IFFC 2019: மதராசப் பட்டினத்தில் எழுந்த மக்களின் கலகக்குரல்

பி.லெட்சுமி நாராயணன் சென்னை சுயாதீனத் திரைப்பட விழாவில் தனது அனுபவத்தைப் பகிர்கிறார்.

14 min read

“நான் பணம் சம்பாதிப்பதற்காகத் திரைப்படம் எடுக்கவில்லை. உடனடி வெற்றி திரைப்படத்தின் நோக்கமல்ல. எந்தத் திரைப்படம் அதிக வசூல் பெறும் என்பதை யாரும் சொல்லிவிட முடியாது. என்னுடைய மக்களுக்காக நான் படம் எடுக்கின்றேன். நான் போர்க்களத்தை நம்புகிறவன். கலை என்பது போர்!”

– ரித்விக் கட்டக்

சினிமா நூற்றாண்டுகளைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் பல ஆண்டுகளுக்கு அதனுடைய பயணம் முடிவிலியாகத்தான் இருக்கும். வடிவம், உள்ளடக்கம், உருவாக்கம் மற்றும் வெளியீட்டு முறைகளில் மாற்றமடையுமே தவிர முற்றாக இல்லாமல் போகாது. ஏனெனில் அது மக்களுடன், குறிப்பாக எளிய மனிதர்களுடன் கலந்துவிட்ட ஆகச்சிறந்த கலை! இருள் திரையில் ஒளி-ஒலி வழியாக அவர்களைக் கட்டுப்படுத்தி, ஆற்றுப்படுத்தி, தன்னுள் எளிதாய்க் கரைத்துக்கொள்கிறது சினிமா. சினிமாவானது இசை, எழுத்து, ஓவியம், நடிப்பு, நாடகம் எனப் பல கலைகளை உள்ளடக்கிய ஒரு பெருவெடிப்பின் வெளிப்பாடு.

மனித மனதிற்குள் ஊடுறுவிப் பாயும் அதன் தாக்கம் ஆழமானது. எனவேதான் ஆகச்சிறந்த படைப்பாளிகள் சமரசமற்று சினிமாவையும் மக்களையும் நேசித்து, தங்களது படைப்புகளின் வழியே சினிமா என்பது வெறும் பொழுதுபோக்குக்கானது மட்டுமே அல்ல என்று வலியுறுத்தினர். மனிதர்களின் சந்தோஷங்களையும், துயரங்களையும், அப்பட்டமான வாழ்க்கையையும், அதிகார வர்க்கமும் அரசாங்கமும் தன் சுயலாபத்திற்காக மக்களுக்கு எதிரானதை முன்வைத்து ஒடுக்கும்போதெல்லாம் வெடித்து எழும்பும் சுய இருப்புக்கான மனித எழுச்சியையும், உலகமெங்கும் கிளர்ந்து எழுந்த பல்வேறு போராட்டங்களையும், அடக்குமுறைக்கு எதிராகக் கிளம்பிய பெரும் குரலையும், வீழ்த்தப்பட்ட மக்களின் கண்ணீரையும், வலிகளையும் பதிவு செய்தனர். அதுமட்டுமின்றி தனிமனித வாழ்க்கை முரண்பாடுகள், உறவுச் சிக்கல்கள், குடும்பச் சூழல்கள், சமூகத்தில் பெண்களின் நிலை எனப் பல்வேறு யதார்த்தங்களைப் படமாக்கியதன் மூலம், நிஜத்தை அசையும் பிம்பங்களின் வாயிலாகக் கண்முன்னே நிறுத்தி, மனிதர்களுக்குள் ஒரு மாபெரும் உந்துசக்தியை, விழிப்புணர்வை, சிந்திக்கும் திறனை உருவாக்கினர். இதனால், தான் வாழும் சமுதாயத்தை மக்கள் கூர்ந்து அவதானிக்கத் தொடங்கினார்கள். கவனிக்கத் தொடங்கிவிட்டாலே அங்குக் கேள்விகள் பிறப்பெடுப்பது நடக்கும். கேள்விகள் விடைகளை நோக்கி எளிதில் நகர்த்திச் செல்லும். சினிமா ஓர் இயக்கமாகப் பிறப்பெடுக்கும் இடமிது.

சினிமா எளிய மனிதர்களின் கையில் இருக்க வேண்டும். குறிப்பாக சமூகத்தின் மீது ஆழமான அன்பும், தீராத கோபமும் கொண்ட கலைஞர்களின் கையில் இருக்க வேண்டும். அவர்கள், என்ன சினிமா எடுக்க வேண்டும் என நினைக்கின்றார்களோ, அதை எந்தவிதத் தங்குதடையுமின்றி எடுக்க வேண்டும். அதை மக்களின் மத்தியில் கொண்டு செல்ல ஓர் இடம் வேண்டும். இங்கிருக்கும் பெரிய வணிகக் கட்டமைப்புக்குள் இது சாத்தியப்படாது. அவர்கள் வேறு வழிகளைக் கண்டடைவது அவசியமாகிறது. இங்குதான் சுயாதீன சினிமா பிறக்கிறது. தங்களைப் போலவே கலையின் மீதும் சமூகத்தின் மீதும் தாகமும் அக்கறையும் கொண்ட நபர்களைச் சேர்த்துக்கொண்டு, கிடைக்கும் முதலீட்டில் தரமான படங்களைத் தருவது, அதை மக்களின் மத்தியில் கொண்டு சேர்ப்பது எனத் தொடர்ந்து இயங்குவதும் முக்கியமானது. சுயாதீன சினிமா தயாரிப்பிலும் வருமானம் ஈட்டுதலிலும் பணம் ஒரே இடத்தில் குவியும் ஒற்றைமையம் உடைபடுகிறது.

சுயாதீன சினிமா நமக்குப் புதிதல்ல; ரித்விக் கட்டக், மிருணாள் சென், சத்யஜித் ரே, நிமாய் கோஷ், கோவிந்த் நிஹ்லானி, மணி கௌல், ஷியாம் பெனகல், அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன், ஜான் ஆபிரகாம், குருதத், அருண்மொழி, ஜெயபாரதி, ஹரிஹரன், ஆர்.பி.அமுதன் என வடக்கில் தொடங்கித் தென்னிந்திய சினிமா முழுதும் முதுபெரும் படைப்பாளிகள் இம்முறையில் தங்களது படங்களை உருவாக்கி மக்கள் கூடும் இடங்களில் திரையிட்டபோதே பிறந்துவிட்டது சுயாதீன சினிமா என்னும் உண்மையான சினிமா! இன்றும் மிகப்பெரிய படை நாடெங்கும் சத்தமில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. பார்வையாளர் இம்மாதிரியான படங்களைத் திரையில் தொடர்ந்து பார்க்கும்போது, தான் இதுவரையில் வெளியே பார்த்து வந்த திரைப்படங்களை மனதில் ஆழமாக விசாரணை செய்யத் துவங்குகிறார். சினிமா ரசனைக்கான விதை அங்குதான் விதைக்கப்படுகிறது.

[The World of Apu இதழுக்காக ஒமார் அக்மத் எழுதிய Indian Parallel Cinema ஆங்கிலக் கட்டுரையை இங்குப் படிக்கலாம்.]

வெகுஜன வணிக சினிமாக்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. ஆனால் சுயாதீனத் திரைப்படங்களுக்குத் திரையரங்குகள் கிடைப்பதென்பது நடக்காத காரியம். நெட்பிளிக்ஸ், அமேஸான் ப்ரைம் போன்ற இன்னபிற வெளியீட்டு முறைகள் இவற்றை வாங்கி வெளியிடுகின்றன. இவை சுயாதீனப் படைப்பாளிகளுக்குப் பெரு வாய்ப்பாகவும், இதன் மூலமாக முதலீடு செய்த பணத்தினைத் திரும்ப எடுத்துவிட்டாலும், குறிப்பிட்ட மக்களிடம் மட்டுமே அவர்களின் படம் தேங்கி நின்றுவிடுகிறது. ஒரு சுயாதீனத் திரைப்பட இயக்குநர் சிறுவட்ட ரசிகர்கள் திரளைப் பெற்றிருந்தாலும் அது போதுமானதல்ல. இப்படங்கள் பொது மக்களிடையேயும் அவசியம் கொண்டு செல்லப்பட வேண்டும். அதற்கான சுதந்திரவெளி தேவையாகிறது.

