Categories: Interviews

ஆர்.அபிலாஷுடன் ஓர் உரையாடல்

16 min read

ஆர். அபிலாஷ் இதுவரை 10 நூல்கள் பிரசுரித்திருக்கிறார். இவற்றில் மூன்று நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழியாக்கம், மூன்று கட்டுரை நூல்கள், ஒரு வாழ்க்கை சரிதை ஆகியவை அடங்கும். 2014ஆம் ஆண்டு இவரது நாவலான கால்கள் சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருதை வென்றது. குமுதம் வார இதழில் கிரிக்கெட்டோகிராபி எனும் தொடரை 2017இல் எழுதினார். தினமணி இளைஞர் மணி இணைப்பில் கடந்த மூன்று வருடங்களாக வாங்க இங்கிலிஷ் பேசலாம் எனும் தொடரை எழுதி வருகிறார். உயிர்மை, தீராநதி ஆகிய இதழ்களில் தொடர்ந்து கட்டுரை, சிறுகதைகள் வெளியிட்டு வருகிறார். தற்போது பெங்களூரூவில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த ஜனவரி மாதம் இவர் எழுதிய 90களின் தமிழ் சினிமா[1] எனும் கட்டுரைத் தொகுப்பு வெளிவந்தது. தொண்ணூறுகளில் வெளிவந்த சினிமாக்கள் சொல்ல வரும் செய்திகளைப் பற்றியும், அவை சினிமாவிலும் சமூகத்திலும் செலுத்தும் தாக்கம் பற்றியும் விவாதிக்கும் இப்புத்தகத்தை முன்வைத்து ஆர்.அபிலாஷை எங்கள் இதழ் சார்பில் அதியன் பேட்டி கண்டார்.

அதியன்: ஒரு புனைகதை எழுத்தாளராக இருந்துகொண்டு சினிமாவைப் பற்றிக் கட்டுரைகள் எழுதுவது என்ன மாதிரியான அனுபவத்தைக் கொடுக்கிறது?

ஆர். அபிலாஷ்: நான் முழுநேர சினிமா விமர்சகன் அல்ல. நான் ஆர்வம் கொள்ளும் பல்வேறு துறைகளில் சினிமாவும் உண்டு. ஓர் எழுத்தாளனாய் நான் மாறுபட்ட கோணங்களை, புதிய மொழி ஒன்றை, எனக்கான உணர்வுநிலையை சினிமா விமர்சனத்துக்குள் கொண்டு வருவதாய் நம்புகிறேன். உதாரணமாய், தொண்ணூறுகளில் இருந்து ரெண்டாயிரத்தின் முற்பகுதி வரையிலான படங்களில் ஒருவித ஒடுக்கப்பட்ட ஆண்மை சித்தரிக்கப்பட்டதை, புரொமேன்ஸ் பேசப்பட்டதை, சொல்ல முடியாத காதலின் அவஸ்தையை நம் சினிமா காட்சிப்படுத்தியதைப் பற்றி என் சினிமா கட்டுரைகளில் விவாதித்திருக்கிறேன். அதாவது, என் சமூக, பண்பாட்டுக் கட்டுரைகளில், புனைவுகளில் பேச முடியாத சில விசயங்களை சினிமாவை மையம் கொண்டு என்னால் பேச முடிந்திருக்கிறது.

அதியன்: எல்லா காலங்களிலும் ஏதோவொரு கலைவடிவம் மக்களிடையே பிரசித்தி பெற்றதாக இருந்து வந்துள்ளது. இன்று அனைவராலும் பேசப்படும் கலையாகச் சினிமா இருப்பது பற்றி உங்கள் கருத்து?

ஆர். அபிலாஷ்: இது சினிமா ஊடகத்தின் காலம். நான் ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் இயக்குநர் ராமைச் சந்தித்த போது “இனிமேல் படைப்புச்செயல்கள் காட்சி ஊடகம் வழியாகவே நிகழும். எழுத்து பின்னுக்கு நகர்ந்து விடும்” என்றார். ஓரளவுக்கு அவர் சொன்னதே இன்று நடந்து வருகிறது. என் கல்லூரியில் இளம் எழுத்தாளர்களை விட இளம் இயக்குநர்களை, இளம் புகைப்படக் கலைஞர்களையே அதிகம் காண்கிறேன். மேலும் இன்றைய தலைமுறைக்குக் காட்சிப்பூர்வமாய்ச் சிந்திப்பது இயல்பாகவும் வருகிறது.

இன்னொரு பக்கம், தமிழகம் என்றுமே சினிமாவைக் கொண்டாடிய மாநிலமே. இங்கு சினிமாவில் இருந்து அரசியல் ஆளுமைகள் மற்றும் தலைவர்கள் தோன்றுவது இன்றும் தொடரும் ஒரு பாணி. கமல், ரஜினி, விஜய், பாரதிராஜா, அமீர், ராம் என நிர்வாக அரசியல், தமிழ் தேசிய அரசியல் எனப் பேசுகிறவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு சிறு சொல்லும் இங்கே பெரும் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. சினிமாவில் வலுவான இடம்பெற்றிராத, இரண்டாம் நிலை நடிகையாகச் சில காலம் தொடர்ந்த கஸ்தூரி அரசியல் பேசினால்கூட பலர் காதுகொடுத்துக் கேட்டு முகநூலில் சர்ச்சிக்கிறார்கள்.

ஏன் இந்தளவு சினிமா மோகம் நம்மவர்களுக்கு என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. இதன் ஒரு நல்விளைவு கடந்த பத்தாண்டுகளில் நம் சினிமா தொழில்நுட்ப ரீதியாய்ப் பல முக்கிய திரைக்கலைஞர்களை, படைப்புகளைக் கொடுத்துள்ளது. மலையாளத்தில் ஒரு பி.ஸி ஸ்ரீராமோ, மணிரத்னமோ, மிஷ்கினோ, ராமோ இல்லை. அவர்களின் சந்தோஷ் சிவன் கூட அதிகமும் வெளிமாநிலங்களிலே வேலை செய்திருக்கிறார். நல்ல திரைமொழியைக் கொண்டிருந்த பத்மராஜனுக்குக் கூட அங்கு வழித்தோன்றல்கள் இல்லை. நாடகத்தை வித்தியாசமான கதை அமைப்புடன் எடுப்பதே இன்றும் மலையாள சினிமா. அதில் உளவியல் நுணுக்கங்கள் உண்டு; வாழ்க்கைப் பார்வை உண்டு. ஆனால் சினிமா மொழி இல்லை. மகேஷிண்டே பிரதிகாரம் ஆர்வமூட்டும் கதை ஆழம் கொண்ட படம்தான். ஆனால் அது சினிமா இல்லை. வசனங்களை விடுத்து கதை சொல்ல இன்றும் மலையாளிகளுக்குத் தெரியாது.

அதியன்: இவ்வளவு மக்கள் கவனம் பெற்று வந்தாலும், அதற்கு ஏற்ற பொறுப்புணர்வுடன் தமிழ் சினிமா உலகம் நடந்து கொள்கிறதா?

ஆர். அபிலாஷ்: சினிமா போன்ற வெகுஜன ஊடகமோ இலக்கியம் போன்ற தீவிர ஊடகமோ பொறுப்புணர்வு கொள்ள அவசியம் இல்லை என்பது என் கருத்து. படைப்பாளி சமூகத்தை வழிநடத்துகிறான், சமூகத்தில் தாக்கம் செலுத்துகிறான், ஆகையால் அவன் சமூகத் தீமைகளை எதிர்க்க வேண்டும், முறியடிக்க வேண்டும் என்பது ஆரம்ப கால மார்க்ஸியர்களின் நம்பிக்கை. 1922இல் லெனின் சோவியத் சினிமாவை எப்படி எடுக்க வேண்டும் என்பது பற்றி ஓர் அதிகாரபூர்வக் குறிப்பை வெளியிட்டார். அதில் இயக்குநர்கள் தம் அரசின் கொள்கைகளை ஆதரிக்கும் விதமாய் மட்டுமே படம் எடுக்க வேண்டும் என்றும், அதைத் தன் கட்சி கண்காணிக்கும் என்றும் கூறுகிறார். ஏனெனில் மக்கள் சித்தாந்தத்தின் படி வாழ்கிறார்கள், சித்தாந்தத்தை மக்களிடம் பரப்பும் முக்கிய பணியை சினிமா எனும் ஊடகம் சிறப்பாய்ச் செய்ய முடியும் என அவர் நம்பினார். நம்மூர் மார்க்ஸியர்கள் பண்பாட்டு நிலையில் இதை மென்மையாய் இன்றும் வலியுறுத்துகிறார்கள்.

