Read in English here.
தமிழ் சினிமாவில் அனைத்து துறைகளிலும் மறுகற்பிதம் வேண்டும் என்றாலும், மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையில் இருப்பவை சினிமாவின் வடிவமும் மொழியும்தான். சினிமாவைக் கற்க முயற்சிப்பவர்களை இது மிகப்பெரிய தேக்க நிலைக்குள் தள்ளும் அபாயம் உள்ளது. கடந்த வருட இறுதியில் பார்க்க நேர்ந்த அற்புதமான சுயாதீன தமிழ் சினிமா விஜய் ஜெயபால் இயக்கிய ரெவலேஷன்ஸ் (Revelations). சினிமாவின் சாத்தியங்களை விரிவாக்கும் படைப்புச்சூழல் உருவாகும் என்ற புதிய நம்பிக்கையை உயிர்த்தெழச் செய்திருக்கிறது. வடிவ நேர்த்தியோடும், சிந்தனை மற்றும் சிக்கலான உளவியல் தேர்ச்சியோடும் படைக்கப்பட்டிருந்தது ரெவலேஷன்ஸ்.
படத்திற்கான திரைமொழியை உருவாக்குவதில் இயக்குனர் பெரும் பங்கு வகித்தாலும், அனைத்து துறைகளின் பங்கும் அவசியமாகிறது. ஒவ்வொரு படத்திற்கான திரைமொழியும் தனித்துவமானது. பொது விதிகள் ஏதும் இல்லை. ரெவலேஷன்ஸ் படத்திற்கான திரைமொழி – ஒளிப்பதிவு, எடிட்டிங், நடிப்பு என – பல்வேறு தளங்களில் அடுக்கடுக்காகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஒளிப்பதிவின் மூன்று முக்கிய கூறுகள் – ஃபிரேமின் உள்ளடக்கம் (composition), கேமராவின் நகர்தல், ஒளியைக் கட்டுப்படுத்துதல். இவற்றிற்கு ஒரு மைய வடிவம் (central theme) உருவாக்கப்பட்டு, படம் முழுக்க தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படுள்ளது. ஒவ்வொரு ஃபிரேமும் (frame) பலவகையான வரை வடிவங்களைக் (geometrical shapes) கொண்டு நிரப்பப்பட்டிருக்கிறது. ஜன்னல்கள், கதவுகள், சுவர்களின் மூலைகள், கட்டிடங்களின் வடிவங்கள், ஏன் குறுக்கே செல்லும் மின் கம்பிகள்கூட பல வடிவங்களை உருவாக்குவது அழகு. படத்தில் வரும் கொல்கத்தா வீட்டு மாடியில் குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும் குட்டிச் சுவர்களும், வீட்டின் முற்றத்தைச் சுற்றி இருக்கும் பால்கனியின் தடுப்புகளும் கேமராவின் ஒவ்வொரு ஃபிரேமிலும் வெவ்வேறு வடிவங்களாகக் காட்சி தருகின்றன. கதாபாத்திரங்களை ஜன்னல் கம்பிகளுக்குப் பின்னாலோ அல்லது தடுப்புகளின் இடைவெளியிலோ நிறுத்தி, அவர்களின் உணர்வுலகம் சிறைபட்டிருப்பதைப் போல காட்சிப்படுத்தியது திரைமொழியின் சிறப்பம்சம். கொல்கத்தாவின் பழைய பாழடைந்த தோற்றமும் இழைநயம் (texture) போல படம் முழுக்க விரவி இருக்கும். இவையெல்லாம் ஏனைய தமிழ்ப்படங்களில் இருந்து ரெவலேஷன்ஸ்-ஐ வேறுபடுத்திக்காட்டுகின்றன.
அடுத்ததாக டிஜிட்டல் ஒளிப்பதிவில் செயற்கை ஒளி பயன்படுத்தப்பட்டிருந்தாலும், கதை நடக்கும் இடத்திற்கென்று ஒளியமைப்பு இருக்கும் இல்லையா? அதை எடுத்துவிட்டால் நம்பகத்தன்மை போய்விடும். எனவே செயற்கை ஒளியோடு சேர்த்து சின்ன சின்ன விளக்குகளைக்கொண்டு (prop lights) ஃபிரேமை நிரப்பி இருக்கிறார்கள். படம் முழுக்க ஒளி சீராகக் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதும் பாராட்டுக்குரியது. ஒளியைக் கட்டுப்படுத்தாமல் விட்ட இடங்கள் – நிருபர் கதாபாத்திரம் வெவ்வேறு இசைக்குழுக்களைப் பேட்டி எடுக்கும் காட்சியில் மட்டும்தான். ஆவணப்படம் பார்க்கும் உணர்வைத் தருவதற்காக இவ்வாறு அமைத்தது சிறப்பு.