சென்னையில் கடந்த 2008இல் அருண்.மோ அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் ஸ்டுடியோ என்னும் பேரியக்கம் தொடர்ந்து நல்ல சினிமா சார்ந்தும், சினிமா ரசனை சார்ந்தும், நல்ல சினிமா வருவதற்கு முறையான சினிமா சார்ந்த கல்வி அவசியம் என்பதை முன்வைத்தும் பலவிதமான முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்துவருகிறது. குறும்படங்களை, ஆவணப்படங்களை, மிக முக்கியமாக, திரையரங்க வெளியீடுகள் சாத்தியப்படாத சுயாதீனத் திரைப்படங்களைத் தொடர்ந்து ஆதரித்து மக்களின் மத்தியில் அவற்றைக் கொண்டு சேர்ப்பதையும் செய்து வருகிறது.

கடந்த ஆண்டு சலனம் அறக்கட்டளையுடன் இணைந்து இந்தியாவிலேயே முதல்முறையாக எந்தவித கார்ப்பரேட் மற்றும் அரசாங்கத்தின் உதவியுமில்லாமல் மக்களிடம் இருந்து பணம் பெற்று மக்களுக்காக மக்களே நடத்தும் மக்களின் பெருந்திருவிழாவாக, கலகக்குரலாகத் தன்னெழுச்சியுடன் சென்னை சுயாதீனத் திரைப்பட விழாவை (Independent Film Festival of Chennai – IFFC) நடத்தியது. தமிழ் ஸ்டுடியோ அமைப்பு ஒருங்கிணைத்து நடத்தினாலும் மக்களின் பங்களிப்பு அதிகமானதால் இது மக்களின் விழா என்பதை மறந்துவிட இயலாது.

இந்த ஆண்டும் பிப்ரவரி 8, 9 மற்றும் 10 ஆகிய மூன்று நாட்கள் சினிமா காதலர்களின் பெரும் கூட்டத்துடனும், சுயாதீனத் திரைக்கலைஞர்களுடனும் மிகவும் சிறப்பாக சென்னை சுயாதீனத் திரைப்பட விழா நடந்தேறியது. இவ்விழாவிற்கான நிதித்திரட்டலை நான்கு மாதங்களுக்கு முன்பே மக்களிடம் துவக்கியது தமிழ் ஸ்டுடியோ. உதவி இயக்குநர்கள் மற்றும் சினிமாவில் பல்வேறு துறைகளில் ஆர்வமுள்ளவர்களுக்கென தனித்தனியே பயிற்சிப் பட்டறைகளும் சிறப்பு வகுப்புகளும் நடத்தி நிதியைச் சிறுகச் சிறுகச் சேர்த்தது. பிரபலங்கள் மற்றும் விருப்பமிருக்கும் அனைவரின் படங்களையும் லைவ் போர்ட்ரைட்டாக (IFFC Live Portrait) வரைந்து தந்து நிதி பெற்றது. மக்களிடம் நேராகக் களத்தில் இறங்கியும் நிதி திரட்டியது.

சமூக ஊடகங்களில் ‘அன்புச் சங்கிலி’ என்கிற திட்டம் மூலம் தமிழ் ஸ்டூடியோ IFFC விழாவிற்கு நிதி திரட்டியது.

சென்னையின் சாலிகிராமத்திலிருக்கும் பிரசாத் பிரிவியூ தியேட்டர், பிரசாத் 70 எம் எம் திரையரங்கம், கோடம்பாக்கம் எம் எம் பிரிவியூ அரங்கம் ஆகிய மூன்று இடங்களில் திரையிடல்களும், நிகழ்வுகளும் நடந்தன. வெறுமனே திரைப்படங்களை வரிசையாகத் திரையிடும் மற்ற திரைப்பட விழாக்களைப் போலில்லாமல், திரையிடும் படங்களின் இயக்குநர்களுடன் மக்கள் கலந்துரையாட ஏற்பாடு செய்திருந்தனர். திரைப்பட விழாவின் தொடக்கத் திரைப்படமாக சுயாதீனத் திரைக்கலைஞன் தேவசிஷ் மகிஜா இயக்கிய இந்தித் திரைப்படம் போன்ஸ்லேவும் (Bhonsle), இறுதித் திரைப்படமாக 2017ல் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் (IFFI) தொடக்கத் திரைப்படமாகத் தேர்வாகி, ஒற்றைமையத்தை முன்னெடுக்கும் ஆளும் ஏதேச்சதிகாரத்தால் முறையான காரணமின்றி வெளியேற்றப்பட்ட மராத்தியத் திரைப்படமான ரவி ஜாதவ் இயக்கிய நீயூட் (Nude) படமும் திரையிடப்பட்டன.

திரைப்பட விழாவிற்காகச் சிறப்புத் தேர்வுத் திரைப்படங்கள் (Official Selection), Country Focus (SL) பிரிவில் இலங்கையின் முக்கியமான இயக்குநர்களான பிரசன்ன விதானகே, அசோகா ஹந்தகாமா, விமுக்தி ஜயசுந்தரா ஆகியோரின் படங்கள், ரெட்ரோஸ்பெக்டிவ் பிரிவில் இந்தியாவின் மிக முக்கியமான இதுவரை எந்தத் திரைப்பட விழாவிலும் கலந்துகொள்ளாத சுயாதீனத் திரைப்பட இயக்குநரான பஞ்சாபின் குர்வீந்தர் சிங் இயக்கிய படங்களும், மலையாள சுயாதீன சினிமாவின் புகழ்பெற்ற திரையாளுமையான சனல்குமார் சசிதரனின் காழ்ச்ச திரைப்பட விழாவின் (Kazhcha Film Festival) தேர்வுகளில் இருந்து ‘காழ்ச்ச பிரிவு’ என்னும் பிரிவுகளில் படங்கள், தமிழ் குறும்படங்களுக்கென ‘தமிழ் ஸ்டுடியோ’ நடத்தும் ‘பாலுமகேந்திரா குறும்பட விழா’வில் தேர்வு செய்யப்பட்ட பத்து குறும்படங்களும் திரையிடப்பட்டன. இவ்வாறு குறும்படங்கள், ஆவணப்படங்கள், முழுநீள சுயாதீனத் திரைப்படங்கள் எனக் கலவையாக சுமார் 35 படங்கள் திரையிடப்பட்டன. இவ்விழாவிற்கான படங்களைக் கவிஞர், இயக்குநர், சினிமா செயல்பாட்டாளர் லீனா மணிமேகலை, இயக்குநர் சனல்குமார் சசிதரன், Queer Lens பிரிவில் மௌலி, விழாவின் இயக்குநர் அருண்.மோ ஆகியோர் சிறப்பாகத் தேர்வு செய்திருந்தனர். படங்களின் தேர்வுகள் பிரமிக்க வைத்தன. பெருமளவில் சிறந்த படங்களாகத் தேர்வு செய்திருந்ததால் இரண்டு நாட்களில் எதை விடுவது எதைப் பார்ப்பது என்று பார்வையாளர்களிடையே ஆசையும், குழப்பமும் ஒருங்கே நிலவியது. நிகழ்வு நிரலை வைத்துக்கொண்டு தங்களது நண்பர்களுடன் பலர் விவாதித்தபடி இருந்ததைப் பார்க்க முடிந்தது.