மார்க்ஸியர்களே நம் மாநிலத்தில் இலக்கியத்துக்கும் கருத்தாக்கங்களுக்கும் உரம் போட்டவர்கள். ஆக, இன்றும் யாராவது ஒரு வாசகரோ சித்தாந்தவாதியோ எழுத்தாளனோ படைப்பு என்பது பிரச்சாரம் எனும் கருத்தை வலியுறுத்துவதை நாம் பார்க்கிறோம். எனக்கு இந்நிலைப்பாட்டுடன் உடன்பாடில்லை.

சமூகத்தில் பல்வேறு உணர்வு, பண்பாட்டு, கருத்து நிலைகள் ஊடாடுகின்றன. அவற்றுக்கு வெளிப்பாட்டு வடிவம் ஒன்றை ஒரு கலைஞன் அளிக்கிறான். சாதிப் பெருமிதத்துக்கு ஒரு படம் வெளிப்பாட்டை அளிக்கிறதென்றால் (தேவர் மகன்) சாதியத்தை மீறி சமூகம் செல்ல வேண்டிய பாதையையும் ஒரு படம் வலியுறுத்துகிறது (மெட்ராஸ், கபாலி). இரண்டு வகையான படங்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். தொண்ணூறுகளில் கமலும் பாரதிராஜாவும் ரெண்டாயிரத்தில் சசிகுமாரும் இங்கு வலுவுற்றிருந்த சாதியக் குரல்களை விவாதித்ததனால்தான் ரஞ்சித் போன்ற ஒருவர் தோன்றி அதற்கு எதிர்க்குரலை, தலித் நுண்ணுணர்வை சினிமா மொழிக்குக் கொடுக்க முடிந்தது. ரஞ்சித்தின் படங்களும் சமூகத்தைக் கால் இஞ்ச் கூட திருத்தி விடும் என நான் நம்பவில்லை. ஆனால் உரையாடலுக்கு அவை வழிவகுக்கின்றன. மாறுபட்ட திரைமொழியை, ஒலி மற்றும் ஒளி பிம்பங்களை நம் அரசியல் பண்பாட்டுக் களத்திற்கு அவை அளிக்கின்றன.

மக்கள் இதையெல்லாம் கண்டு கைதட்டி விட்டு வாழ்க்கையைத் தொடர்வார்கள். மனிதன் சிந்தித்து அதைச் செயல்படுத்தி வாழ்வதில்லை. சூழலும் உள்ளுணர்வும் அன்றாடச் சவால்களுமே நடப்பு வாழ்வைத் தீர்மானிக்கின்றன. எண்ணங்களோ கருத்துக்களோ அல்ல.

சமூக நீதிக் கருத்துகள் கொண்ட, சரியான அரசியல் மொழி கொண்ட பத்து படங்கள் கொடுத்து ஒருவரால் இச்சமூகத்தை திருத்தி விட முடியுமென்றால் இவ்வுலகமே சொர்க்கமாய் இருக்குமே! துரதிஷ்டவசமாய், வாழ்க்கை அத்தனை எளிதில்லை.

இதற்கு மாறாகவே உண்மை இருக்க வேண்டும் என நாம் ஆசைப்படுகிறோம். வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்வது போல் சமூகத்தையும் சுத்தமாக்கலாம் என விழைகிறோம். ஆனால் அது உண்மையில் சாத்தியமில்லை. நமது கருத்துகளும் மாற்றுக்கருத்துகளும் பண்பாட்டு வெளிக்குள் மட்டுமே உழல்கின்றன. அதைக் கடந்து அவை வாழ்க்கையைப் போய்த் தொடுவதில்லை.

உதாரணத்திற்கு, திராவிட இயக்கம் இங்கு தோன்றி உச்சம் பெற்ற காலத்தில் கலைஞர், எம்.ஜி.ஆர், எம்.ஆர் ராதா படங்களில் முற்போக்கு பகுத்தறிவுவாதப் படங்கள் நிறைய எடுக்கப்பட்டு மக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றன. பண்பாட்டுத் தளத்தில் வலுவான உணர்ச்சிகரமான பகுத்தறிவுக் கதையாடல் ஒன்று இதனால் உருவானது. இந்தக் கதையாடல் பின்னர் அரசியல் தளத்திற்குச் சென்று கோலோச்சியது. இது அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் முதல்வர்கள் ஆக உதவியது. ஆனால் தமிழகம் அன்று முதல் இன்று வரை கோயில்களின் நிலமாகவே உள்ளது. இங்குள்ள பக்தர்களின் எண்ணிக்கை குறையவே இல்லை. திமுக அதிமுக தொண்டர்கள் இறைநம்பிக்கையாளர்கள் மட்டுமல்ல மரபான பல சடங்குகளைத் தீவிரமாய்ப் பின்பற்றுபவர்களும்தாம். நீங்கள் இன்றும் சந்துக்கு ஒரு பிள்ளையார் கோயிலைக் காண்கிறீர்கள். பெரியாரால் ஏன் அத்தனை பிள்ளையார் கோயில்களையும் காணாமல் அடிக்க முடியவில்லை?

இதை அரசியல் சித்தாந்தம் மற்றும் இயக்கத்தின் தோல்வியாக நான் காணவில்லை. இது இப்படித்தான் இருக்க முடியும் என்கிறேன். உலகம் முழுக்க நிலை இதுவேதான்.

ஆனால் தமிழகம் பக்தர்களின் மாநிலமாய் இருந்தாலும் பாஜகவால் இங்கு காலூன்ற முடியவில்லை. ஏனெனில் மதவாதம் என்பது வாழ்க்கை நிலை அல்ல. அது ஓர் அரசியல் கதையாடல். இங்கு ஏற்கனவே பகுத்தறிவுக் கருத்தாடல் வலுவாக உள்ளது. அதை முறியடித்து இந்துத்துவக் கருத்தாடலால் இங்கு முன்வர இயலாது. ஒரு வனத்துக்கு ஒரு சிங்கம்தான். கோயில்களில் திரளும் மக்களைக் கொண்டு பாஜக இங்கு எந்தத் தன்னம்பிக்கையும் பெற முடியாது. ஏனெனில் நடப்பு வாழ்க்கை வேறு சித்தாந்தக் கதையாடல்கள் வேறு.

அதியன்: காதலை லட்சியமாகச் சித்தரிக்கும் புள்ளியில் இருந்து காதலைக் கொண்டாட்டமாகச் சித்தரிக்கும் புள்ளிக்குத் தமிழ் சினிமா வந்துள்ளது. இந்த மாற்றம் சமூக அளவிலும் நிகழ்ந்துள்ளதா?

ஆர். அபிலாஷ்: ஆம். இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதால் இப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன. காதலை ஒன்று மிகவும் உணர்ச்சிகரமாய்ச் சித்தரித்து, அதற்காக வெம்பி வெதும்பி நிலையற்றுத் தவிக்கும் பாணியிலான படங்கள் எடுக்கப்படுகின்றன (கௌதம் மேனனின் படங்கள்). இன்னொரு பக்கம் வெங்கட் பிரபு பாணி உள்ளது. காதலில் நிகழும் போராட்டங்களையும் விளையாட்டாக லேசாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையைக் கொண்டாடுவது இப்போக்கு. இரண்டுமே ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது என் பார்வை.

இன்று நான் கவனிக்கும் காதலர்கள் எப்படியானவர்கள்? ஒன்று, காதலுக்குள் ஓர் அருவிக்குள் குதிப்பது போல் பாய்ந்து விடுகிறார்கள். வெறித்தனமான உன்மத்தமான காதல் இது. ஆனால் இது அவர்களின் நாள் முழுவதையும் ஆக்கிரமிப்பது இல்லை. சொந்த வாழ்க்கையின் பல்வேறு பிரச்சனைகளை அழுத்தங்களை (18 வயதிலேயே கடும் அழுத்தங்கள் இவர்களுக்கு) சற்று நேரம் கடந்து செல்வதற்கான பாலமாய்க் காதலைக் காண்கிறார்கள் இவர்கள். ஆகையால் காதலிக்கும் பொழுதில் பரஸ்பரம் கேள்வி கேட்டும் சோதித்தும் நோகடிக்காமல் ஜாலியாக குதூகலமாய் இருக்க முயல்கிறார்கள். காதலன் அல்லது காதலி தம்முடன் இல்லாத வேளையில் சகஜ வாழ்வுக்கு மீள்கிறார்கள். சினிமாவில் காதல் ஜோடியின் நினைவிலே 24 மணிநேரமும் வாழ்ந்த முரளியின் காலம் முடிந்து விட்டது.

