஆம் ஆண்டில் முழு நீளப் படமாக இயக்கி வெளியிடப்பட்டது. நவம்பர் 1978களில் பங்கோர் தீவில் சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலில் கால் பதிக்கும் ஓர் இளைஞன், மறு வருடமே இந்தோனேசியா மலேசியா கடல் எல்லையில் மீன்களின் வழியாக ஆயுதம் கடத்தும் கும்பலின் தலைவனாக மாறும் இச்சமூகத்தின் ஒரு குற்றவாளியின் குறுங்கதைதான் ஜகாட் குறும்படம். குறும்படத்தில் குண்டர் கும்பலின் தலைவனாக இருந்தவனின் தம்பியின் வாழ்க்கையில் நிகழும் சில திருப்பங்களே ஜகாட் திரைப்படம் என்பதைப் போல சஞ்சய் கதையை மறுவடிவமைப்பு செய்துள்ளார். ஜகாட் குறும்படத்தில் நடித்த செந்தில் குமரன் முனியாண்டி, ஜகாட் திரைப்படத்தில் அனைத்து கள்ளக் கடத்தல், குண்டர் கும்பல் போன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகி வாழும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இரண்டுமே மலேசிய இந்திய வாழ்வின் இருண்ட பகுதிகளைத் தொட்டு விமர்சிக்கின்றன.

ஜகாட் திரைப்படம் மேலும் ஆழமாகச் சென்று, குண்டர் கும்பலில் இருந்து கொண்டு தான் ஒடுக்கப்படுவதை எண்ணி அக்குழுவிலிருந்து மீண்டு வெளியேறும் ஓர் இளைஞனில் தொடங்கி, அதே நிலையில் கல்வியில் நிகழும் புறக்கணிப்புகளின் காரணமாக வெறுமையடையும் ஒரு சிறுவன் குண்டர் கும்பல் அளிக்கும் சொகுசான ஆறுதல்களுக்கு அடிமையாவதைப் போல முடிவடையும். இருவர் வாழ்வில் நிகழும் திருப்பங்களே ஜகாட் திரைப்படத்தின் மையப் புள்ளி.

தனியனின் உரையாடல்

கடவுள் நம் குற்றங்களை மன்னிக்கலாம் – ஆனால் மனிதர்கள் உருவாக்கிய நியதிகள் அவ்வாறு மன்னிப்பதில்லை.

– வில்லியம் ஜேம்ஸ்

ஓர் ஒதுக்குப்புறமான உணவகம். அரை இருள் எங்கும் பரவியிருக்கிறது. எந்தப் போலியான ஒப்பனையும் இல்லாத உண்மையான இரு மனிதர்கள். மது அருந்தியவாறே உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உரையாடலிலிருந்து காட்சிகள் இன்னொரு வாழ்க்கைக்குள் இழுத்துக் கொண்டு போகின்றன. இன்னும் சொல்ல‌ப்போனால் ஜகாட் உரையாட‌ல் வ‌ழியே வாழ்வை அறிமுக‌ப்ப‌டுத்தும் குறும்ப‌ட‌ம்.

உண்மை மிகவும் அந்தரங்கமானது. உண்மையின் எந்தத் தரிசனத்தையும் கண்டடைய முடியாதவர்கள் தனது தோல்வியை நம்பிக்கைகளாகவும் தத்துவங்களாகவும் மாற்றி வாழ்நாள் முழுக்க மனக்குழப்பத்திலேயே இருக்கிறார்கள். ஜகாட் படைப்பில் வரும் அந்த வயதானவர் தொடர்ந்து தனக்கு முன் இருப்பவனுடன் உரையாடிக் கொண்டே இருக்கிறார். உண்மையில் அவர் நடத்தும் அந்த உரையாடல், மனக்குழப்பத்தின் உச்சத்தில் இருக்கும் தனக்கும், தன்னைப் புரிந்துகொள்ளாமல் எதை எதையோ தேடி அலைந்த தனது கடந்த காலத்திற்கும் இடையில் நடைபெறும் உரையாடலாகவே பார்க்க முடிகிறது.