LGBTQ மக்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கையை, அம்மக்களின் சமவுரிமையைப் புரிந்துகொள்ளும் வகையில் Queer Lens என்னும் தனிப்பிரிவில் LGBTQ ஆளுமைகளே இயக்கிய திரைப்படங்களையும், “தமிழ் சினிமாவில் பால்புதுமையினர்” என்ற தலைப்பில் அடர்த்தியான குழுவிவாதம் ஆகியவற்றைச் சிறப்பாக இப்பிரிவில் திட்டமிட்டிருந்தனர். சென்னை சுயாதீனத் திரைப்பட விழாவில் மிகச்சிறந்த அம்சங்களில் இதுவும் ஒன்று; இப்பிரிவிற்கான படங்களையும், விவாதங்களையும் குயர் சென்னை க்ரோனிக்கல்ஸ் அமைப்பின் நிறுவனர் மௌலி அற்புதமாக ஒருங்கிணைத்திருந்தார். இப்பிரிவில் இடம்பெற்ற குறும்படங்களான ஹேப்பி பர்த்டே மார்ஷா! (Happy Birthday Marsha!), சிசக் (Sisak) ஆகியவை பெரிதும் ஈர்த்தன. கென்யாவில் அரசால் தடை செய்யப்பட்ட திரைப்படமான ரபீக்கி (Rafiki) இப்பிரிவில் இடம்பெற்ற அற்புதமான படம். இப்படம் முன்பே சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் (CIFF) பரவலான கவனத்தை ஏற்படுத்தியது. மேலும் திரைப்படக் கலைஞர்கள் எடுக்கும் சிறப்பு வகுப்புகள், குறிப்பிட்ட துறைசார்ந்த திரையாளுமைகள் சேர்ந்து விவாதிக்கும் செறிவான கலந்துரையாடல்கள் எனக் களைகட்டியது இரண்டாவது சென்னை சுயாதீனத் திரைப்பட விழா!

ஆரம்ப நாளான பிப்ரவரி எட்டாம் தேதி மாலையில் சினிமாவின் மீது தனிப்பெருங்காதலும் தீராத மோகமும் கொண்ட திரைப்பட ரசிகர்கள், திரைப்பட ஆர்வலர்கள், உதவி இயக்குநர்கள், இயக்குநர்கள், சினிமா செயற்பாட்டாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், திரைத்துறையில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் நபர்கள், கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் என வயது வித்தியாசமின்றி பெரும் கூட்டம் பிரசாத் லேபில் கூடித் தங்களுக்கான அடையாள அட்டை, விழா நிகழ்வு குறித்து முழுத்தகவல்கள் அடங்கிய புத்தகம், நோட்டு, பேனா சகிதம் அழகிய மரகதப்புறா பதித்த ஜோல்னா பையை வரிசையில் நின்று பெற்றுக்கொண்டனர். பொது நண்பர்களுக்கு 250 ரூபாய்க்கும், உதவித் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு 150 ரூபாய்க்கும், அதிகம் பணமில்லை ஆனால் நிறைய ஆர்வமிருக்கிறது என்று சொல்லும் நண்பர்களுக்கு 100 ரூபாய்க்கும் விழாவிற்கான நுழைவுச்சீட்டு கிடைக்கும் என்று அறிவித்திருந்தனர்.

பிரசாத் லேப் வளாகம் முழுதும் பல்வேறு திரைப்பட மேதைகள் தங்களது செறிவான பொன்மொழிகளோடு பேனர்களில் நம்மை வரவேற்றனர். மூன்று திரையரங்குகளுக்கு உள்ளேயும் கலந்துரையாடலின்போது பின்பக்க பேனர்களில் தங்களின் ஆத்மார்த்தமான வரிகளுடன் திரைமேதைகளான ரித்விக் கட்டக், மிருணாள் சென் மற்றும் வெர்னர் ஹெர்சாக்கும் உட்கார்ந்திருந்தனர். தமிழ் சினிமாவின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் தமிழ்த் திரைப்பட ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கிளாசிக் படங்களைத் தொகுத்து விதவிதமான மூன்று பேனர்களில் ‘தமிழ் சினிமா – நூற்றாண்டுக் காட்சியகம்’ என்ற பிரிவில் வைத்திருந்தனர். தமிழ் ஸ்டுடியோவின் சினிமா மாணவர்களான கருஞ்சட்டைப் படை ‘படிமை’ மாணவர்கள் செய்திருந்த சார்லி சாப்ளின் பிரசாத் பிரிவியூ தியேட்டர் வாயிலில் நின்றிருந்தார்.

மஞ்சள் நிறக் கையொன்று நீண்டு இருக்கிறது; அதனைப் பல வண்ணக் கலவையாய்ப் படம் பிடிக்கும் கேமராவைச் சிகப்புநிறக் கை ஏந்தியிருக்கிறது; தலையில் வண்ண பலூன்கள் சகிதமாய்க் கனவுகளுடனும், கயிற்றேணியுடனும் நிற்கும் கலைஞனின் சிற்பம்; IFFC 2019 என்று எழுதப்பட்ட கிளாப் போர்டு, பாறை ஒன்றில் பிலிம் சுருள்கள் தொங்கவிடப்பட்டிருக்க போர்வீரர்கள் அதை நோக்கிப் படிப்படியாக ஏறுவதைப் போன்ற ஒரு சிற்பம், மேலே ஏறினால் அங்கிருக்கும் படச்சுருளையும், கிளாப் போர்டையும் எடுக்கலாம். இதுபோன்ற இன்னும் சில கலை நுணுக்கமான சிற்பங்கள் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இவையனைத்தும் பலரின் கவனத்தை ஈர்த்தது. பார்வையாளர்கள் பலரும் இவற்றுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். திரைப்பட விழாவில் அதிகமாகப் பயன்படுத்தியிருந்த வண்ணங்களாகக் கருப்பும், சிவப்பும், மஞ்சளும், ஆரஞ்சும், நீலமும், வெள்ளையும் இருந்தன.

பார்வையாளர்கள் உணவருந்த தனியே ‘சென்னை சுயாதீனத் திரைப்பட விழா – கேண்டீன்’ என்ற பெயரில் சைவ உணவகம் அமைத்திருந்தனர். குறைந்த விலையில் மூன்று நாட்களும் எல்லா வேளைகளிலும் உணவுகள் கிடைத்தன. சினிமா கல்வி சார்ந்தும் திரைப்பட விழா இயங்க வேண்டும் என்ற நோக்கில் தனியே வளாகத்தில் ‘படிக்கும் இடம்’ ஒதுக்கப்பட்டிருந்தது. வண்ணங்களின் நேர்த்தியை சினிமா எப்படிக் கையாள வேண்டும் என்று சொல்லும் எழுத்தாளர் தினேஷ் எழுதிய ‘தமிழ் ஸ்டுடியோ – பேசாமொழி’ பதிப்பக வெளியீடான நிறமி புத்தகம், மக்கள் மலிவு விலை பதிப்பாகப் பத்து ரூபாய்க்கு ‘சினிமா தொழில்நுட்ப வரிசை’ புத்தகங்களாக தீஷா எழுதிய ‘ஷாட் – கேமரா – ஆக்சன்’, கிம் கி தக், ஃபோகஸ் மற்றும் தினேஷ் எழுதிய படத்தொகுப்பு (ஶ்ரீகர் பிரசாத் நேர்காணல்) ஆகியவை வெளியிடப்பட்டு பியூர் சினிமா புத்தக அரங்கில் கிடைத்தது.

பிரசாத் லேபின் மறுபக்கத்தில் தனித்தனியாக எட்டு அகன்ற விற்பனைக் காட்சியரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. பியூர் சினிமா புத்தக அரங்கு சினிமா சார்ந்த பல்வேறு புத்தகங்களையும் ஒருங்கே கொண்டு வீற்றிருந்தது. அடுத்ததாக ‘நுட்பம்’ அரங்கில் உலகத் திரைப்பட மேதைகளும், இந்தியத் திரைப்பட மேதைகளும் சுயாதீனத் திரைப்பட விழாவைக் காண அழகிய ஓவியங்களாய் உருவெடுத்து வந்திருந்தனர். புகழ்பெற்ற திரைப்படங்களின் விளம்பரத் தட்டிகளும் இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சென்னை கவின் ஓவியக் கல்லூரி மாணவர்களும் படிமை மாணவர்களும் இணைந்து வரைந்த இந்த ஓவியங்கள் அனைத்தும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. இதில் கிடைக்கும் தொகை சுயாதீனத் திரைப்பட விழா நிதியில் சேரும். அடுத்திருந்த ‘வாங்க லைவ் போர்ட்ரைட் வரையலாம்’ ஸ்டாலில் அரைமணி நேரத்தில் உங்களைத் தத்ரூபமாக வரைந்து தருவதற்காகத் தூரிகை மன்னர்கள் இருந்தார்கள். நீங்கள் பணம் செலுத்தி உங்கள் ஓவியத்தை வாங்கிக்கொள்ளலாம். அடுத்திருந்த ஸ்டாலில் ‘நவீன கேமராக்கள்’ விற்பனைக்குக் கிடைத்தன.