உன்மத்தமான காதல் ஒரு பக்கம், அது இருந்தும் மீளாத தனிமை இன்னொரு பக்கம் – இதுவே இன்றைய காதல் உலகம். இவர்களின் வாழ்வைச் சொல்லும் சினிமாவில் காதல் மிகை உணர்வுகளும் கொண்டாட்டமும் இருப்பதில் எனக்கு ஆச்சரியமில்லை.

அதியன்: மற்றொரு புறம் சிவகார்த்திகேயன் போன்றவர்கள் நடித்தத் திரைப்படங்களில், காதலை ஏற்றுக்கொள்ளாத பெண்களைத் திட்டித் தீர்த்தார்கள். இப்பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதன் மூலம் பெண்களை உடைமைகளாகக் கருதும் ஆபத்தான சிந்தனை இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக நினைக்கிறீர்களா?

ஆர். அபிலாஷ்: பெண்களை உடைமையாய்க் கருதுவதல்ல இந்த இளைஞர்களின் பிரச்சனை. இன்றைய காலகட்டத்துப் பெண்கள் தாம் அப்படி உடைமையாக்கப்படுவதைச் சுலபத்தில் அனுமதிப்பதில்லை. அதே நேரம் அவர்கள் அதை முழுக்க மறுப்பதும் இல்லை. இது ஆண்களுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இந்தப் பெண்களை எப்படிச் சமாளிப்பது என புரியாத இளைஞர்களின் தவிப்பு இந்தப் பெண்களை ஏசும் சிவகார்த்திகேயன் பாணிப் படங்கள் மற்றும் பாடல்களில் வெளிப்படுகிறது.

நாம் இன்றும் முழுமையாக நிலவுடைமைக் காலத்தை விட்டு வெளிவரவில்லை என்பதே சிக்கல். நாம் பாதி அங்கும் மீதி இன்றைய கார்ப்பரேட் நகரமயமாக்கல் முற்போக்குச் சமூகத்திலும் வாழ்கிறோம். இது இன்றைய ஆண்-பெண் உறவுகளில் கணிசமான சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. ஆண்களைப் பற்றிப் புலம்ப பெண்களுக்கு வாய்ப்பிருந்தால் இதை விட மோசமாய் ஆண்களை வையும் பாடல்கள் தமிழில் தோன்றும் என நினைக்கிறேன். உண்மையில், நம் நிலைமை இன்று ரொம்ப அவலமாய் உள்ளது.

பெண்களை உடைமையாய்க் கருதுவது நியாயமா? நிச்சயமாய் இல்லைதான். உண்மையான காதலில் ஆண்களும் பெண்களின் உடைமையாய் இருப்பார்கள். அங்கு ஏற்பும் மறுப்பும் இல்லை. அங்கு ஆக்கிரமிப்பும் உரிமை கொண்டாடலும் இல்லை. அங்கு பரஸ்பர அத்துமீறலும் அதன் திளைப்புமே உள்ளது. இதை நாம் கௌதம் மேனனின் படங்களிலும் தொண்ணூறுகளில் இருந்து இன்று வரை மணிரத்னத்தின் படங்களிலும் காண்கிறோம்.

அதியன்: ஒரு பேராசிரியராகத் தமிழக இளைஞர்களுக்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துங்கள். ஒருவரை ஒருவர் காதலிக்கும் இரண்டு தனிமனிதர்கள் வாழ்க்கையில் ஒன்றிணைய முடியாமல் இருப்பது காதல் தோல்வியா? அல்லது, ஒருவரின் காதலை இன்னொருவர் ஏற்றுக் கொள்ளாதது காதல் தோல்வியா?

ஆர். அபிலாஷ்: காதலர்கள் தம் விருப்பத்தையும் கடந்து இணைய முடியாமல் போவது காதல் தோல்வி அல்ல; அது சமூக அவலம். அதனால்தான் பாலாஜி சக்திவேலின் காதல் உள்ளிட்ட படங்கள் சாதியைப் போன்ற சமூக அவலங்களைச் சாடுகின்றன. ராமின் கற்றது தமிழ், தரமணி ஆகிய படங்கள் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கும் தடைகள், அகச்சிக்கல்கள் எப்படிக் காதலர்களை பிரிக்கின்றன என்பதைப் பேசுகின்றன. மணிரத்னம், கௌதம் மேனன் ஆகியோர் காதல் தோல்வியை அகவயமாய்ப் பார்க்கிறார்கள்; சூழல் எப்படிக் காதலர்களை அகற்றி வைக்கிறது, தவிக்க விடுகிறது, பரஸ்பரம் வெறுத்துப் புண்படுத்த வைக்கிறது என அவர்களின் படங்கள் பேசுகின்றன – இதுவே நிஜமான காதல் தோல்வி. ஆனால் இதுவும் கூட காதல் தோல்வி அல்ல, காதலர்களின் தோல்விதான். காதல் என்றும் தோற்பதில்லை.

அதியன்: காதலைப் பற்றிப் பேசுவதால் கேட்கிறேன். 90களில் வெளிவந்த பிரசித்தி பெற்ற காதல் திரைப்படமான காதலுக்கு மரியாதை படத்துடனான உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆர். அபிலாஷ்: காதலுக்கு மரியாதை என்னைப் பெரிதும் கவரவில்லை. மலையாளத்திலும் அதன் மூலமான அனியத்தி பிறாவு பார்த்திருக்கிறேன்.

இப்படம் காதல் கதையின் பாவனையில் மரபான திருமணத்தை ஆதரிக்கும் ஒன்று. எல்லா காதல் திருமணங்களிலும் ஒரு சுயநலம் உள்ளது. காதலுக்குப் பின் இச்சுயநலத்தை ஜோடிகள் உணர்வார்கள். பெற்றோர்களைத் தவிக்க விட்டு விட்டோமே எனும் கவலை குற்றவுணர்வாகி அவர்களை அரிக்கும். தாம்பத்திய பிரியமும் ஆசையும் ஒரு பக்கம், பெற்றோரை எதிர்த்துப் பிரிந்த தனிமை இன்னொரு பக்கம். இதனிடையிலான மோதலில்தான் காதல் திருமணம் பரிணமிக்கும்.

காதலுக்கு மரியாதை படத்தில் திருமண ஜோடியின் இத்தவிப்பைத் திருமணத்துக்கு முன்பே நிகழ்வதாய், காதலர்கள் பெற்றோரிடமே மீள்வதாய்க் காட்டி இருப்பார்கள். காதலில் இருக்கும் பலரும் இதை உணர்ந்ததால், இப்படம் அவர்களது இம்மன உணர்வுகளைக் கற்பனை செய்து திளைக்க உதவியதால் வெற்றி பெற்றது. படத்தில் காதலுக்கு மரியாதை அளிக்கும் விதம் பெற்றோரே கடைசியில் காதலர்களைச் சேர்த்து வைப்பார்கள். இதன் மூலம் காதல் ஜோடிகள் நிஜத்தில் அனுபவிக்கும் அகப்போராட்டத்திற்கு ஒரு சுலபத் தீர்வையும் பாஸில் அளித்தார். அகப்போராட்டத்தைக் கடந்து வாழ்க்கை – எளிய தீர்வுகளின்றி – எப்படி நகர்கிறது என்று காட்டியிருந்தால் இது மேலும் சிறப்பான படமாக இருந்திருக்கும். அலைபாயுதே இதே அகச்சிக்கலை இதை விட அபாரமாய்க் கையாண்ட படம்.

பாஸிலின் ஆரம்ப காலப் படங்களில் ஒன்றான வருஷம் பதினாறு இதே காதலுக்கான குடும்ப எதிர்ப்புச் சிக்கலை வேறு வகையில் கையாண்டிருக்கும். இப்படத்தின் மலையாள மூலமான எந்நெந்நும் கண்ணேட்டென்றே இன்னும் சிறப்பானது.

அதியன்: பெண் இயக்குநர்களின் திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்கள் பெண்மை குறைந்தவர்களாகவும், ஆண் கதாபாத்திரங்கள் பெண்மை நிறைந்தவர்களாகவும் இருப்பதை ஒரு கட்டுரையில் சுட்டியிருக்கிறீர்கள். உங்களுடைய வேறொரு புத்தகத்தில் (பெண்கள் இப்படித்தான் நினைக்கிறார்களா?), “தைரியமான உறுதியான பெண்ணும், நெகிழ்ச்சியான கவித்துவமான ஆணும் நம் எதிர்காலச் சமூகத்தின் லட்சியப் பிரதிநிதிகளாக இருப்பார்கள்” என்று எழுதி இருக்கிறீர்கள். அது பற்றிச் சொல்லுங்கள்.