எது குற்றம் என்பதைப் புரிந்துகொள்வதைவிட யார் அதைச் செய்தார்கள் என அடையாளம் காட்டுவதிலும், அவர்களுக்குத் தண்டனை வழங்குவதிலும் பழக்கமாகிவிட்ட சமூகத்தின் நியதிகளுக்கு முன் வைக்கப்படும் ஓர் உரையாடல்தான் சஞ்சய் பெருமாளின் இந்த ஜகாட் ஆகும்.

“இன்று நீ உண்மையாக நினைத்துக்கொண்டிருப்பது நாளை பொய்யாகலாம், இன்று நீ பொய்யென நினைத்துக்கொண்டிருப்பது நாளையே உண்மையாகிவிடக்கூடும். ஒரு நொடியில் நீ வாழ்ந்த வாழ்க்கையே பொய்யாகிவிடும்” இந்த வசனம் மிகவும் பயங்கரமானதும் நிதர்சனமானதும்கூட. எது நிரந்தர உண்மை, எது நிரந்தரப் பொய் என்பதை ஆராயாமல் தனக்குப் பிடித்தமான வாழ்வை வாழ்வ‌தன் மூலமே ஒருவனின் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும் என்கிற ஒரு கட்டமைப்பைத் தருகிறார்.

“ஒருவனைக் கெட்டவன் என அடையாளம் காட்டிவிட்டுத்தான் இன்று பலர் தங்களை நல்லவர்கள் எனச் சொல்லித் திரிகிறார்கள். அவர்கள் வெள்ளையாகத் தெரிவதற்கு நம்மைப் போன்ற கருப்பர்கள் தேவை” என்கிற உரையாடலின் வழி சமூகம் விதித்து வைத்திருக்கும் நல்லவர்களுக்கான புனிதங்களின் பின்னணியில் அழுத்தமாகப் புகுத்தப்பட்டிருக்கும் அடையாள அரசியலைத் தகர்த்துவிட்டு, மாற்றுப் புனிதத்தை மீட்டெடுக்கிறார்.

1980களில் ஒரு பெரிய கடத்தல் கும்பலின் தலைவராகவும் சண்டியர்த்தனம் செய்துகொண்டும் வாழ்ந்தவர்தான் அவர். இப்படியொரு சட்டத்திற்கு எதிரான கும்பலாக வளர்ந்து நிற்பதால், எல்லா சூழ்நிலையும் தனக்கு முரணாகத்தான் இயங்குகிறது என்கிற பதற்றம் உருவாகிவிடுகிறது. இதுவே எல்லாரின் மீதும் சந்தேகத்தையும் ஏற்படுத்திவிடும். அந்தச் சந்தேகம் அவரைக் கொலைகாரனாக மாற்றிவிடுகிறது. தன் மனநிலை சார்ந்தே அவர் த‌ன‌க்கான‌ உலகை உற்பத்தி செய்துகொள்கிறார். இப்பொழுது வயதாகிவிட்டவ‌ர் அந்த உலகத்திலிருந்தே பேசிக்கொண்டிருக்கிறார். ஆகையால் இது முற்றிலும் ஒரு தனியனின் உரையாடல்.

உலகின் பெரும்பாலான உரையாடல்களிலும் தத்துவச் சாரங்கள் இருந்தாலும் அதனுள் மிகவும் பத்திரமாக ஒளித்து வைக்கப்பட்டிருப்பது ஒரு தனிமனிதனின் தனிமையின் சேகரிப்பாகத்தான் இருக்கும்.

நா.முத்துகுமாரின் ஒரு வரி ஞாபகத்திற்கு வருகிறது, “தீயோடு போகும்வரையில் தீராது இந்தத் தனிமை.” அந்தத் தீராத தனிமைக்குள்ளிருந்துதான் அவன் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருக்கிறான், “வெளிச்சத்திற்குப் பின்னாடி இருக்கும் இருளை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.”

இந்தப் பிரபஞ்ச முழுமையை எப்படிப் பார்க்கிறீர்களோ அப்படித்தான் உங்கள் வாழ்வு அமையும்.