சுயாதீனத் திரைப்பட உருவாக்கலில் கடுமையான நெருக்கடியைத் தருவது முதலீடுதான். சுயாதீன இயக்குநர்கள் சிக்கனமாகப் படத்தினை முடித்துவிட முயன்றாலும் சில அடிப்படைத் தேவைகள் இருக்கவே செய்கின்றன. பணம் திரட்டுதல் என்பது மிகக் கடினமான வேலை. படைப்பாளி தன்னுடைய படத்தினைக் கொண்டு வரச் சரியான புரிதலுள்ள ஆட்களிடமிருந்து முதலீடு கிடைக்காதபோது படத்தின் உருவாக்கம் தடைபடுகிறது. இதற்கெல்லாம் ஓர் அற்புதமான தீர்வாக இவ்வாண்டு IFFCஇன் மிகவும் முக்கியமான முன்னெடுப்பு ‘சினிமா சந்தை’ (Film Bazaar) ஆகும். உங்கள் படத்தினை உருவாக்க IFFC நிதி தருவதோடு மட்டுமல்லாமல் அடுத்துவரும் திரைப்பட விழாவில் போட்டியில்லாத பிரிவில் உங்களது படம் திரையிடப்படும். தமிழ் எழுத்தாளர்கள், இயக்குநர்கள், வரலாற்று அறிஞர்கள், அரசியல் சமூகச் செயற்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் பிரச்சனைகள் போன்ற சமூகக் கண்ணோட்டத்துடன் கூடிய குறும்படங்களோ, ஆவணப்படங்களோ இயக்க வேண்டும் என்கிற நிபந்தனை உண்டு. உங்கள் படம் சார்ந்து சேகரித்த தகவல்கள், ஆய்வுகள், திரைக்கதை, படத்திற்கான காட்சி வடிவிலான முன்னோட்டம் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். ‘சினிமா சந்தை’ நடுவர்கள் குழுவிலிருக்கும் இயக்குநர், தயாரிப்பாளர், செயல்பாட்டாளர்கள் குழு உங்களது படைப்பினை ஆய்வு செய்து தகுதியாக இருக்கும் பட்சத்தில் அதற்கான நிதியைத் தரும். படத்திற்கான செலவினைப் பகிர்ந்துகொள்ள இணைத் தயாரிப்பாளரை (Co-Producer) ‘சினிமா சந்தை’ உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும். இவ்வருடம் ‘சினிமா சந்தையில்’ குறிப்பிடத்தகுந்த அளவில் நபர்கள் ஆர்வமாய்த் தங்களது படத்திற்கான தரவுகளைச் சமர்ப்பித்துள்ளதாக அங்கிருந்த பொறுப்பாளர் தெரிவித்தார். வரும் ஆண்டுகளில் சுயாதீன சினிமா எடுக்க ஆர்வமாக இருப்பவர்கள் மத்தியில் ‘சினிமா சந்தை’ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பு இது.

அடுத்த ஸ்டாலில் ‘திரைக்கதை மருத்துவர்’ (Script Doctor) என்று எழுதியிருக்க, என்னவென்று விசாரித்தபோது உங்களது படத்திற்கான திரைக்கதையினைச் சிறந்த திரைக்கதை எழுத்தாளர்களைக் கொண்டு செப்பனிட்டுத் தரும் வேலையை இந்தப் பிரிவு செய்து தரும் என்றனர். இது அதிகக் காலமெடுக்கும் பணி என்பதால் நீங்கள் உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். உங்களுக்கான நேரத்தை ஒதுக்குவதோடு மட்டுமல்லாமல் உங்கள் திரைக்கதைப் பிரதியுடன் அப்பணியில் அவர்களுடன் இணைந்து செயல்படலாம் என்றும் தகவல் தெரிவித்தனர் பொறுப்பாளர்கள். அருகிலிருந்த ஸ்டாலில் ‘தியேட்டர் லேப்’ நிறுவனத்தின் ஜெயராவ் அவர்கள் ‘நடிக்கலாம் வாங்க’ என்ற தலைப்பில் நடிப்பதற்கான பயிற்சிகளைத் தருவதாகத் தெரிவித்தனர்.

சென்னை சுயாதீனத் திரைப்பட விழா இயக்குநரும், சினிமா செயல்பாட்டாளருமான அருண்.மோ கருப்பு நிறமும், பறை மேளமும் எங்கள் விழாவின் தனித்துவமான அடையாளம் என்று சொல்லியதைப் போலவே தமிழனின் இசையான பறை இசையுடனே ஆரவாரமாகத் தொடங்கியது விழா. ‘பகு’ தலைமையில் கலையின் மீதும் நாடகங்கள் மீதும் ஆர்வமிக்க கல்லூரி மாணவ மாணவியர் நிரம்பிய தினை நாடகவெளிக் குழுவினரின் பறையிசை பார்வையாளர்களை அதிரச் செய்து ஆட வைத்தது மட்டுமில்லாமல் பெரும் கூட்டத்தினை வரவேற்று அரங்கினுள்ளே அழைத்துச் சென்றது. உள்ளே கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் சரவெடிப் பறையாட்டம், அலங்காரச் சிலம்பம், போர்ச் சிலம்பம், அறுவடைப் பாடல், சாட்டைக் குச்சி நடனம் போன்ற தங்களது அற்புதமான நிகழ்வுகளால் பார்வையாளர்களை வசியம் செய்தனர். சுயாதீன சினிமா என்பது என்ன, வணிக சினிமாவிற்கும் சுயாதீன சினிமாவிற்கும் உள்ள வேறுபாடு என்ன, நாயக பிம்ப சினிமா தமிழ் சினிமாவையும் மக்களையும் எப்படிச் சீரழிக்கிறது போன்றவற்றை நாடகத்தின் மூலமாக நகைச்சுவையுடனும், கருத்துப் பொதிந்த வண்ணமும், அரசியலும் கலந்து நேர்த்தியான நடிப்பில் வெளிப்படுத்தினர் பகு குழுவினர்; ‘தமிழ் ஸ்டுடியோ’ தினேஷ் எழுதிய இந்நாடகத்தைப் பகு இயக்கியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, விழா இயக்குநர் அருண்.மோ இன்றைய தனிமனித உரிமையை மறுக்கும் சூழலில் ஒரு கலைஞனின் வீரியமான குரல் ஒலிக்க வேண்டியதன் தேவையையும், வணிக சினிமாவால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கிடக்கும் சூழலில் சுயாதீன சினிமாவின் அவசியம் குறித்தும், இத்திரைப்பட விழாவின் முக்கியத்துவம் பற்றியும், இது முற்றாக மக்களின் விழா என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறினார். அவரைத் தொடர்ந்து இவ்வாண்டு IFFC திரைப்படங்களின் தேர்வாளர் இயக்குநர் லீனா மணிமேகலை, திரைப்படங்களின் தேர்வு குறித்தும், திரையிடப்படும் ஒவ்வொரு திரைப்படத்தின் சிறப்பான விஷயங்களையும், அதன் இயக்குநர்களை இங்கு அழைத்து வந்திருப்பதையும் பெரு மகிழ்வுடனும், நன்றியுடனும் தெரிவித்தார். இவ்வாண்டு IFFCஇல் பங்கேற்கத் தமது படங்களுடன் சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட சுயாதீனத் திரைப்பட இயக்குநர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம், ஒளிப்பதிவாளர் முரளி, தியேட்டர் லேப் ஜெயராவ், ஆவணப்பட இயக்குநர் அம்ஷன் குமார், மற்றும் சில திரைப்பட இயக்குநர்களும் தொடக்க விழாவில் சுருக்கமாகப் பேசினர்.