ஆர். அபிலாஷ்: ஒரு பாலினத்துக்கு இதுதான் அடிப்படை சுபாவம் என்று முன்பு உறுதிப்பாடுகள் இருந்தன. இன்று அது மாறி விட்டது. இன்னும் நெகிழ்வான நீர்மையான உறவுகளே இன்று வெற்றி பெறுகின்றன. அதற்கு ஆண்கள் பெண்களின் இடத்தையும் பெண்கள் ஆண்களின் இடத்தையும் (இந்த இடங்களே கற்பனையான வரையறைதான்) எடுத்துக் கொள்ளத் தேவையிருக்கிறது. இது இன்றைய காதலை லகுவாக அழகாக கவித்துவமாக மாற்றுகிறது.

ஆனால் துரதிஷ்டவசமாக நம்மால் முழுக்க இப்படி இருக்க முடிவதில்லை. இன்றைய ஆண்களின் மனம் பாதிக்குப் பாதி பழைய காலத்தில் உறைந்திருக்கிறது. பெண்களும் அவ்வாறே. இது உறவுக்குள் சிக்கலை, போராட்டங்களை, குழப்பங்களை உண்டாக்குகிறது. எதிர்கால லட்சிய ஆணும் பெண்ணும் எப்படி இருப்பார்கள் என்ற எனது கற்பனையே நீங்கள் மேலே குறிப்பிட்ட எனது மேற்கொள்.

“தைரியமான உறுதியான பெண்ணும், நெகிழ்ச்சியான கவித்துவமான ஆணும் நம் எதிர்காலச் சமூகத்தின் லட்சியப் பிரதிநிதிகளாக இருப்பார்கள்” – ஆர்.அபிலாஷ்

அதியன்: கவுதம் மேனன் தன் திரைப்படங்களின் கதாநாயகர்களுக்கு வேறொரு பரிமாணத்தைக் கொடுத்தவர். அவருக்குப் பிறகு வந்த இயக்குநர்கள் அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லத் தவறிவிட்டார்களா?

ஆர். அபிலாஷ்: ஆம் அது உண்மையே. அதற்கு ஒரு காரணமும் உள்ளது. நாம் மேலும் மேலும் நகர்வயப்படும் போது கௌதம் மேனன் பாணி படங்களை அதிகமாய் இயக்குகிற இயக்குநர்கள் தோன்றுவார்கள். இப்போதைக்கு அவர் சிறுபான்மை பார்வையாளர்களுக்கான இயக்குநரே. ஆனால் கௌதம் மேனன் சித்தரிக்கும் சட்டென உடைந்தழும், பெண்ணிடம் சுலபத்தில் சரணடையும் மென்மையான அந்த ஆண்கள் முக்கியமானவர்கள்.

அதியன்: ஆண்களுக்கு இடையேயான புரொமான்ஸ் தமிழ் சினிமாவில் எப்படிக் காட்டப்படுகிறது என்பதை விளக்கி எழுதியிருக்கிறீர்கள். இன்னொரு புறம், பெண்களுக்கு இடையேயான நட்பு ஏன் பரஸ்பரம் பொறாமை நிறைந்த ஒன்றாகச் சித்தரிக்கப்படுகிறது?

ஆர். அபிலாஷ்: திரையரங்கில் நுழைவுச்சீட்டு வாங்கி இடங்களை ஆக்கிரமிப்போர் இன்றும் அதிகம் ஆண்கள்தான். இதுவே நாம் ஆண்களுக்கான படங்களை இங்கு அதிகம் எடுக்க காரணம். பெண்களுக்கு இடையிலான பிரியத்தை, நட்புணர்வைக் காட்டும் படங்களை இங்கு எடுப்பது மிக மிக சிரமம். மலையாளத்தில் அத்தகைய ஒரு படத்தை பத்மராஜன் எடுத்திருக்கிறார்: தேசாடன கிளி கரயாறில்ல.

தமிழில் ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் போன்ற ஆப்களுக்காகப் படங்கள் எடுத்து வெளியிடப்பட்டால் பெண் தரப்புக்காக பெண்களைப் பற்றி மட்டுமான படங்கள் வர வாய்ப்புண்டு. ஒருவேளை எதிர்காலத்தில் நிகழலாம்.

அதியன்: “அன்பு, விசுவாசம் ஆகியவைக்கு இன்னொரு கூர் முனை உள்ளது. அதுதான் துரோகம்” என்று உங்கள் கட்டுரையில் குறிப்பிடுகிறீர்கள். தமிழகத்தில் துரோகத்தின் காரணமாக அன்றாடம் நிறைய குற்றச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. தமிழ்ச் சமூகம், துரோகத்தை மனித இயல்புகளில் ஒன்றாகப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டதா?

ஆர். அபிலாஷ்: அன்பு, விசுவாசம் ஆகியவற்றின் மறுபக்கமே துரோகம் என்பது ஒரு தத்துவார்த்தமான அவதானிப்பு மட்டுமே. நாம் மிகவும் நேசிக்கிறவர்களின் பால் ஏதோ கண்காணா வெறுப்பையும் வளர்க்கிறோம். இதற்கு விளக்கமே இல்லை. மனித மனம் இது போன்ற புதிர்களால் நிரம்பியது. நமக்குப் பிரியமான ஒருவர் துரோகம் இழைக்கும்போது நமக்கு அவர் பால் கொலைவெறி தோன்றுகிறது. நமது அளப்பரிய அன்பு ஒரு நொடியில் அளப்பரிய குரோதமாய் மாற்றமுறுகிறது.

உண்மையான அன்பு எப்படிக் குருதி நாடும் பசியாக மாற முடியும்?

எப்போதும் நம் வரலாற்றில், நம் அன்றாட சமூக நிகழ்வுகளில் இதுவே நடக்கிறது. நடப்புலகில் ஒருவர் நமக்குத் துரோகம் இழைக்கும்போது அது மனித மனத்தின் இருண்மை புதிர்களில் ஒன்று எனச் சுலபத்தில் எடுத்துக் கொள்ள முடியாது. சில எளிய சந்தர்பங்களில் நாம் அப்படி எண்ணி மன்னித்து விடலாம். ஆனால் பெரும்பாலும் நானோ நீங்களோ அங்கு இருந்தால் துரோகியின் கழுத்தை நெரித்துக் கொல்லவே தோன்றும். ஓர் எழுத்தாளனாய் என்னால் விலகி நின்று இதை அவதானிக்க முடியும். ஆனால் நடப்பில் ஒரு சமூகம் இப்பிரச்சனையில் விலகி நின்று நிதானமாய் நோக்க முடி யாது.

அதியன்: தேவர்மகன், ஜென்டில்மேன் போன்ற திரைப்படங்கள் திரைக்கதை, ஒளிப்பதிவு போன்ற தொழில்நுட்ப விஷயங்கள் மூலமாக நல்ல காட்சி அனுபவத்தைக் கொடுத்துவிட்டு, தவறான கருத்தாக்கங்களை மக்கள் மனதில் விதைப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஆர். அபிலாஷ்: ஒரு படைப்பு “தவறான கருத்தாக்கங்களை மக்கள் மனதில் விதைக்கும்” எனும் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. சினிமா இரு தரப்புகள் பங்கேற்கும் ஓர் உரையாடல், அவ்வளவுதான். அது ஒரு குத்துச்சண்டை போட்டி; அது ஒரு ஜோடி நடனம். சண்டையில் மூக்கு உடைந்தாலோ, நடனத்தின் இடையே உதடுகள் கவ்வப்பட்டாலோ ஒரு தரப்பை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. இதைப் பற்றித் துவக்க பதில் ஒன்றில் விரிவாகப் பேசி விட்டதால் இங்கே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

அதியன்: எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல் வரிசையில் தொண்ணூறுகளில் கோலோச்சத் தொடங்கிய அஜித், விஜய் ஆகியோர் கடந்த கால் நூற்றாண்டாகத் தமிழில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்களே?

ஆர். அபிலாஷ்: இது ஒரு பிரச்சனை என நான் பார்க்கவில்லை. வணிக சினிமாவுக்கு இந்த நட்சத்திர வரிசை அவசியமே. சினிமாவை விற்பது இவர்களால் சுலபமாகிறது.

சினிமா என்பது பல்லாயிரம் பேர் பங்கேற்கும் ஒரு பெரிய துறை. தியாகராஜன் குமாரராஜா போன்ற ஒருவர் எப்போதாவதுதான் படம் எடுக்க முடியும். அதை நாம் கண்டு விவாதித்து பாராட்டலாம். நலன் குமாரசாமி போன்ற ஒருவர் பரீட்சார்த்தமான படங்களைத் தந்து அதை வெற்றிகரமாய் ஓட வைக்கவும் முடியலாம். ஆனால் தொடர்ந்து இந்தப் பாணி மாற்றுப் படங்களைத் தொழிற்சாலைப் பண்டங்களைப் போல் உற்பத்தி பண்ணிக் கொண்டிருக்க இயலாது.