– ஓஷோ

ஜகாட் உரையாடலில் இந்த மாபெரும் பிரபஞ்சத்தின் இருளில் சூரியன் தற்காலிகமான வெளிச்சத்தை மட்டுமே கொடுக்கிறது என்கிற வசனம் வரும். மனிதன் கொள்ளும் நிரந்தரமான தனிமைக்கு முன், அவனைச் சார்ந்து தற்காலிகமாக வந்து முளைக்கின்றன பல்வேறான உறவுகள். ஒவ்வொரு உறவின் மூலமும் அவன் கொள்ளும் அன்பும் பகிர்வும் அவ‌னுக்கான தனிமையை மறைத்து வைக்க முயல்கின்றன. ஆனால் மீண்டும் ஒரு காலகட்டத்தில் அந்தத் தனிமை நிரந்தரமான இருளைப் போல வந்து கவ்விக்கொள்கிறது. எல்லா வசனங்களுக்குப் பின்னாலும் ஏதோ ஒரு தத்துவத்தின் தாக்கத்தைச் சொல்லிக் கொண்டே போயிருக்கிறார் இயக்குந‌ர்.

நானும் ஜகாட்டும்

நானும் 1990களில் சிறுவனாக வளர்ந்தவன் என்பதால் ஜகாட் குறும்படத்தைத் திரைப்படமாகப் பார்க்கும்போது பல இடங்களில் என்னைப் படத்துடன் இணைத்துக் கொள்ள முடிந்தது. எனக்கும் இப்படத்தில் வரும் பல காட்சிகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஜகாட் என் வாழ்க்கையின் சில பகுதிகளை மீட்டுத் தருகிறது. எந்தக் கலப்படமும் இல்லாமல் ஷங்கரும் நானும் பல இடங்களில் ஒத்துப்போகிறோம்.

1995-96ல் நான் வாழ்ந்த கம்பத்தை அப்படியே பெயர்த்தெடுத்துக் காட்சிப்பூர்வமாக்கிக் காட்டுகிறார் இயக்குனர் சஞ்சய். அவர் தேர்ந்தெடுத்த கதைக்கான களங்களும் கதாபாத்திரங்களும் காலகட்டத்திற்கு ஏற்ப பொருந்தி நின்று நிஜமாகத் தெரிகின்றன. அக்காலகட்டத்தில் வீடுகளில் WWF குத்துச் சண்டை பிரசித்திபெற்றிருந்ததால் பள்ளிக்கூடத்தில் நாங்களும் அதனையே செய்யத் துணிந்தோம்.

பள்ளிக்கூடத்தில் நாங்கள் பணம் கட்டி சண்டை போடுவோம். அதற்கென்று ஒருவன் இருப்பான். அவன் உருவத்தில் பெரியதாக இருப்பதால் அவனிடம் சண்டையிட எல்லோரும் பயப்படுவார்கள். யாருமே சண்டையிடத் தயாராக இல்லாததால், அவனுக்குள் தன்னை நிரூபிக்க முடியாத அச்சம் தொற்றிக் கொண்டதன் விளைவுதான், அவன் தலைமையிலேயே பிறர் சண்டையிடும் போட்டியை அவனே அறிமுகப்படுத்தினான்.

ஆளுக்கு 20 சென் செலுத்திவிட்டுச் சண்டையிட வேண்டும். வெற்றி பெற்றவனுக்கு 30 சென், சண்டையை வழிநடத்தியதற்கு 10 சென் எனப் பிரிக்கப்பட்டது. நிறைய முறை இதனால் நான் கேலிவதைக்கு ஆளாகியுள்ளேன். உடலால் பலம் கொண்டவன் நம்மைத் தோற்கடித்துவிட்டு நீ இந்த உலகத்தில் எதற்குமே இலாயக்கற்றவன் எனச் சொல்லிச் சிரிக்கும்போது ஏற்படும் கோபமும் வெறுப்பும் இவ்வளவுதானா வாழ்க்கை என்கிற சலசலப்பை மனத்திற்குள் உண்டாக்கும். ஜகாட்டில் வரும் சங்கருக்கும் அதே நிலைதான்.