கேமராவின் நகர்வு எங்குமே அர்த்தமில்லாமல் செய்யப்படவில்லை. ஒரே இடத்தில் நிதானமாக அவதானிக்கும் அல்லது கதாபாத்திரத்தின் கோணத்திலிருந்து பார்க்கும். சேத்தனும் லக்ஷ்மிபிரியாவும் தன்னிலை மறந்து முத்தமிட்டுக்கொள்ளும் காட்சியில், திடுக்கிட்டு விலகிய சேத்தன், மாடிப்படியில் இறங்கி வரும் பொழுது, கேமராவும் சற்று நிதானமிழந்து அங்கும் இங்கும் அவரோடு சேர்ந்து அலைபாயும். கேமராவின் அசைவுகள் பாத்திரத்தின் உணர்வுகளோடு ஒத்திசைந்து இருப்பது திரைமொழியின் இன்னொரு அம்சம்.
மற்றொரு காட்சியில், கேமரா கொல்கத்தாவின் பழைய வீட்டின் முற்றத்தைப் பக்கவாட்டிலிருந்து அவதானிக்கிறது. சற்றே பாழடைந்த மரவேலைப்பாடுள்ள வீட்டின் உட்புறம், அதன் வடிவங்கள், அந்த இழைநயத்தை (texture) இயல்பாக காட்டும் ஒளியமைப்பு, ஆங்காங்கே கசியும் விளக்கொளி என அந்த ஃபிரேம் அவ்வளவு நேர்த்தி. அழைப்புமணி அடிக்கும் சத்தம் கேட்டு வீட்டின் முன் கதவைத் திறக்க ஃபிரேமிற்குள் வருகிறாள் மனைவி. கதவைத் திறந்தவுடன் வெளியிலிருந்து புதிய ஒளி அவளின் முகத்தில் சேர்கிறது. அவர்கள் பின்னோக்கி வீட்டிற்குள் நடந்து செல்ல, கேமராவும் நேர்க்கோட்டில் அவர்களோடு செல்கிறது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் கேமரா பின்னோக்கிப் போகும் ஃபிரேமிற்குள் அத்தனை வடிவங்கள் வந்து போகின்றன. நகரும் கேமரா காட்டும் பின்னணியில் சதுரங்கள், நேர்கோடுகள், பலவகையான வேலைப்பாடுகள், இடைவெளிகளில் கசியும் வண்ண விளக்குகள் என அத்தனை அழகு. படத்தில் அழகியலை உருவாக்க நம் வாழ்விடங்களின் அமைப்பை ஆழமாக உள்வாங்கினாலே போதும். அதற்குள் இருக்கும் வடிவங்கள் வெளிப்பட்டுவிடும். சிதைந்த வடிவமாகினும் சரி அதுவும் அழகியல்தான் – சிதிலத்தில் அழகியல். இத்தகைய வடிவங்கள் எல்லா படங்களிலும் இருக்க வேண்டியதில்லை. அதன் சாத்தியத்தை இங்கு சுட்டிக் காட்டுகிறேன்.
படத்தின் திரைமொழி இவ்வளவு நேர்த்தியாய் உருவாக முக்கிய காரணம் எடிட்டிங். ஒவ்வொரு காட்சியும் அதன் நீளமும் தேவைக்கேற்ப உள்ளுணர்வைக்கொண்டு வெட்டப்பட்டதால் படத்துக்கு நிதானமான ஓட்டம் அமைந்துவிட்டது. ஷாட் மாறுவது கண்களை உறுத்தவே இல்லை.