நமது சினிமா துறை ஒரு தொழிற்சாலை. அதற்கு எம்.ஜி.ஆர் சிவாஜியில் இருந்து விஜய் அஜித் வரை அவசியம் தேவை. பெரிய ரிஸ்க் இல்லாத, மக்களுக்கு எளிய ஆறுதல் அளிக்கும் படங்களை உற்பத்தி பண்ணிக் கொண்டிருந்தால் மட்டுமே ஆயிரமாயிரம் குடும்பங்களில் அடுப்பெரியும்.

நமக்கு உண்மையில் அவசியம் நட்சத்திரங்கள் அற்ற சினிமா அல்ல. இந்தப் பிரம்மாண்ட சினிமாக்களுடன் ஒரு மாற்று சினிமா இயக்கமும் நடைபெறுவதே. வழக்கமான திரையரங்குகளை நம்பி மாற்று சினிமா ஜீவிக்க முடியாது. அதைக் குறைந்த செலவில் எடுத்து வெளியிட்டு விற்பதற்கு இணையம், டிவி சேனல் போன்ற புதிய பாதைகள் திறந்து வருகின்றன. எண்பதுகளில் மலையாள சினிமாவின் பொற்காலத்தின் போது மம்முட்டி, மோகன்லால் போன்ற வணிக நாயகர்கள் மாற்றுப் படங்களிலும் ஊக்கத்துடன் நடித்தார்கள். இது மாற்று சினிமா இயக்கத்தைப் பாதுகாக்கவும் வெற்றிபெறச் செய்யவும் உதவியது. இது தமிழிலும் நடக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

அதியன்: முற்போக்கான மாநிலமாக அறியப்படும் கேரளாவிலும் கூட சாதிய அபிமானத்துடன் திரைப்படங்கள் வெளிவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். பெயருக்குப் பின்னால் சாதியின் பெயரைச் சேர்த்துக் கொள்ளும் பழக்கம் இன்னும் அங்கு ஒழியவில்லை. எனில், கதாநாயகர்களுக்குச் சாதிய அடையாளங்களுடன் பெயர் வைப்பது தவிர்க்க முடியாதது அல்லவா? இதை எப்படிப் புரிந்து கொள்வது?

ஆர். அபிலாஷ்: கேரளாவில் சாதி படிநிலை பெருமளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு அது இயல்புத்தன்மை கொண்டதால் ஏற்பட்ட நிலை அது. அங்கு ஒருவரை சாதிப்பெயரால் அழைப்பது இழிவு அல்ல. ஆனாலும் ஈழவ மக்களின் அரசியல் எழுச்சி அங்கு சாதி குறித்த பிரக்ஞையை ஏற்படுத்தி உள்ளது. ராஜீவ் ரவியின் கம்மட்டிப் பாடம் ஒரு நல்ல உதாரணம்.

எது எப்படியோ, சாதியைக் குறிப்பிடாமல் இருப்பது சாதியை ஒழிப்பது ஆகாது. சாதியைப் பல விதங்களில் இந்தியச் சமூகம் சார்ந்திருக்கிறது. நமது குடும்பம், நிலவுடைமை, பெண்களின் மீதான சமூகக் கட்டுப்பாடு, நமது சுய அடையாளம், அரசியலில் நமது செல்வாக்கு எனப் பல (சமூகக் கேடான) விசயங்கள் சாதியை நம்பி இருக்கின்றன. நீங்கள் சாதிக்கு வெளியே இருந்தால் திருமணம் செய்ய முடியுமா சொல்லுங்கள்? என்னதான் புரட்சித் திருமணம் செய்தாலும் மீள மீள சாதிக்குள் விழுந்தே ஆக வேண்டும் – அப்படியான சூழல்கள் சந்தர்ப்பங்கள் வாழ்வில் தோன்றியபடியே இருக்கும்.

ஆகையால், நாம் சாதியை மூடி மறைக்காமல் அது குறித்து சினிமாவில் இன்னும் திறந்த மனத்துடன் பேச வேண்டும் என்பதே என் விருப்பம். உதாரணமாய், காதல் போன்ற படங்களில் இன்னும் நேரடியாய் சாதிக் கலவரங்கள், வன்முறை, ஒடுக்குமுறையைக் குறிப்பிட்டு விவாதிக்கக் கூடிய சூழல் இங்கு தோன்ற வேண்டும். ஒரு விசயத்தைப் பேசாமல் இருக்கையில்தான் குரோதம் நொதித்து வன்முறை வளர்ந்து சமூகப் பிரச்சனைகள் வெடிக்கின்றன. ஆனால் பேசப் பேச நாம் ஒரு புரிந்துணர்வை எட்டி விட முடியும். இமையத்தின் பெத்தவன் கதை ஓர் அருமையான உதாரணம். நமது தணிக்கைத் துறை இவ்விசயத்தில் இன்னும் முற்போக்காய் இருக்க வேண்டும்.

அதியன்: மலையாள சினிமாவில் சமீப ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள புதிய அலைக்குப் பிறகான திரைப்படங்களின் போக்கு எப்படி இருக்கிறது?

ஆர். அபிலாஷ்: ஆமாம், வித்தியாசமான மண்ணின் மணம் கொண்ட புது நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் படங்கள் மலையாளத்தில் தற்போது வருகின்றன. பகத் பாஸில், நிவின் பாலி போன்ற நடிக்கத் தெரிந்த நட்சத்திரங்கள் இந்தப் புது வரவுகளின் மையத்தில் இருக்கிறார்கள். மோகன்லால், மம்முட்டியைத் தாண்டி நல்ல சினிமா உருவாக முடியும் என மலையாளிகள் தமக்குத் தாமே நிரூபிக்கிறார்கள்.

மலையாள சினிமாவின் இந்த அலை என்னை ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் சில வருடங்களுக்கு முன்பு வரை படுமட்டமான படங்களின் தொடர் வருகை, மோகன்லால் போன்ற நட்சத்திரங்களின் படங்களே தோல்வி அடைவது, தமிழ்ப் படங்கள் அங்கே வெளியாகி அமோகமாய் ஓடுவது என மலையாள சினிமா உலகமே கிட்டத்தட்ட தரைமட்டமாகும் நிலைமை ஏற்பட்டது. ஆனால் எதிர்பாரா விதத்தில் மலையாள சினிமா மீண்டு வந்துள்ளது. மோகன்லால் புலிமுருகன் எனும் பெரிய வெற்றிப் படம் கொடுத்தார். இன்னொரு பக்கம் ராஜீவ் ரவி, திலீஷ் போத்தன், ஆஷிக் அபு, சமீர் தஹீர், ரதீஷ் அம்பத் என மாற்றுப்பட / இடைநிலை இயக்குநர்களும் வெற்றி பெறுகிறார்கள். ஆரோக்கியமான சூழல் அங்கு திரும்பி விட்டது.

இங்கு இரண்டு விசயங்களைக் குறிப்பிட வேண்டும்.

  1. என்னதான் வித்தியாசமான அபாரமான படங்களைக் கொடுத்தாலும் மலையாள சினிமாவுக்கு என்று இன்னமும் திரைமொழி உருவாகி வரவில்லை. ராஜீவ் ரவி போன்றோரின் படங்கள் மட்டுமே விதிவிலக்கு. தொழில்நுட்ப ரீதியாக நாம் அவர்களைவிட வெகுவாக மேலே இருக்கிறோம்.
  2. குறைந்த பட்ஜெட் படங்களை எடுப்பது அவர்களுக்கு எப்போதுமே வலிமை. அவர்களால் பரீட்சார்த்த முயற்சிகளை எளிதில் செய்து பார்க்க இயல்கிறது.

அதியன்: குறைந்த பட்ஜெட் திரைப்படங்கள் எடுப்பது மலையாள சினிமாவின் வலிமை என்று சொல்கிறீர்கள். இது மலையாள சினிமாவுக்கு எப்படிச் சாத்தியமாயிற்று?