சங்கர் தன் குடும்பத்துடன் வசித்த அதேபோன்ற கம்பத்து வீட்டில்தான் நானும் இருந்தேன். அக்கதையில் வருவதைப் போல எனக்கும் மாமாவின் நண்பர் மூர்த்தி அவர்களின் அன்பும் நட்பும் கிடைத்திருக்கிறது. அவரும் ‘கேங் சண்டையில்’ சில முறை காவல் துறையால் கைதானவர்தான். இப்படி ஜகாட் காட்டும் 1990களின் வாழ்க்கை அப்படியே எனக்குள் பதிவாகியிருக்கும் மற்றொரு வாழ்க்கையை மீட்டுக் கொடுக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

ஜகாட் திரைப்படத்திற்கும் நான் 2014ஆம் ஆண்டு எழுதிய ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்1 குறுநாவலுக்குமே நெருங்கிய தொடர்புண்டு. மானசீகமான இரு படைப்புகளும் மலேசிய இந்திய வாழ்வின் பேசப்படாத குற்றவியல் பகுதிகளைத் தொட்டு அலசுகின்றன. என்னுடைய குறுநாவல் வெளியீட்டில் இயக்குனர் சஞ்சய் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். காட்சிகளின் ஊடாக அவரும், எழுத்தின் ஊடாக நானும் சந்திக்கும் புள்ளி இதுவரை தமிழ் இலக்கியங்கள் அதிகம் ஆழப்படுத்திப் பேசாத இந்திய வாழ்வின் நெருக்கடிகளுக்கும், குற்றச் செயல்களில் தொய்ந்துபோன ஆழ்மனங்களில் புதைந்துகிடக்கும் கல்வி, அரசியல், கலை என்கிற ரீதியில் மறுக்கப்பட்ட, புறக்கணிப்புகளின் வேர்களையும் நோக்கியதே.

நானும் அ.பாண்டியனும் ஒருமுறை பறை இதழுக்கு நண்பர் சஞ்சய் அவர்களை விரிவான நேர்காணல் செய்திருக்கிறோம். சஞ்சய் சினிமாவின் மீது வைத்திருக்கும் ஆவலும் சிந்தனையும் முற்றிலுமாக மாறுபட்டதாகவே இருந்தது. குறிப்பாக, எந்தச் சாயலும் இல்லாத, முழுக்க மலேசியாவைச் சார்ந்த சினிமாவைப் படைக்க வேண்டும் என்ற அவருக்கிருந்த திட்டமே அவரின் மீது ஈடுபாட்டை அதிகமாக்கியது. தமிழ்நாட்டு இலக்கியத்தைப் போல போலித்தனம் செய்யாத மலேசியப் பின்புலத்துடன் இலக்கியம் படைக்கப்பட வேண்டும் என விமர்சித்துக் கொண்டிருந்த எனக்கும், சிவா, பெரியண்ணன், பாண்டியன் போன்றவர்களுக்கும் அவருடைய எதிர்பார்ப்புடன் ஒன்றிட முடிந்தது.

ஒளிச்சித்திரங்களின் மொழி சினிமா

ஜகாட் படப்பிடிப்பின் போது

சினிமா ஒளிச்சித்திரங்களின் நகர்வு என்று சத்யஜித் ரே ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார். ஜகாட் திரைப்படம் காட்சிகளின் வழியாக இச்சமூகத்துடன் உரையாடுகிறது. வானொலியில் முன்னாள் பிரதமர் துன் மஹாதீர் மலேசியப் பொருளாதாரத்தில் சமூகங்களுக்கிடையே பேதமில்லாத ஒரு நிலை இருப்பதைப் போன்று ஒரு செய்தி ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும். அப்பொழுது மலேசியாவின் பொருளாதாரத் திட்டங்கள் அனைத்தும் இந்தியர்களையும் முழுமையான ஏழ்மை நிலையிலிருந்து முன்னேற்றிக்கொண்டிருப்பதாக முன்னாள் ம.இ.கா தலைவர் ச.சாமிவேலு கூறியதாகச் செய்தி சொல்லப்படும். அந்த வேளையில் ஷங்கரின் அப்பா தனது காற்சட்டைக்கு நெகிழிக் கயிற்றை எடுத்துக் கட்டிக் கொண்டிருப்பார்.