சென்னை சுயாதீனத் திரைப்பட விழா தனது எல்லா நிகழ்வுகளிலும் ஒழுங்குமுறையைக் கடைபிடித்தது. அதன் மூலமாக திரைக்கலாச்சாரத்தைக் கட்டமைப்பதற்கான வழியைக் கண்டடைந்தது. திரைப்படம் ஆரம்பித்து 15 நிமிடத்திற்குள் வந்தால் மட்டுமே அனுமதி; திரைப்படம் முடிந்து எண்ட் கார்டு முடியும் வரை இருந்து தொழில்நுட்பவாதிகளுக்கு மரியாதை செலுத்துதல்; அலைபேசியை அரங்கினுள் தவிர்த்தல்; படம் ஓடிக்கொண்டிருக்கும்போது இடையே வெளியே செல்வதைத் தவிர்த்தல்; படம் நிறைவுற்ற பின்னர் இயக்குநருடனான கலந்துரையாடலில் அவசியம் பங்கு கொள்ளுதல் என ஒரு திரைப்படத்திற்கான மரியாதையைத் தருவதற்குக் கற்றுக் கொடுத்தது.

ஒவ்வொரு திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன்பும் திரைப்படம் பற்றிய சிறு சுருக்கத்தினைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திரைப்பட விழாவின் தன்னார்வலர்கள் வாசித்தனர். இயக்குநர்களுடனான கலந்துரையாடலின்போது ஆங்கிலப் பரிச்சயம் அதிகமில்லாத ரசிகர்கள் தமிழிலும் கேள்விகள் கேட்கலாம். அதை இருபுறமும் மாற்றி மொழிபெயர்த்துச் சொல்ல ஏற்பாடு செய்திருந்தனர். எவ்வளவு சிறப்பான விஷயம் இது! கல்லூரி மாணவர்கள், சினிமாவில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் திரைப்பட விழாவில் ‘படிமை’ மாணவர்களுடன் இணைந்து தன்னார்வலர்களாகவும், புகைப்படக்காரர்களாகவும் திறம்பட ஆர்வமாய்ப் பணியாற்றினர். தன்னார்வலர்கள் திரைப்பட விழாவுக்கான போஸ்டர்களைத் தாங்களே முதல்நாள் இரவு முழுவதும் மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் நகரின் தெருக்களில் ஒட்டியிருந்தனர்.

பார்வையாளர்கள் அமைதியாக வரிசையில் நின்று ஒவ்வொரு திரையிடலுக்கும் சென்றனர். படம் முடிந்து முழுடைட்டில் முடிந்தபிறகுதான் மக்கள் வெளியேறினர். இது எந்தத் திரைப்பட விழாவிலும் காணக் கிடைக்காதது. ஒவ்வொரு திரையிடல், கலந்துரையாடல் முடிந்த பின்னரும் பலர் தங்கள் நண்பர்களுக்குள் படங்கள் குறித்து விவாதித்ததைப் பார்க்க முடிந்தது. திரைப்பட இயக்குநர்களுடன் அரங்கில் கலந்துரையாடல் முடிந்தாலும் ஆர்வமிக்க நபர்கள் வெளியிலும் அவர்களைச் சூழ்ந்துகொண்டு வெகுநேரம் உரையாடியதைக் காண முடிந்தது. இயக்குநர்களும் ரசிகர்களுடன் ஒன்றினர்.

அரங்கில் கலந்துரையாடல் முடிந்த பின்னர் வெளியே ரசிகர்களுடன் ஆர்வமாக உரையாடும் தேவசிஷ் மகிஜா

படங்களுக்கான விருதுகள் மற்ற திரைப்பட விழாக்களைப் போல் தனி நடுவர் குழு தீர்மானிக்காமல் இவ்விழாவை நடத்தும், படங்களைப் பார்க்கும் மக்களைக் கொண்டே தேர்ந்தெடுக்கப்பட்டன. ஒரு படைப்பாளிக்கு மக்களின் அங்கீகாரத்தைவிட வேறு என்ன வேண்டும்? அந்த வரத்தினைப் படைப்பாளிக்குத் தந்து பெருமைப்பட வைத்தது சென்னை சுயாதீனத் திரைப்பட விழா! IFFCஇல் முழுநீள சுயாதீனத் திரைப்படங்களில் சிறந்த திரைப்படத்திற்கு ‘மரகதப்புறா’ விருதும், சிறந்த ஆவணப்படத்திற்கு ‘கருப்பு’ விருதும், சிறந்த குறும்படத்திற்கு ‘தமிழ் ஸ்டுடியோ’ விருதும் வழங்கப்படும். இதைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பினை படம் பார்த்த ஒவ்வொரு பார்வையாளரும் தங்களது மதிப்பெண் மூலமாகத் தீர்மானிக்க வேண்டும். இம்முறைக்கு ‘மக்கள் விருது வாக்கெடுப்பு (People’s Choice Award Voting) என்று பெயர். இதற்காக ஒவ்வொரு திரையிடல் முடிவிலும் பார்வையாளரிடம் ஒரு நீண்ட படிவத்தினை வழங்கி பார்த்த படங்களுக்கு நேர்மையாக மதிப்பெண் போட வலியுறுத்தினர். மூன்று திரையரங்க வாசலிலும் IFFC வாக்குப்பெட்டிகளும் வைத்திருந்தனர்.

இவ்வருட விழாவில் தேவசிஷ் மகிஜாவின் Bhonsle, ரீமா தாஸ் இயக்கிய Bulbul Can Sing, ஜீட் ரத்னம் இயக்கிய இலங்கை ஆவணத் திரைப்படமான Demons in Paradise, சனல்குமார் சசிதரனின் உன்மாதியுட மரணம் (Death of Insane), இலங்கையைச் சேர்ந்த அசோகா ஹந்தகாமாவின் Let Her Cry, இலங்கை இயக்குநர்கள் அசோகா ஹந்தகாமா, பிரசன்ன விதானகே, விமுக்தி ஜெயசுந்தரா இயக்கிய படமான Her. Him. The Other, மலையாள இயக்குநர் சஞ்சு சுரேந்திரனின் Aeden, விழாவில் இடம்பெற்ற ஒரே தமிழ்த் திரைப்படமான அம்ஷன் குமாரின் மனுசங்கடா (Cry Humanity), பஞ்சாப் இயக்குநர் குர்வீந்தர் சிங்கின் Chauthi Koot, பதினொன்று வங்காள இயக்குநர்கள் இயக்கிய Sincerely Yours, Dhaka, சஞ்சய் நாக் இயக்கிய இந்தித் திரைப்படமான Yours Truly, ஈஸ்வர் ஶ்ரீகுமார் இயக்கிய நாகாலாந்து திரைப்படமான Up Down and Sideways, சந்தோஷ் பாபு சேனன் மற்றும் சதீஷ் பாபு சேனன் இயக்கிய மலையாளத் திரைப்படமான Sunetra – The Pretty Eyed Girl, ரவி ஜாதவ் இயக்கிய Nude, ஆதித்யா விக்ரம் சென்குப்தா இயக்கிய Jonaki, மற்றும் சந்திரசேகர் இயக்கிய Fireflies in the Abyss ஆகிய படங்கள் பெரும் திரளான பார்வையாளர்கள் கூட்டத்தினை ஈர்த்ததைக் காண முடிந்தது.