ஆர்.அபிலாஷ்: கேரளாவின் வலுவற்ற பொருளாதாரச் சூழல்தான் அதற்குக் காரணம். அம்மாநிலத்தைப் பொறுத்தமட்டில் அது ஒரு எதிர்மறை விசயம். ஆனால் அவர்களின் சினிமா அதனால் மறைமுகப் பயன் பெற்றுள்ளது. ஆனால் குறைந்த பட்ஜெட் மட்டும் அல்ல அனுகூலம்; அதைப் பயன்படுத்தி வீரியமான, சமூகப் பிரச்சனைகளைப் பேசுகிற, பண்பாட்டு தத்துவார்த்த, சமூக உளவியல் சிக்கல்களைப் பேசுகிற படங்களை எடுக்கும் இயக்குநர்கள், அவர்களை ஆதரிக்கும் நட்சத்திர நாயகர்கள், அவர்களுக்கு நீடித்த ஆதரவைப் பல பத்தாண்டுகளாய் வழங்கும் பார்வையாளர்கள் எனப் பல காரணிகள் இந்தச் சுண்டைக்காய்ப் பொருளாதார அமைப்பைக் கொண்டு அற்புதப் படங்களைத் தொடர்ந்து எடுக்கும் சாத்தியத்தை ஏற்படுத்துகிறார்கள்.

அர்ப்பணிப்புள்ள, ஊக்கமுள்ள கலைஞர்களும், பண்பாட்டு ஓர்மையும் பொறுப்புணர்வும் கொண்ட பார்வையாளர் பரப்பும் தமிழகத்தில் உண்டென்றால் இந்தக் கடும் வியாபாரப் போட்டிச் சூழலிலும் நம்மால் காத்திரமான ஆழமான குறைந்த பட்ஜெட் படங்களைத் தர முடியும். நூறு கோடி சொத்து கொண்ட ஒரு குடும்பத்தினர் தினமும் பிச்சை எடுத்து உணவருந்துவது போன்ற நிலைமை நம்முடையது. எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை!

அதியன்: தமிழ் சினிமா தொழில்நுட்ப ரீதியாக மலையாள சினிமாவைக் காட்டிலும் பன்மடங்கு முன்னேறி இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், கதை சொல்லல் முறையில்,வாழ்க்கையின், சமூகத்தின் மீதான நுண்மையான சித்தரிப்புகளில் மலையாள சினிமா இன்னும் பல படிகள் மேலே தானே இருக்கிறது? மகேஷிண்ட பிரதிகாரம், தொண்டிமுதலும் திரிக்ஸக்ஷியும் போன்ற படங்களில கூட வசனங்கள் அதிகமின்றி வெறும் காட்சிகள் வழியாகவே கதை நகருவதாகத் தோன்றுகிறது. “வசனங்களை விடுத்து கதை சொல்ல இன்றும் மலையாளிகளுக்குத் தெரியாது” என்பதைக் கொஞ்சம் விளக்க முடியுமா?

ஆர். அபிலாஷ்: ஆம், மலையாளிகளுக்கு இன்னமும் சினிமா மொழி வசப்படவில்லை. தமிழ் சினிமா மொழி முப்பது வருடங்களாகவே வலுவானது. ஒளிப்பதிவை நாம் நுணுக்கமாய், பிரதானமாய்ப் பயன்படுத்துவது போல அவர்கள் செய்வதில்லை.

கேரளாவில் நாடக இயக்கம் வலுவானதாய் இருந்துள்ளது அவர்களின் சினிமாவில் நாடகப் பாங்கு தூக்கலாய் உள்ளதற்கு ஒரு காரணம். நமது சினிமாவில் நாட்டார் மரபின், இசைப்பாடல்களின் தாக்கம் வலுவாக இருந்துள்ளது. ஆனால் நாம் நாடகக் கதையமைப்பைச் சமீபமாய் நம்பி இருப்பதில்லை.

மகேஷிண்ட பிரதிகாரம், தொண்டிமுதலும் திரிக்ஸக்ஷியும் போன்ற படங்களில் அழகான காட்சிகள் இருக்கலாம். ஆனால் அவற்றில் நிச்சயம் திரைமொழி இல்லை. இங்கு நான் திரைமொழி என்றால் என்ன எனத் தெளிவுபடுத்த வேண்டும்.

எண்பதுகளின் இறுதியில் வெளிவந்த பேசா படமான பேசும் படத்தை எடுத்துக் கொள்வோம். அதில் நேரடியான ஒரு கதை உண்டு – வேலையில்லாத ஒரு ஏழை பட்டதாரி தனக்கு எதேச்சையாய் அமைந்த ஒரு சந்தர்பத்தைப் பயன்படுத்தி ஒரு பணக்காரரின் அந்தஸ்தை ஹைஜேக் செய்கிறார். தற்காலிகமாய் வசதிகளை செல்வச்செழிப்பை, பணக்காரர்களுக்கே உரித்த அனுகூலங்களை அனுபவிக்கிறார். இறுதியில், அந்த வாழ்வின் வெறுமையை உணர்ந்த பின், தன் வறிய நிலைக்கே மீள்கிறார்.

இக்கதைப் போக்கை அப்படத்தின் சம்பவங்கள் வழி நாம் புரிந்து கொள்கிறோம்; ரசிக்கிறோம்; சிரிக்கிறோம்; கண்ணீர் விடுகிறோம். ஆனால் இதைக் கடந்து பல அடுக்குகள் இக்கதையில் உண்டு. ஒரு காட்சியில் வறிய பட்டதாரி கமல் பணம் படைத்த இளம் நங்கையான அமலாவை ஒரு கலைப்பொருட்கள் விற்பனையகத்தில் காண்கிறார். அப்போது ஒரு ஷாட்டில் கமல் அமலாவை மறைந்திருந்து பார்க்கிறார். Foregroundஇல் ஒரு பெண் சிலை – வடிவான கவர்ச்சியான காம ரசம் சொட்டும் சிலை – இருக்கிறது. பின்னணியில் அமலா. அந்த விற்பனையகம் வரும் வழியெங்கும் கமல் பல்வேறு கடைப்பொருட்களை வெறுமனே ஆசையுடன் வேடிக்கை பார்த்து வருவதைக் காட்டுவார்கள். அப்படித்தான் இக்கடையிலும் அவர் நுழைகிறார். அப்போதுதான் இக்காட்சி வருகிறது. இச்சிலையும் அமலாவும் நாயகனுக்கு ஒன்றுதான் எனும் நுணுக்கமான் குறிப்பு இங்கு உணர்த்தப்படுகிறது.

தன்னால் வாங்க முடியாத ஒன்றை, தன் தகுதிக்கு மீறி இச்சிக்கும் ஒரு வாடிக்கையாளன்தான் கமல். அவர் அவ்வாறே அமலாவையும் இச்சிக்கப் போகிறார். அவரால் அச்சிலையை வாங்க இயலாதது போன்றே அமலாவையும் அடைய முடியாது; அவர் அக்கடைக்குள் ஒரு கனவானின் பாவனையில் நுழைந்து போலியாய் உலவுவது போன்றே ஒரு மேட்டுக்குடி உலகினுள்ளும் புகுந்து வாழப் போகிறார்; அங்கு அமலாவைக் காணுற்று காதல் உறவு கொள்ளப் போகிறார், ஆனால் அக்கடையில் இருந்து அவர் உதைத்து வெளியேற்றப்படப் போவதைப் போன்றே மேட்டுக்குடி வாழ்வில் இருந்து வெளியேறப் போகிறார், தன் காதலியையும் இழக்கப் போகிறார் எனப் பல சேதிகளை அந்த ஒற்றை ஷாட் உள்ளடக்கி உள்ளது. இதுதான் திரைமொழி. இதுதான் மலையாள சினிமாவில் இல்லை என்கிறேன்.

ஒளிப்பதிவை நேரடியான கதையைச் சொல்லப் பயன்படுத்தும் போது அது சாதாரண சினிமா. ஒளிப்பதிவை, blocking, framing, lighting, படத்தொகுப்பு போன்ற அம்சங்களைக் கதையின் மற்றொரு பரிமாணத்தை, மனித மனம் குறித்த நுணுக்கமான பார்வையை, பல அர்த்தப் படலங்களை உருவாக்கி காட்சிக்குள் பொதிந்து வைக்க பயன்படுத்துகையில் அது திரைமொழி கொண்ட நல்ல சினிமா ஆகிறது. முதலாவது மலையாள சினிமா; இரண்டாவது தமிழ் சினிமா.

அதியன்: மலையாள சினிமாவில் எழுத்தாளர்களின் பங்கு அதிகம். அங்கு நிறைய நாவல்கள் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. அப்படியான சூழல் தமிழில் இல்லாதது குறித்து ஓர் எழுத்தாளராக உங்களுக்கு வருத்தம் உண்டா?

ஆர். அபிலாஷ்: யாருக்குத்தான் மலையாளப் பண்பாட்டுச் சூழலைக் கண்டு விசனம் இருக்காது? அங்கு சுமாரான படைப்பாளிகளுக்குக் கூட பெரும் அங்கீகாரமும் கவனமும் கிடைக்கிறது. சினிமாவில் திரைக்கதையாளனாய் மட்டுமே வசதியாய்ப் புகழுடன் வாழ முடியும். நம்மால் பெருமூச்சு மட்டுமே விட இயலும்.