பின்வரும் காட்சியில் ஷாட்களின் நீளம் (shot length) எவ்வாறு நடிப்பிற்கான புதிய சாத்தியங்களை உருவாக்குகிறது என்பதைக் கவனிக்கலாம். சமைத்துக் கொன்டிருக்கும் சேத்தன் ஏதோ சத்தம் கேட்டு படுக்கையறை சென்று பார்க்கும் பொழுது உடல்நிலை சரியில்லாத அம்மா படுக்கையில் இருந்து கீழே விழுந்து கிடக்கிறார் (அதிர்ச்சி). தனியாகத் தூக்கி படுக்கையில் போட முடியாமல் கீழ்வீட்டுப் பெண்ணை உதவிக்கு அழைக்க ஓடுகிறார் (பதற்றம்). அவரோடு கேமராவும் சற்றே பதற்றமாகப் பயணிக்கிறது. கதவைத் தட்டி “என் வீட்டுக்கு வர முடியுமா?” என்று கேட்க பெண்ணின் முகத்தில் (பயம்). பின்னர் நிலைமையை விளக்கி இருவரும் படியேறி அறைக்கு வர, கீழே விழுந்திருக்கும் அம்மாவைப் பார்த்தவளுக்குப் பெரும் (அதிர்ச்சி). இருவரும் தூக்கி படுக்கையில் கிடத்திவிட்டு (நன்றி) சொல்லி பிரியும் பொழுது, “வேலைக்கு ஆள் யாரும் கிடைப்பார்களா?” என்று சேத்தான் கேட்கிறார். இருவரின் முகத்திலும் ஓர் (ஆவல்). “சரி நான் விசாரிக்கிறேன்,” என்று சொல்லி பிரியும் அவர் மீண்டும் வந்து “நானே அம்மாவைப் பார்த்துக்கொள்ளட்டுமா?” என்கிறார். மீண்டும் சேத்தனின் முகத்தில் எதிர்பாராத (வியப்பு). பிறகு மிகுந்த (தயக்க)த்தோடு ஒப்புக்கொள்கிறார். அவர் ஒப்புக்கொண்டவுடன் பெண்ணின் முகத்தில் சிறிய (சந்தோசம்). ஒரே காட்சியில் எத்தனை உணர்வுகள் இரு நடிகர்களின் உடல்மொழியில் தோன்றி மறைகின்றன என்பதைக் கவனிக்கலாம். இந்தக் காட்சிக்கு அத்தனை நீளம் இல்லாவிட்டால், இத்தனை உணர்வுகளும் ஒன்றன்பின் ஒன்றாக உருவாகி மறைந்து வேறொன்றாக மாறுவதை ரசிக்கும் அவகாசம் நமக்கு இருந்திருக்காது. இதே காட்சியை இருபது cut வைத்து கூட கட்டமைக்கலாம் தவறில்லை. ஆனால் இங்கு உருவாக்கப்படும் சாத்தியமும் அழகியலும் அதில் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. சினிமாவில் எதை எங்கு பயன்படுத்துகிறோம் என்ற இயக்குனரின் கலைநயத் தெரிவு (artistic choice) முக்கியம்.
ரெவலேஷன்ஸ் கொண்டாடப்பட வேண்டியதற்கு இன்னொரு முக்கிய காரணம் நேரடியாகப் படப்பிடிப்பில் சப்தம் பதியப்பட்டு பின்னர் மேம்படுத்தப்பட்டுள்ளது. திரைப்படத்திற்கான ஒலி உலகத்தை நாம் ஓர் அறைக்குள்ளிருந்து உருவாக்கிவிடுவது எளிதல்ல. நேரடி ஒலிப்பதிவு (live recording) செய்யப்பட்டதால் வழக்கமாக நாம் சினிமாவில் கேட்கத் தவறும் சின்னச் சின்ன ஒலிகளைக்கூட கேட்கும் அனுபவம் அருமையாக இருந்தது. இசை அதிகமாகப் பயன்படுத்தப்படாமல் ஆங்காங்கே தேவையான அளவு சேர்க்கப்பட்டிருந்தாலும், அப்படிச் சேர்க்கப்பட்ட இடங்களில் அவை உருவாக்கும் உணர்வுகளும் கச்சிதமாக இருந்தன. குறிப்பாக பாலத்தில் நியான் ஒளியில் (neon light) இருவரும் பைக்கில் செல்லும் காட்சிக்குச் சேர்க்கப்பட்ட சாக்ஸஃபோன் (saxophone) இசை அப்படியே நம்மை மிதக்கச் செய்கிறது. அந்த மோன்டாஜை (montage) இயக்குனர் எவ்வாறு யோசித்திருப்பார்? எதேச்சையாக உருவானதா அல்லது பாலத்தில் பயணிக்கும் பொழுது எழுந்த எண்ணமா? சாக்ஸஃபோன் இசையைச் சேர்க்கலாம் என்ற எண்ணம் எப்படி உருவாகி இருக்கும்? இப்படிப் பல கேள்விகள் எழுந்தன.