நான் பார்த்தவற்றில் எனக்குப் பிடித்த திரைப்படங்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில் விழாவின் ஆரம்பத் திரைப்படமான போன்ஸ்லேவைப் பிரசாத் பிரிவியூ தியேட்டரில் பார்த்தேன். தேவசிஷ் இயக்கிய முதல் திரைப்படமான ‘அஜ்ஜி’ பாலியல் வல்லுறவுக்கு எதிராக நெஞ்சை அதிரவைக்கும் சம்பங்களுடன் படமாக்கப்பட்டிருந்தது. அது எனக்கு மிகவும் பிடித்த படமாகவும் இருந்ததால் அவரின் இரண்டாவது திரைப்படமான ‘போன்ஸ்லே’ வைப் பார்த்தேன். இதிலும் மிரட்டியிருந்தார் தேவசிஷ். ‘போன்ஸ்லே’ என்ற தனிமனிதனின் கதையாகப் படம் பயணித்தாலும், மும்பையின் இருண்ட மறுபக்கத்தை இப்படம் காட்டியது. அங்குக் குடியேறிப் பணிபுரிந்து வாழும் பீகாரிகளை மராட்டியர்கள் நடத்தும்விதம், அவர்களுக்குள்ளான மோதல்கள், அதன் பின்னால் இருக்கும் அரசியல், பாலியல் வல்லுறவுக்கான எதிர்வினை எனப் படம் கோடிட்டது. அரங்கு நிறைந்திருந்தது. படம் முடிந்ததும் தேவசிஷ் அரைமணி நேரம் பார்வையாளர்களுடன் உரையாடினார். இன்னொரு முத்தாய்ப்பாக இப்படத்துடன் மற்றொரு ஆரம்பத் திரைப்படமாக, இந்திய நவ யதார்த்த அரசியல் சினிமாவின் பிதாமகரான மிருணாள் சென்னை நினைவுகூறும் விதமாக, அவரின் க்ளாஸிக் திரைப்படமான ஏக் தின் பிரதிதின் (Ek Din Praditin) பிரசாத் 70MM அரங்கில் திரையிடப்பட்டது.

[The World of Apu இதழுக்காக மிருனாள் சென்னின் Kharij திரைப்படம் பற்றிய அமித் அகர்வாலின் The Case is Closed ஆங்கிலக் கட்டுரையை இங்குப் படிக்கலாம்.]

சஞ்சய் நாக் இயக்கிய Yours Truly அற்புதமான கதையம்சம் கொண்ட படம். ஐம்பது வயதைக் கடந்த பெண்மணி திருமணம் செய்துகொள்ளாமல் தனியே வாழ்கிறாள். அலுவலகத்தில் அவளுக்கு உற்ற நண்பர்கள் இல்லை. அவளைக் கிண்டல் செய்யும் நபர்களே இருக்கின்றனர். தினசரி ஜனநெருக்கடி மிகுந்த கல்கத்தாவின் ரயிலில் பயணிக்கும் அந்தப் பெண் ஒரு கட்டத்தில் அந்த ரயிலில் அறிவிப்புகள் செய்யும் அறிவிப்பாளரின் குரலைக் காதலிக்கத் தொடங்குகிறாள். பயணத்தில் அவளுடனே அக்குரல் பாந்தமாய்ப் பயணிக்கிறது. பின் தொடர்கிறது. தனிமையான தருணங்களில் ஆறுதல் சொல்லி ஆற்றுப்படுத்துகிறது. முக்கியமான முடிவுகள் எடுக்க தீர்வு சொல்கிறது. இவ்வாறு பயணிக்கும் கதையில் யாரென்று தெரியாத அந்த அறிவிப்பாளரின் குரலின் மீது காதல் வயப்பட்டுக் காதல் கடிதங்கள் எழுதுகிறாள். அந்தக் குரல் அவளுடனே இருப்பதாகவும் எண்ணுகிறாள். அவள் குடியிருக்கும் இடத்தில் இருக்கும் மனிதர்கள், கல்கத்தாவின் ரயில் நிலையங்கள், ரயில் உள்ளே நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகள், தனது தங்கை வந்ததும் அவளுடன் சேர்த்து செய்யும் சேஷ்டைகள் போன்றவையும் படத்தில் மனதிற்கு நெருக்கமாக இருக்கின்றன. படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கொரில்லா படமாக்கல் (Guerilla filmmaking) முறையில் படம்பிடிக்கப்பட்டுள்ளது, நிறைய காட்சிகள் ஐபோன்களால் எடுக்கப்பட்டுள்ளது, மிகக் குறைவான பட்ஜெட் ஆனாலும் அதை வெளிக்காட்டாத படத்தின் தொழில்நுட்பத் தரம் போன்ற சுவாரஸ்யமான தகவல்களை இயக்குநர் சஞ்சய் நாக் பகிர்ந்துகொண்டார்.

இலங்கையில் இருந்து வந்திருந்த ஜீட் ரத்தினத்தின் ஆவணப்படமான Demons in Paradise கடுமையான விவாதத்தை இவ்விழாவில் கிளப்பியது. இது கான் [Cannes] திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படம். இப்படத்தை உருவாக்க பத்தாண்டுகள் செலவழித்திருக்கிறார் ஜூட். இயக்குநர் தனது பயணத்தின் வழியே பால்யகால நினைவுகளுடன் தனது மக்களின் அழிந்துபோன வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறார். இப்படம் தனி ஈழம் வேண்டி இலங்கையில் ஆயுதம் ஏந்திய பல்வேறு குழுக்களிடையே அதிகாரம் மிக்க குழுவிற்கான போட்டியை, உட்கட்சிப் பூசல்களை விசாரணை செய்கிறது. போர் நடந்த சூழலில் இந்தப் பல்வேறுபட்ட குழுக்களின் செயல்பாடுகளால் மக்களின் வாழ்வாதாரம் சிதைந்து போனதையும் காட்டுகிறது. திரையிடலுக்குப் பிறகான விவாதத்தில் ஜூட் ரத்தினமும், எழுத்தாளர் சாருநிவேதிதாவும் பங்கேற்றனர். அனல் பறந்தது. பார்வையாளர்கள் பலரும், இலங்கையில் இருந்து வந்திருந்த நபர்கள் சிலரும் இப்படம் ஒருதலை பட்சமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும், எல்லாப் போராட்டக் குழுவினரும் மற்ற குழுக்களையும், அவர்களை ஆதரித்த நபர்களையும் இல்லாமல் செய்தன; என்றும் கடும் விமர்சனத்தை வைத்தனர். “இயக்குநர் தன்னுடைய அனுபவங்களின் வாயிலாக இதைப் பதிவு பண்ணியிருந்தாரே தவிர இது முழுக்கவே உண்மை அல்ல!” எனவும் சிலர் குரல் கொடுத்தனர். இயக்குநர் தன் தரப்பில் பதிலளித்த போதும் விவாதத்தின் அக்னி அடங்க நேரமானது என்பதே உண்மை.

அடுத்ததாக அஸ்ஸாம் இயக்குநரான ரீமா தாஸ் இயக்கிய Bulbul Can Sing திரைப்படத்தைக் குறிப்பிட வேண்டும். இவரின் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ போலவே இப்படத்தையும் வெகு சிறப்பாகத் தந்திருக்கிறார். பதின்பருவத்தில் பள்ளிக்குச் செல்லும் சிறுமிகளின் வாழ்க்கையை புல்புல் என்னும் பெண்ணின் கதையாகச் சொல்லியிருக்கிறார். வயதுக்கே உரிய துடுக்குத்தனமும் உடனடி எதிர்பாலின ஈர்ப்பும் பள்ளியில் படிக்கும்போதே காதலில் விழச் செய்கிறது. அற்புதமாகப் பாடக்கூடியவள் புல்புல். பள்ளியில் நடக்கும் கொண்டாட்டங்களையும், உன்னதமான தருணங்களையும் நிகழ்வுகளையும் மிகமிக மனதுக்கு நெருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார் ரீமா. கலாச்சாரக் காவலர்கள் என்ற பெயரில் வரும் சில அரக்கர்களால் அவர்களின் வாழ்வு சிதைக்கப்படும் பொழுது நம் மனதில் எழும் அதிர்வு அடங்க பல நாட்கள் ஆகலாம். படத்தின் இறுதிக்காட்சி நம்மைக் கலங்கடித்துவிடுகிறது. எளிமையும் அழகும் அதிர்வும் நிரம்பிய படமிது.