அதியன்: தமிழின் மிகத் தீவிரமான எழுத்தாளர்கள் எல்லாம் சினிமாவில் வசனம் எழுத ஆரம்பித்து விட்டார்கள். இதன் மூலம் திரைப்படக் கலை மேன்மை அடைகிறதா? அல்லது எழுத்தாளர்கள் தங்கள் சாரத்தை இழந்துவிடுகிறார்களா?

ஆர். அபிலாஷ்: எழுத்தாளன் எப்போதுமே சாரம் இழப்பதில்லை. அவன் கொலை செய்து சிறை சென்றாலும் சோரம் போவதில்லை. பிறகு சினிமா எப்படி அவனை மாற்று குறைக்கும்? இது தமிழில் நிலவும் ஒரு மூட நம்பிக்கை மட்டுமே.

தமிழில் திரை எழுத்தாளர்களுக்கு தனித்த இடம் என்றுமே இருந்ததில்லை. மலையாளத்தில் பரதன் போன்ற இயக்குநர்கள் கூட திரைக்கதைப் பொறுப்பை திரை எழுத்தாளர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள். திரைக்கதையைத் தம் கற்பனையில் காட்சிபூர்வமாய் உருவாக்குவதே இயக்குநரின் பணி. ஆனால் இங்கே நீண்ட காலமாய் இயக்குநரே கதை, திரைக்கதை, இயக்கம் என ஆதியும் அந்தமுமாய் இருப்பதே கௌரவம் எனும் நிலை நிலவுகிறது. அது மட்டுமல்ல, நமது இயக்குநர்கள் நாயகனாக நடிக்கவும் ஆசைப்படுகிறார்கள். தமிழில் நாயகியின் இடத்தை மட்டுமே அவர்கள் எடுக்க மாட்டார்கள். மற்றபடி நாயகன், காமிடியன், தயாரிப்பாளர், உபநடிகன் என நம் இயக்குநர்கள் ஆல்ரவுண்டர்களாய் இருந்து வருகிறார்கள். இதனால் இங்கு திரை எழுத்தாளனுக்கான ஓர் இடம் உருவாகி அதற்காய் ஆட்கள் பயிற்சி பெற்று தயாராக வருவது நிகழவில்லை.

கலைஞானம், அனந்து போன்று திரைக்கதை ஆலோசகர்களே இங்கு இருந்திருக்கிறார்கள். தமிழின் சிறந்த படைப்பாளிகளான எஸ்.ரா, ஜெ.மோ போன்றோர் திரைக்கதை எழுதச் செல்லும் போது அவர்கள் கதை ஆலோசனையில் பங்கேற்பது, வசனங்களை எழுதுவது போன்ற குறைந்தபட்ச பணிகளையே செய்கிறார்கள். மலையாளத்தில் எம்.டி வாசுதேவன் நாயர் ஒரு படத்திற்கு திரைக்கதை எழுதும் போது அதில் அவரது தாக்கம் தனித்து தெரியும். ஆனால் இங்கோ இயக்குநர் படத்தில் தன் ஆதிக்கமே அதிகம் இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். ஜெ.மோவின் ஏழாம் உலகம் பாலாவின் இயக்கத்தில் படமான போது அது எப்படி முற்றிலும் உருமாறியது என்பதைப் பார்த்தோம்.

நம் எழுத்தாளர்களை நான் குறைகூற மாட்டேன். அவர்களை முழுக்க பயன்படுத்திக் கொள்ளும் சூழல் இன்னும் இங்கே உருவாகவில்லை. இன்னொரு பக்கம், சினிமாவைக் காட்சிபூர்வமாய்க் கண்டு திரைக்கதையை வடிக்கும் நுட்பத்தையும் நம் படைப்பாளிகள் கற்க வேண்டும்.

அதியன்: சமூகத்திலும் அரசியலிலும் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் சினிமாவில் எப்படிப் பிரதிபலிக்கிறது என்று இந்தப் புத்தகத்தில் நிறைய எழுதியிருக்கிறீர்கள். இலக்கியத்திலும் அத்தகைய மாற்றங்கள் பிரதிபலிக்கப்படுகிறதா?

ஆர். அபிலாஷ்: இல்லை, இலக்கியம் அவ்வாறு சமூகத்திலும் அரசியலிலும் உடனுக்குடன் நிகழும் மாற்றங்களைப் பிரதிபலிப்பதில்லை. சொல்லப் போனால் மிக நுணுக்கமான தீவிரமான பண்பாட்டு நகர்வுகளைக் கூட உடனுக்குடன் காட்டுவது சினிமாதான். இலக்கியம் சமூகக் கலாச்சார நகர்வுகளை, அசைவுகளை, சரிவுகளை உருவகமாய் மாற்றுகிறது. அதற்கு ஒன்றோ இரண்டோ பத்தாண்டுகள் தேவைப்படுகின்றன. ஈழப் படுகொலைகள் முடிந்த பின், குருதியை மண் உறிஞ்சிய பின், காற்றில் ஓலங்கள் கரைந்து மறைந்த பின், ஈழப் போர் இலக்கியம் உக்கிரமாய் எழுந்து வந்தது. அதுவும் கூட நேரடியான அனுபவ சாட்சியங்களாய்த்தான். அடுத்த 25 ஆண்டுகளில் அந்தப் போர் அனுபவங்கள் மேலும் ஆழமாய்த் தீவிரமாய்ப் பேசப்படலாம். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் படிக்கையில் அது நேருவின் காலம் துவங்கி இந்தியா முழுக்க இடதுசாரிகள் வீழ்ச்சியடைந்த காலம் வரையிலான காலகட்டத்தின் சித்திரம் என எனக்குத் தோன்றியது. அதாவது நமது சுதந்திரத்துக்குப் பின்னான இந்தியா குறித்த ஒரு உருவக / நீதிக் கதையாக அதைப் படிக்க முடியும். அதே போலத்தான் பொன்னியின் செல்வனும். விஷ்ணுபுரத்தின் தீவிரமும் சிக்கலும் இல்லையெனிலும், பொன்னியின் செல்வனில் சுதந்திரம் பெற்ற இந்தியாவின் லட்சியவாதமும் துடிப்பும் நிறைந்த, கல்மிஷம் இல்லாத ஓர் இளைஞனின் பார்வையில் (வந்தியத்தேவனின் பார்வையில்) சோழ சாம்ராஜ்யத்தின் சரிவும் வீழ்ச்சியும் சதி வலைகளும் சூழ்ச்சிகளும் சித்தரிக்கப்படுகின்றன. சுந்தரச்சோழர் இந்திய தேசத்துக்கான உருவகமா அல்லது காந்தியின் குறியீடா?

ஆனால் சினிமா இப்படி வரலாற்றைத் தின்று செரித்து புத்துருவாக்கம் செய்வதில்லை. அது உடனுக்குடன் எதிர்வினை ஆற்றக் கூடியது.

அதியன்: தமிழ் சினிமாவில் மண்சார்ந்த கதை சொல்லல் முறைகள் கொண்டுவரவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? Asghar Farhadi போன்ற இயக்குனர்கள் சினிமாவுக்கும் நாடகத்துக்குமான கூட்டிணைப்பை ஆராய்கிறார்கள். தமிழ் மண்சார்ந்த கலைகளுக்கும், சினிமாவுக்குமான உரையாடலை எப்படி வலுப்படுத்துவது?

ஆர்.அபிலாஷ்: நீங்கள் குறிப்பிடும் மண்சார்ந்த கதைகூறல் தமிழில் என்றுமே இருந்துள்ளது – பல வெற்றிப்படங்கள் இதைப் பயன்படுத்தி உள்ளன. இன்னும் சொல்லப் போனால் இந்திய சினிமாவே கூத்து, நாடகம், நையாண்டி மேளம் எனப் பல தொல்வடிவங்களில் இருந்து வரித்துக் கொண்ட நுட்பங்கள், அம்சங்களைக் கொண்டு தோன்றியதுதான். மணிரத்னம் தனது பேட்டி ஒன்றில் இந்திய சினிமாவில் பாடல்கள் எப்படி மிகை-கற்பனையுடன் எடுக்கப்படுகின்றன; எதார்த்தமான ஒரு படத்தில் கூட பாடல் புகுந்ததும் சட்டென அது ஒரு மிகை எதார்த்த நிலைக்கு நகர்ந்து விடுகிறது; அப்போது நம்மால் எதார்த்த கதையாடலில் சாத்தியப்படாத பல விசயங்களை பாடல் வழியாய் சித்தரிக்க முடிகிறது; இது ஹாலிவுட்டுக்கு சாத்தியப்படாதது என்கிறார். இந்தப் பாடலே நமது மண்சார்ந்த கலைகளில் இருந்து தோன்றியதல்லவா! நாம் காலங்காலமாய்ப் பாடியும் ஆடியும்தானே கதை சொல்லி வந்துள்ளோம்! நமது சங்கக் கவிதைகள் கூட கவிதைகள் அல்ல நாடக வடிவம் ஒன்றின் வசனங்கள் என்கிறார் பேராசிரியர் நிர்மல் செல்வமணி.

