Read in English here.
விஸ்வநாதனிடம் ஒரு நிழற்படக்கதை கேட்டிருந்தோம். சினிமா, திரையரங்குகள் மற்றும் அவரது அனுபவங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமென்று கூறினோம். இந்தியாவின் தென்முனையில் இருக்கும் நாகர்கோவிலுக்கும், பரபரப்பான சென்னை நகருக்கும் இடையிலான ஒரு வாழ்க்கைப் பகிர்தல். இவரது புகைப்படங்கள் திரையரங்குகளுக்கு உள்ளும் புறமும் நிகழ்ந்த பிறிதொரு வாழ்க்கைக் கதையை நமக்குச் சொல்கின்றன.
திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் டிஜிட்டல் சர்விஸ் நிறுவனங்களுக்கும் இடையிலான பிரச்சனை காரணமாக, தமிழ்நாட்டில் திரையரங்குகள் அனைத்தும் 48 நாட்கள் மூடப்பட்டிருந்தன. அந்நாட்களில் எடுக்கப்பட்டவைதான் இந்தப் புகைப்படங்கள்.
ராஜா பாலஸ், நாகர்கோவில்
ஏப்ரல் 8, 2018
பள்ளிக்கூடத்திற்குச் செல்லாமல் ராஜபாட்டை திரைப்படம் பார்க்கச் சென்றது இங்குதான். முன்வரிசைகள் ஒரே தூசியும் குப்பையுமாக நிரம்பி இருந்தன. இரண்டாம் வகுப்பு நுழைவுச்சீட்டு வாங்கும் பலர், முதல் வகுப்பு இருக்கையில் அமர்ந்து படம் பார்ப்பதற்காகத் தாவி இடம் மாறி உட்காருவது அன்றைய வழக்கமாக இருந்தது. (இருக்கை எண்கள் கிடையாது.) ஜில்லாவும் இங்கேதான் பார்த்தேன். அஜித் – விஜய் ரசிகர்களுக்கு இடையே மோதல் எழுந்து, செருப்புகளையும் பாட்டில்களையும் வீசத் தொடங்கினர். கதாநாயகன் அறிமுகப் பாடலின்போது யாரோ ஒருவர் பட்டாசு கொளுத்திப்போட, திரை சற்று சேதமடைந்தது.
ஸ்ரீ கார்த்திகை திரையரங்கு, நாகர்கோவில்
ஏப்ரல் 8, 2018
ஊரில் இருக்கும் ஏழு திரையரங்குகளில் இதுவும் ஒன்று. எந்திரன் திரைப்படத்திற்கு நுழைவுச்சீட்டு வாங்குவதற்கு நீண்ட வரிசையில் நின்ற நினைவிருக்கிறது. ஊரின் மத்தியில் இருந்தாலும், இத்திரையரங்கைக் காலியாகப் பார்ப்பது ஆச்சரியமாக இருந்தது. இந்தப் புகைப்படம் எடுக்கும் போது ’கருப்பன்’ திரையிடப்பட்டிருந்தது.
ராஜேஷ் திரையரங்கு, நாகர்கோவில்
ஏப்ரல் 8, 2018
ஹாலிவுட் திரைப்படங்களுக்கானது என்று அறியப்படும் இத்திரையரங்கு முதன் முதலில் காற்றுப் பதனப்படுத்தப்பட்ட அரங்கும் ஆகும். இத்திரையரங்கின் நினைவுகளாக எனக்குள் இருப்பவை விஜய் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் வைக்கப்படும் பெரிய பேனர்களும் கட்டவுட்டுகளும்தான். சமீபத்தில் அதைக் கடக்கும்போது ஏ குவையட் பிளேஸ் (A Quiet Place) திரையிடப்பட்டிருப்பதைக் கண்டேன்.
பயனீர் முத்து பாலஸ், நாகர்கோவில்
ஏப்ரல் 8, 2018
நாகர்கோவிலில் நான் இதுவரை திரைப்படம் பார்க்காத ஒரே திரையரங்கு இதுதான். இங்கு வெளியாகும் படங்கள் பெரும்பாலும் ’ஏ ரேட்டிங்’ படங்கள். அதிக ஆள் நடமாட்டமில்லாத திரையரங்கு.
தங்கம் திரையரங்கு, நாகர்கோவில்
ஏப்ரல் 8, 2018
என் தம்பியோடு இங்கு மங்காத்தா பார்த்த அந்த இரவு இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. படம் ஓடிக் கொண்டிருக்கையில் திடீரென்று கதவுகள் திறக்கப்பட்டு, வெளியே நீளிருக்கைகள் இடப்பட்டன. சுமார் இருபது பேர் தரிவெளியிலிருந்து படம் பார்க்கத் துவங்கினர். அஜித்தின் பல படங்கள் இங்கு வெளியிடப்பட்டன. நாகர்கோவிலில் ஏழு திரையரங்குகள் இருந்தாலும் தங்கம் திரையரங்கு மட்டுமே அஜித் படங்களை வெளியிடுகிறது. அதன் உரிமையாளர் அஜித் ரசிகராக இருக்கலாம்.
உதயம் திரையரங்கு, சென்னை
மார்ச் 21, 2018
இது சென்னையின் ஒரு நில அடையாளக்குறி. பேருந்து ஓட்டுநர்கள்கூட அசோக் நகரை “உதயம் தியேட்டர்” என்றுதான் குறிப்பிடுவார்கள். இருபது வருடங்களுக்கும் மேலாக சென்னை மக்களின் வரப்பிரசாதமாக இருந்து வரும் இத்திரையரங்கின் உட்புற வடிவமைப்பு 90-களை நினைவூட்டுவதாகவே இருக்கிறது. இதை “பட்ஜெட் தியேட்டர்” என்றும் அழைப்பர். நவீனத் திரையரங்குகளுடன் ஒப்பிடும்போது இதன் நுழைவுக்கட்டணம் மிகவும் குறைவு. நாச்சியார் மற்றும் கலகலப்பு 2 ஆகிய படங்கள் தற்போது திரையிடப்பட்டிருக்கின்றன.
ஏ.வி.எம் திரையரங்கு, சென்னை
மார்ச் 21, 2018
நான் சென்றபோது இங்கு பில்லா திரையிடப்பட்டிருந்தது. தரிவெளியில் சில பைக்குகளே தென்பட்டன. பிற திரையரங்குகளின் பாதுகாவலர்களைப் போல ஏ.வி.எம்மின் பாதுகாவலர் என்னை விரட்டவில்லை. நான் புகைப்படங்கள் எடுப்பதைத் தொடர்ந்தேன்.
நிழற்படம் எடுத்தவரை பற்றி
விஸ்வநாதன் பெரும்பான்மை தென்னிந்தியர்களைப் போலவே பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, கையில் கேமராவை ஏந்தி மாறுபட்ட பாதையில் தன் தொழில் பயணத்தைத் தொடங்கினார். தனது புகைப்படங்கள் மூலம் நுட்பமாகவும் வேடிக்கையாகவும் கதைகள் சொல்வதில் விருப்பமுள்ளவர். பார்வையாளர்களும் கலைஞரை ஒத்த அறிவுத்திறன் வாய்ந்தவர்கள் என்ற நம்பிக்கை கொண்டவர்.