இந்தப் படம் இத்தனை நேர்த்தியுடன் உருவாக இயக்குனரின் எழுத்தும், திரைக்கதையும் அவர் பாத்திரங்களை அணுகிய விதமும்தான் காரணம். இந்தப் படத்தின் பாத்திரங்கள் அனைத்துமே வழக்கமாக நாம் சினிமாவில் எதிர்கொள்பவர்கள்தான். வீட்டில் இருக்கும் மனைவி, பத்திரிகையில் வேலை செய்யும் கணவன், எழுத்தாளர், சுதந்திரப்போக்குடைய பெண். இருப்பினும் அவரின் அணுகுமுறையில் வழக்கமான பாத்திரங்களைக் கட்டுடைப்பு செய்திருக்கிறார். பாத்திரங்களின் அகச்சிக்கல்களும் குணாதிசியங்களும் பூவின் மடல் போல சிறுது சிறுதாக அவிழ்க்கப்படுகிறது. படத்தின் இறுதியில் அவர்களைப் பற்றிய முற்றிலும் வேறுபட்ட பிம்பங்களை உருவாக்கி வெற்றியடைகிறார் இயக்குனர். வாழ்வின் நுட்பமான தருணங்களைச் சேர்த்து பாத்திரங்களின் புற உலகத்தையும், நுண்ணுணர்வுகளைச் சேர்த்து அக உலகத்தையும் கட்டமைத்துள்ளார். படத்தைப் பார்ப்பவர்களுக்கு கொல்கத்தாவில் வாழ்ந்த அனுபவத்தை ஏற்படுத்தி விடுகிறார்.
இயக்குனர் தேர்ந்தெடுத்த கேமரா கோணங்கள் கதைக்கு வலுசேர்த்துள்ளன. ஆரம்ப காட்சிகளில் சேத்தன் கொல்கத்தாவில் அலைந்து திரிவார். அவர் ஒரு சிறிய மனிதனாகக் குறுகி இருப்பதை மேலிருந்து கீழ் நோக்கி (high angle) படம் பிடித்திருப்பார். குற்றவுணர்ச்சியில் இருந்து மெல்ல மீண்டெழும் இறுதிக் காட்சியில், சேத்தனின் கதாபாத்திரத்தைக் கீழிருந்து படம் பிடித்து (low angle) பெரிய உருவமாகக் காட்டியிருப்பார். இவ்வாறு நம் அவதானிப்போடு விளையாடி இருக்கிறார். அவருடைய இந்தத் தேர்ச்சி ஒவ்வொரு துறையிலும் வெளிப்படுகிறது.
எழுத்தாளராக அவர் மிளிரும் இடங்களும் நிறைய உண்டு. குறிப்பாக எழுத்தைக் கைவிட்டு விரக்தியில் இருக்கும் சேத்தன் சிலை வேலைப்பாடு செய்யும் ஒரு கூடத்தின் வழியே நடந்து செல்லும் பொழுது தன் மனதுக்கு நெருக்கமான ஆனால் இப்போது கைவிட்டு இருக்கும் எழுத்துக் கலையை நினைவு கூர்ந்து பாக்கெட்டில் இருக்கும் பேனாவைத் தொட்டு பார்க்கும் கணத்தில் ஒரு தேர்ந்த எழுத்தாளராகவும் மிளிர்கிறார். ஒரு கலை இன்னொரு கலையை நினைவுப்படுத்தும் என்பது நுணுக்கமான உணர்வுநிலை அவதானிப்பு. இத்தனை நுணுக்கமான உளவியலையும் அகச்சிக்கலையும் கொண்ட படம் தமிழில் உருவாகி இருக்கிறது என்பதே ஆசுவாசமாக இருக்கிறது.
ரெவலேஷன்ஸ் புகழ்பெற்ற பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் (Busan International Film Festival) திரையிடப்பட்டதும், அதைத் தொடர்ந்து உலகம் முழுக்க திரையிடப்பட்டு வருவதும் மகிழ்ச்சியடையச் செய்கிறது. தமிழ்ப்படங்கள் தனக்கான சிறிய இடத்தை உலக அரங்கில் ஏற்படுத்தி வருவது நமக்குப் பெருமைதானே. அதே வேளையில் இத்தகைய படங்கள் தமிழ்நாட்டில் பெருவாரியான மக்களுக்குப் பார்க்கக் கிடைக்கும் சூழல் இல்லையென்பது வருத்தமளிக்கிறது.
நிலவழகன் சுப்பையா தமிழ்நாட்டில் பிறந்தவர், தற்பொழுது ஜெர்மனியில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார். சுயமாக சினிமாவை கற்றும் சுயாதீனமாக திரைப்படங்களை உருவாக்கும் முயற்சியிலும் உள்ளார். இதுவரை ஒரு குறும்படத்தை இயக்கி இருக்கிறார். தனது அடுத்த குறும்படத்தை இயக்கம் முயற்சியில் உள்ளார். சினிமாவை உற்றுகவனித்து அதன் நுணுக்கங்களை கற்றும் வருகிறார்.