ஒரு நாட்டில் அரசியல் இயலாமைகளை இத்தனை கூர்மையான ஒரு காட்சியின் வழி விமர்சிக்கும் ஆற்றலையே சினிமா என்கிற கலை வழங்குகிறது. இதற்கு எந்த வசனமும் விளக்கமும் தேவையிருக்காது. ஒரு காட்சியை வெறும் காட்சியாக மட்டுமே தாண்டிவிட முடியாது என்பதற்கான ஓர் அனுபவத்தைப் படம் வழங்குகிறது.

தொலைக்காட்சி பார்க்கக்கூடாது என்கிற விதிமுறை 1990களில் எல்லா வீடுகளிலும் இருந்திருக்கலாம் போல. என் வீட்டிலும் அப்படியொரு விதி இருந்தது. இரவில் எல்லோரும் வீட்டின் வரவேற்பறையில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்க, நான் மட்டும் எனது அறையில் வீட்டுப்பாடங்கள் செய்து கொண்டிருப்பேன். அப்பொழுது பலகை வீட்டில் இருந்ததால் தொலைக்காட்சியின் சத்தம் கூர்மையாகக் கேட்கும்.

கதவின் இடுக்கில் தெரியும் இலேசான சந்தில் திருட்டுத்தனமாகத் தொலைக்காட்சி பார்த்து மகிழ்ந்த தருணங்களை சஞ்சய் தன் ஜகாட் படத்தில் வைத்த காட்சியின் மூலம் 1990களை மீண்டும் நினைவூட்டுகிறார். அப்பா வீட்டுக்கு வந்ததும் ஷங்கர் தான் பார்த்துக் கொண்டிருந்த தொலைக்காட்சியை அடைத்தாலும், அதனைத் தொட்டுப் பார்த்து அதில் இருக்கும் சூட்டின் வழி உண்மையை அறிகிறார். அக்காட்சிகள் வாழ்க்கைப்பூர்வமானதாக இருக்கின்றன.

பக்தர்கள் சிலர் பால் குடமும் காவடியும் ஏந்திக் கொண்டு ஷங்கரின் வீட்டைக் கடக்கும்போது கேமரா கையாளப்பட்ட விதமும் சினிமாவுக்குரிய அழகியலைச் சேர்க்கிறது. ஒரு வாழ்வின் மீதான நம் தரிசனத்தையும் அதற்குரிய இடத்தையும் சினிமாவைப் பொறுத்தவரை கேமராதான் தீர்மானிக்கிறது. அதனை ஒளிப்பதிவாளர் செந்தில் குமரன் முனியாண்டி சிறப்பாகச் செய்திருக்கிறார். காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒளியும் காலக்கட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கச்சிதமாகக் கையாளப்பட்டுள்ளது. ஷங்கரின் வீட்டினுள்ளே பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒளி அப்படியே என் வீட்டின் 1990ஆம் ஆண்டுகளை ஞாபகப்படுத்துகின்றது. இருப்பினும் ஒளியின் மீது மேலும் கூடுதலான கவனம் செலுத்தியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. சில காட்சிகளில் வரும் அதிக வெளிச்சம் சட்டென கதையைத் தற்போதையைச் சூழலுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது.