சனல்குமார் சசிதரனின் திரைப்படமான உன்மாதியுட மரணம் காத்திரமான அரசியல் படமாக வித்தியாசமான வடிவில் வந்திருக்கிறது. ஒற்றைத் தேசியம் என்ற பெயரில் நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைக்கும் ஆட்சியாளர்களின் ஆட்டங்கள், கலாச்சாரக் காவலர்களின் அக்கிரமங்கள், அநீதிக்கு எதிராகப் போராடிய கலைஞர்களைக் கொன்ற கொடூரங்கள், தங்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை மக்கள் எழுச்சியுடன் எதிர்த்தபோது ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்ற அவலங்கள், காவல்துறையினர் அப்பாவி மக்களின் மீது நடத்திய வன்முறை வெறியாட்டங்கள், படைப்பாளிகளின் ஆக்கங்கள் அரசின் மக்கள் நலக் கொள்கைகளுக்கெல்லாம் (?!) எதிராக இருந்தால் அவற்றை வெளியே வரவிடாமல் தடுத்துக் கொன்றுவிடுவதாக மிரட்டுதல் போன்ற ஏதேச்சதிகார அரசாங்கத்தின் முகத்திரையைக் கிழித்தெறிகிறது இப்படம். இந்த நாட்டில் நீங்கள் கனவில் காணும் விஷயங்களுக்குக்கூடச் சுதந்திரம் கிடையாது. அதற்கும் தடை போடப்படும் என்கிறார் சனல். அதனால்தான் “கனவு காண்பது உடல் நலத்திற்குத் தீங்கானது” எனவும் படத்தின் ஆரம்பத்திலே “Thank God”, “Vande Mataram”, இப்படத்தில் எந்தவித கடவுளின் பெயரையோ கடவுளையோ குறிப்பிடவில்லை என்று டைட்டில் கார்டில் போடும்போதே அரங்கு சிரிப்பாலும் கைத்தட்டல்களாலும் நிரம்பியது. படம் முழுதும் கனவில் நடக்கும் நிகழ்வுகளாக நாட்டில் நடந்த, நடக்கும் அக்கிரமங்களைக் காட்சிப்படுத்தியபடி இருந்தார் சனல். தணிக்கை – அரசியல் – சினிமா சார்ந்த உரையாடலில் கலந்துகொள்ள வருகிறார் என்று தொடர்ந்து குழுவினர் அறிவித்தபடியே இருந்தாலும், எதிர்பார்த்தபடி சனல்குமார் சசிதரன் சென்னைக்கு வராமல் போனது ஏமாற்றமளித்தது.

ரவி ஜாதவ்வின் நியூட், இவ்வாண்டு IFFCஇல் இரண்டு அரங்கில் ஒரே நேரத்தில் திரையிடப்பட்டுக் கிட்டத்தட்ட ஆயிரம் பார்வையாளர்கள் பார்த்த ஒரே படம் என்ற பெருமையைப் பெற்றது. சென்னை சுயாதீனத் திரைப்பட விழாவின் நிறைவு விழா முடிந்தபிறகு ஏழரை மணிக்குத் திரையிடத் திட்டமிட்டிருந்தனர். நிறைவு விழா பிரசாத் 70MM அரங்கில் பெரும் கூட்டத்தில் சிறப்பாக நடந்தபடியிருக்க, நேரம் கடந்ததும் படம் திரையிடயிருந்த பிரசாத் ப்ரிவ்யூ அரங்கில் சுமார் நானூறுக்கும் அதிகமானோர் வரிசையில் நிற்கத் தொடங்கினர். இங்கும் கிட்டத்தட்ட நானூறு நபர்கள் இருக்க இவ்வளவு நபர்கள் ஒரே அரங்கில் படத்தைப் பார்க்கும் சாத்தியம் இருக்காது என்பதை உணர்ந்த விழா குழுவினர், அனைவரும் இப்படத்தினைத் தவறாமல் பார்க்க உடனடியாக படத்தின் இயக்குநரிடமும், அரங்க உரிமையாளர்களிடமும் உரிய அனுமதி பெற்று இரு அரங்கிலும் திரையிட்டனர்.

2017 கோவா இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் குறிப்பாக இதன் பெயருக்காகவும், படத்தில் வரும் ஒரு காட்சி ஓவியர் எம்.எப்.ஹுசைனை ஒட்டி இருந்ததைக் கருத்தில் கொண்டும் திட்டமிட்டு வெளியேற்றப்பட்ட படம் நியூட். கணவனின் தவறான பழக்கத்தால் வெறுப்படைந்து தன் ஒரே மகனை அழைத்துக்கொண்டு மராத்தியக் கிராமமொன்றில் இருந்து மும்பைக்கு வந்துவிடுகிறாள் அவள். அக்கா வீட்டில் தங்கி மகனைப் படிக்க வைப்பதற்காக வேலை தேடுகிறாள். மகனுக்குச் சிறுவயதிலேயே ஓவியங்கள் வரைவதில் அதிக ஆர்வமிருக்கிறது. அவளது அக்கா அந்நகரில் உள்ள புகழ்பெற்ற ஓவியச் சிற்பக் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் வரைவதற்காக நிர்வாண மாடலாக வேலை செய்கிறாள். குடும்ப வருமானத்திற்காக இதைச் செய்கிறாள். மிகுந்த நெருக்கடியிலும் குழப்பத்திலும் வருமானம் வேண்டியும் மகனின் படிப்பிற்காகவும் அவளும் நிர்வாண மாடலாகிறாள். கதவு மூடப்பட்ட தனியறையில் மாணவர்கள் அவள் உடலை வரைகின்றனர். நிர்வாணம் அங்குக் கலையாகத்தான் பார்க்கப்படுகிறது. மனித உயிரின் ஆன்மா அங்குச் சுடர் விடுகிறது. அவர்கள் இருவரும் இந்த வேலைதான் பார்க்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது. கல்லூரி மாணவர்கள் தவிர வெளியில் தனியாக வரையும் யாரிடமும் அவள் செல்வதில்லை; மகனை வெளியூரில் படிக்க அனுப்பிய பிறகு, அதிகப் பணத்தேவையால் தனது மாணவர் ஒருவருடன் செல்கிறாள். இதற்கிடையில் ஒரு பிரபலமான ஓவியரிடம் வரையச் செல்லும் அவள், “நீங்கள் ஏன் நிர்வாண ஓவியம் வரைகிறீர்கள்?” எனக் கேட்க, அவர் அளிக்கும் பதில் உடலைப் பற்றி இதுவரை இருந்த கற்பிதங்களைச் சுக்கலாக்குகிறது. இத்திரைப்படமே அதைத்தான் செய்கிறது. படம் முழுக்கவே பல முறை நிர்வாண ஓவியங்கள் வரையும் காட்சி வந்தாலும் எதுவுமே வலிந்து திணிக்கப்படவில்லை.

முதல்முறை நிர்வாணமாக நிற்கத் தயங்கி அழும் அவள் பின்னாளில் அதை சாதாரணமாகக் கடக்கிறாள். நிர்வாண ஓவியங்களைப் புரிந்துகொள்ளாத கலாச்சாரக் காவல் கூட்டம் அக்கல்லூரிக்குள் புகுந்து ஆரவாரம் செய்து அடித்து உடைக்கின்றனர். ஆசிரியர்களும் மாணவர்களும் தாக்கப்படுகிறார்கள். அதன் பிறகு படம் பயணிக்கும் விதம் நம் மனதில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. அரங்கில் படம் முடிந்து பேரமைதி நிலவியது. ஒருவர் கூட எழவில்லை. இப்படத்தில் தாயாக, நிர்வாண மாடலாக நடித்த கல்யாணி மூலே மக்களுடன் கலந்துரையாட வந்தபோது அரங்கில் இருந்த அத்தனை பேரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி மரியாதை செய்தனர். நீண்ட நேரமானது கைத்தட்டல்கள் அடங்க. கல்யாணி நெகிழ்ந்து போயிருந்தார். தலைவணங்கி சென்னை மக்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். யாருமே எதுவுமே கேள்வி கேட்கவில்லை. அரங்கு நிச்சலன மௌனத்தில் இருந்தது. பிறகு கலந்துரையாடலில் உண்மையிலேயே அக்கல்லூரியில் நிர்வாண மாடலாக மூன்று பெண்கள் மட்டுமே சுமார் 30 ஆண்டுகளாகப் பணி புரிகின்றனர் என்றும், பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் இருக்கின்றனர் என்றும் கூறினார். இங்கு நீங்கள் பார்த்தது இந்திய அரசால் தணிக்கை செய்யப்பட்ட பிரதி; இது இண்டர்நேஷனல் வெர்ஷன் அல்ல என்றார். துளிகூடக் காம எண்ணத்தைப் படம் தனது காட்சிகளால் கடத்தாதது இப்படத்தின் மிகச்சிறந்த விஷயம் என்ற அனைவரின் எண்ணத்தையும் பார்வையாளர் ஒருவர் வெளிப்படுத்தினார். மிகமிக மனதுக்கு நெருக்கமான படமாகவும் கலந்துரையாடலாகவும் இருந்தது.