ஜகாட் திரைப்படத்தின் ஓர் ஒளிச்சித்திரம். ஜகாட் குறும்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஒளிப்பதிவாளர் செந்தில் குமார் முனியாண்டி, இப்படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

தண்டனைகளும் தோல்வியும்

ஜகாட் முழு நீளத் திரைப்படத்தில் வரும் முதன்மைக் கதாபாத்திரமான ஷங்கர் என்பவன் மாற்றுத்திறமை கொண்டவனாக இருக்கிறான். பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டுச் சிந்திப்பவனாகப் படைக்கப்பட்டிருக்கிறான். 12ஆம் வாய்ப்பாட்டைத் தாண்டினால் கூட அது வயதிற்கும் பாடத்திட்டத்திற்கும் உகந்தது அல்ல என அவன் ஆளுமையைக் கட்டுப்படுத்தும் சராசரிகளிலிருந்து அவனுக்குரிய அங்கீகாரம் கிடைக்காமல் தண்டிக்கப்பட்டு அமைப்புக்கு வெளியே வீசப்படுகிறான்.

ஷங்கர் தன்னை அடையாளம் காண முடியாமலேயே கல்விக் கொள்கைக்கு முன் தோல்வியைத் தழுவுகிறான். அவனுடைய விசித்திரமான மாற்று முயற்சிகளை அங்கீகரிக்கக் கல்வி உலகம் தயாராக இல்லை என்பதாலேயே அவனுடைய உலகம் சுருங்கிவிடுகிறது.

அவனுடைய அப்பா ஒரு பக்கமும், ஆசிரியர்கள் ஒரு பக்கமும் அவனை ஊதி ஊதி உப்பச் செய்கிறார்கள். யாரும் எதிர்பாராத நேரத்தில் ஷங்கர் என்கிற அழகான வர்ணத்திலான பலூன் வெடித்துச் சிதறுகிறது. இந்த நாடு வேண்டாமென்று ஒதுக்கியிருந்த கிரிமினல் உலகத்தில் வெடித்து விழுகிறான். சஞ்சய் தவறாமல் தன்னுடைய விமர்சனத்தைக் கல்வியின் மீதும் வைக்கிறார். இந்த நாட்டில் உருவாகியிருக்கும் பல குற்றவாளிகளின் வேர்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் விழுமியங்களின் வீழ்ச்சிகளிலிருந்து ஓர் ஒற்றைக் குரலை உருவியெடுக்கிறார் சஞ்சய். அது துப்பாக்கிச் சத்தமாக மலேசியத் தமிழ்ச்சினிமாவில் வெடிக்கிறது.

குறிப்புகள்

  1. ஆப்பே கடை: மலேசியாவில் சீனர்கள் ‘ஆப்பே’ என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் நடத்தும் உணவகங்களை ‘ஆப்பே கடை’ என்று சொல்வது வழக்கம். http://www.singlishdictionary.com/

நன்றி: வல்லினம்.காம், கே.பாலமுருகன் இணையத்தளம்

படங்கள்: படியெடுத்தல்


எழுத்தாளரைப் பற்றி

மலேசிய இலக்கியச் சூழலில் கடந்த 13 ஆண்டுகளாகத் தீவிர இலக்கியத்தில் படைப்பு, இதழியல் என இயங்கி வரும் மலேசிய இளம் படைப்பாளி கே.பாலமுருகன். அநங்கம் என்கிற சிற்றிதழை மூன்றாண்டுகள் நடத்தி பல இளம் படைப்பாளர்களை அறிமுகமும் செய்து வைத்தார். தற்சமயம் களம் என்கிற இலக்கிய இணைய இதழை ஒருங்கிணைத்து வருகிறார். சிறுகதை, நாவல், கவிதை, சினிமா என இதுவரை 11 இலக்கிய நூல்கள் எழுதியுள்ளார். மலேசியாவில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வரும் கே.பாலமுருகன் இலக்கியத்தில் கரிகாற் சோழன் விருது, எம்.ஏ இளஞ்செழியன் விருது, சி.கமலநாதன் விருது, சிறந்த கெடா மாநில எழுத்தாளர் விருது, சிறந்த சாதனை இளைஞன் விருது போன்றவற்றையும் பெற்றுள்ளார். தனது சொந்த இணைய தளத்தில் எழுதி வரும் கே.பாலமுருகன் சினிமா மற்றும் இலக்கிய விமர்சகரும்கூட.

Did you like what you read? Support us as we explore film cultures from around the world; experience cinema in new ways with us. Let us keep The World of Apu free for all!

Become a Patron!