குயர் லென்ஸ் பிரிவில் திரையிடப்பட்ட குறும்படங்களான ‘ஹேப்பி பர்த்டே மார்ஷா!, சிஸக் மற்றும் திரைப்படமான ரபீக்கி என்னைக் கவர்ந்தன. சர்ரியலிச முறையில் எடுக்கப்பட்டிருந்த ஜோனாகி எனக்குப் புதியதாகவும், வித்தியாசமான திரைமொழி கொண்டதாகவும், குழப்பமூட்டுவதாகவும் இருந்தது. குர்வீந்தர் சிங்கின் படமான காபிரியல் கார்ஷியா மார்க்வெஸ் சிறுகதையினைத் தழுவி எடுக்கப்பட்ட Sea of Lost Time படமும் குறிப்பிடத்தக்கது. பூனே திரைப்படக் கல்லூரி நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்ட இப்படம் பிறகு அவர்களாலேயே தடை செய்யப்பட்ட படமுமாகும். இப்படம் ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. குழுவிவாதங்களைப் பொறுத்தவரை நான் பார்த்தவைகளாக “தமிழ் சினிமாவில் பால்புதுமையினர்” பற்றிய விவாதமும், “அதிகார அரசியல் – சினிமாவும் தணிக்கையும்”, “டிஜிட்டல் டவுன்லோட் கலாச்சாரம் ஓங்கியிருக்கும் காலகட்டத்தில் சுயாதீன மற்றும் கலைப்படங்களில் நிகழும் மாற்றங்கள்” ஆகியவை செறிவான கருத்துக்களை முன்வைத்தன. குர்வீந்தர் சிங்கும், மலையாள இயக்குநர் சஞ்சு சுரேந்திரனும் பங்குபெற்ற “மணிகௌலின் வழித்தடத்தில் வருங்கால சினிமா” என்கிற தலைப்பில் நடந்த கலந்துரையாடலும் சிறப்பான அனுபவப் பகிர்வாக இருந்தது.

[The World of Apu இதழுக்காக குரவீந்தர் சிங் கொடுத்த ஆங்கில நேர்காணலை இங்குப் படிக்கலாம்.]

சென்னை சுயாதீனத் திரைப்பட விழாவின் நிறைவு விழா பெரும் மக்கள் கூட்டத்துடன் கவிஞர்-இயக்குநர் லீனா மணிமேகலை, ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம், இயக்குநர்கள் மிஷ்கின், அம்ஷன் குமார், ராசி அழகப்பன், ஈஸ்வர் ஶ்ரீகுமார், சஞ்சய் நாக், அபு ஷாகித் இமோன் (வங்காள தேசம்), ஜூட் ரத்தினம் (இலங்கை), குர்வீந்தர் சிங் (பஞ்சாப்), சஞ்சு சுரேந்திரன் (கேரளா), கல்யாணி மூலே, சதீஷ் பாபுசேனன், சந்தோஷ் பாபுசேனன் (கேரளா), கோவிந்த் ராஜூ (மராத்தி) ஆகிய முக்கியமான சிறப்பு விருந்தினர்களுடன் நடந்தது. விழா இயக்குநர் அருண்.மோ இந்த விழாவிற்காகக் கடுமையாக உழைத்த அனைத்து நண்பர்கள், வந்திருந்த மற்ற இயக்குநர்கள், தன்னார்வலர்கள், புகைப்படக்காரர்கள், ஊடகத்தினர், எல்லாவற்றையும்விட இந்த கடின உழைப்பு அங்கீகரித்து வந்து விழாவை வெற்றி பெற வைத்து அதிரச்செய்த திரளான மக்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இவ்வாண்டு சென்னை சுயாதீனத் திரைப்பட விழாவின் விருதுகளில் ‘மரகதப்புறா விருதினை’ குர்வீந்தர் சிங் இயக்கிய சுயாதீனத் திரைப்படமான Chauthi Koot தட்டிச் சென்றது. சிறந்த ஆவணப்படத்திற்கான கருப்பு விருதினை ஈஸ்வர் ஶ்ரீகுமார், அனுஷ்கா மீனாட்சி இயக்கிய Up Down and Sideways பெற்றது. சிறந்த குறும்படத்திற்கான தமிழ் ஸ்டுடியோ விருதினை கோவிந்த் ராஜூ இயக்கிய மராத்தியக் குறும்படமான Sonyacha Amba பெற்றது. நானும் எனது சிறிய நண்பர்கள் குழுவும் விருதுபெற்ற மூன்று படங்களையும் பார்க்காமல் தவற விட்டிருந்தோம் என்பது வருத்தமாக இருந்தது. வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் பார்க்க வேண்டும் என முடிவெடுத்துக்கொண்டோம். வெற்றி பெற்ற இயக்குநர்களுக்கு விருதுகளை பி.சி.ஶ்ரீராம் வழங்கி கௌரவித்தார். விழாவில் பங்குபெற்ற திரைப்படங்களின் இயக்குநர்கள் இவ்விழா தங்களை வெகுவாகக் கவர்ந்ததைச் சொல்லி இனிவரும் ஆண்டுகளில் வர விரும்புவதையும் தெரிவித்தனர். மிஷ்கின் தனது வசீகரமான பேச்சால் 45 நிமிடங்கள் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டார். திரைப்பட விழா சிறப்பு வெளியீட்டுப் புத்தகங்களை மேடையில் வெளியிட்டனர். நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது. கிட்டத்தட்ட மூன்று நாட்கள் மூச்செல்லாம் சினிமாவாக இருக்கும்படி வேறு உலகத்தில் சஞ்சரித்து வந்தது போன்ற அற்புதமான அனுபவம் எனக்கு மட்டுமல்ல விழாவில் பங்கேற்ற அனைவருக்குமே இருந்திருக்கும் என்பது மறுக்கவே இயலாது. மொத்தத்தில் இந்த ஆண்டு IFFC மகத்தான பேரனுபவம்!


எழுத்தாளரைப் பற்றி

பெரம்பலூரைச் சொந்த ஊராகக் கொண்ட லெட்சுமி நாராயணன் பி. சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எளிய மக்களின் நகரான சென்னையில் தன்னைக் கரைத்துக் கொண்டவர்களில் ஒருவர். வாசிப்பிலும், எழுத்திலும், சினிமாவிலும் தீராத அலாதியான ஆர்வம் கொண்டவர். தொடர்ந்து எழுத்திலும், சினிமாவிலும் தன்னை முன்னெடுத்துச் செல்ல விரும்புபவர்.

புகைப்படங்கள் உதவி: IFFC புகைப்படத் தன்னார்வலர்கள் குழு.
நன்றி: திருத்தங்கள் செய்யவும் கட்டுரையை மெருகேற்றவும் உதவிய சுஜாவிற்கு.

Read the English version of this article here.

 

Did you like what you read? Support us as we explore film cultures from around the world; experience cinema in new ways with us. Let us keep The World of Apu free for all!

Become a Patron!