நமது பரீட்சார்த்தமான படங்கள் உலக சினிமாவை ஒரு மாதிரியாய்க் கொள்கின்றன. குமாரராஜாவின் ஆரண்ய காண்டம் படத்தை உதாரணம் காட்டலாம். என் கேள்வி நம்மால் இத்தகைய படங்களுக்கு நாட்டுப்புற வடிவங்களில் இருந்து, தமிழ் தொல் கதைகளில் இருந்து ஒரு புது கதைகூறலை, காட்சிமொழியை உருவாக்க முடியுமா என்பது. அப்படிச் செய்தால் அது தமிழன் கண்டுபிடித்த ஒரு புது பாணியாக ஆகும். இதை வெகுமக்கள் ரசிக்கும்படியாய்ச் செய்தால் ஓரளவு வெற்றி பெறுகிற நடுநிலைப் படங்களையும் நாம் எடுக்கலாம்.

அதியன்: அரசியல் சரிநிலைகளை நிராகரிப்பது பின்-நவீனத்துவத்தின் கூறுகளில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. திரைப்படங்களுக்கு நம் சமூகத்தில் அதிகக் கவனம் கிடைக்கிறது. இவ்விரண்டு விஷயங்களையும் வைத்துப் பார்க்கும் போது, இன்று பின்-நவீனத்துவத்தை அறிந்துகொண்டு சினிமா இயக்க வரும் ஒருவர், அரசியல் சரிநிலைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டுமா?

ஆர். அபிலாஷ்: இன்றைய காலத்தின் ஆபத்தே அரசியல் சரிநிலைகள்தாம் – அவை நம்மைச் சதா எச்சரிக்கை உணர்வுடன் இருக்கச் செய்கிறன. யாரையும் காயப்படுத்தக் கூடாது, நாம் பிற்போக்கு எனும் பிம்பம் ஏற்படக் கூடாது எனும் பீதி நம் மென்னியைப் பிடித்து நெரிக்கிறது. ஒரு படைப்பாளிக்கு அபாரமான சுதந்திரம் முக்கியம். அவன் தன்னை மொத்த சமூகத்துக்கும் பொறுப்பாக கருதும் போது, தன் பிம்பம் குறித்த மிதமிஞ்சிய பிரக்ஞை கொள்ளும் போது, தன் சுதந்திரத்தை இழக்கிறான். பின்–நவீனத்துவம் அறிந்தவரோ அறியாதவரோ சரிநிலைகளைக் கைவிட வேண்டும்; அதுதான் முக்கியம். உ.தா., மணிரத்னம் பின்நவீனத்துவவாதி அல்ல. அவரது காற்று வெளியிடை அரசியல் சரிநிலைகள் அற்ற ஒரு படம்.

இப்படம் தன்முனைப்பு மிக்க ஆனால் மூர்க்கமாய் ஒரு பெண்ணை நேசிக்கிற ஆணின் காதலை அவன் கோணத்தில் இருந்து பேசியது; அவனது குரூரத்தை, அக்கறையின்மையை, முரட்டுத்தனத்தைச் சித்தரித்தது; அத்தோடு அவனை எல்லா குறைகளையும் சகித்துக் கொண்டு ஒரு பெண் கசிந்துருகி காதலிப்பதையும் காட்டியது. இதை நம் பெண்ணியவாதிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் இப்படத்தைக் கடுமையாய் எதிர்த்தனர்.

பெண்ணியவாதிகள் எதிர்பார்ப்பது அப்பெண் அவனை உதறிக் கொண்டு சுதந்திரமாய் வாழ்வதாய் மணிரத்னம் சித்தரித்திருக்க வேண்டும் என்பது. அது கருத்தியலுக்கு உவப்பாய் இருக்கலாம்; ஆனால் வாழ்க்கைக்கு நியாயமாய் இருக்காது. நிஜ வாழ்க்கையில் காதல் பல தீமைகளின் ஊடாய்த்தான் உயிர்க்கிறது, தழைக்கிறது; இப்பெண் ஏன் அவளை மதிக்காத அந்த ஆண் மீது இப்படிப் பைத்தியமாய் இருக்கிறாள் என்ற கேள்விக்கு சுலபத்தில் பதில் இருப்பதில்லை; காதல் நம்மை ஓர் அடிமையாய் இருக்கச் செய்கிறது; அதில் மனம் திளைக்கச் செய்கிறது. வாழ்க்கையைப் பகுத்தறிவுடன் மட்டும் எதிர்கொள்ளும் சில எளிய பெண்ணியவாதிகளுக்கு இந்த ஆழம் புரியாது.

ஒரு படைப்பாளி இவர்களைப் புறக்கணிக்க வேண்டும்.

அதியன்: இயக்குநர் மிஷ்கினின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கட்டுரையாளர் நீங்கள்தான். நந்தலாலா காலத்திலிருந்தே அவரது திரைப்படங்களைப் பற்றி எழுதி வருகிறீர்கள். மிஷ்கினுடனான, அவரது சினிமாவுடனான உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆர். அபிலாஷ்: மிஷ்கின் ஓர் அபாரமான ஆளுமை. நான் மிகவும் விரும்பி தேடி சந்தித்த மனிதர் அவர். அவரைப் பற்றி அவரது நண்பர்கள் வழி நிறைய தெரிந்து கொண்டேன். அவரை நான் அவ்வாறு கவனித்து அவதானித்ததைக் கொண்டு துப்பறிவாளன் படத்தை அலசினேன். அது மிஷ்கினின் மன அமைப்பு குறித்த படம் என்பது என் தரப்பு. அவர் அளவு சினிமா மொழி குறித்த ஆழமான பார்வையும் பிரக்ஞையும் கொண்ட இன்னொருவர் உண்டென்றால் அது ராம்தான்.

முழுக்க முழுக்க தன் தேடலால் உழைப்பால் உருவாகி வந்த மனிதர் மிஷ்கின். காலையில் விழிப்பது முதல் உறங்குவது வரை சில்லறை விசயங்களைப் பற்றி அவர் அதிகம் கவலை கொள்வதில்லை. முழுக்க கலையும் தன்னை உணர்தலும் சுதந்திரமாய் வாழ்தலுமே அவரது அக்கறையாக இருக்கிறது. ஜென் மரபில் இருந்து கற்றுக் கொண்டவற்றை நடப்பில் அவர் முயற்சிப்பதைக் கவனித்திருக்கிறேன். அவரைப் பற்றிப் பேசுவதானால் இந்த[ பேட்டி போதாது. என்றாவது அவரது படங்கள் பற்றி, அவரது ஆளுமை குறித்து ஒரு நூல் எழுதுவேன்.

அதியன்: தமிழில் விமர்சனக் கலையின் போக்கு எப்படி இருக்கிறது?

ஆர். அபிலாஷ்: நீண்ட காலமாய் நாம் சினிமாவை இலக்கியம் போன்று மற்றொரு கதை வடிவமாய்க் கண்டு அதைப் பற்றி எழுதி வந்தோம். அதன் தொழில்நுடப் அம்சங்களான frame, blocking, ஒளிப்பதிவு, காட்சித்தொகுப்பு ஆகியவற்றை அலசி சினிமாவை நாம் அதன் கதையம்சம், வசனம் ஆகியவை தாண்டி முற்றிலும் வேறொரு விதத்தில் அலச முடியும்.

இன்று முகநூல் வழி நிறைய விமர்சனங்கள் ஜனரஞ்சமாய் நேர்மையாய் எழுதப்படுகின்றன. உலக சினிமா அக்கறை கொண்டவர்களும் தம் பார்வையை, பரிந்துரைகளைத் தருகிறார்கள். இன்னொரு பக்கம், சினிமா மொழியை அறிந்து கொள்ள இன்று இணையம் வழி ஏகப்பட்ட சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளன. சினிமாவை ஆய்வு செய்யும், படித்தறியும், அதைப் பற்றித் தீவிரமாய் ஆழமாய் எழுதும் வாய்ப்புகள் இன்று பெருகி விட்டன. இதைக் கொண்டு சினிமா விமர்சனத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது நம் பொறுப்பு.

அதியன்: தமிழ்நாட்டில் film appreciation இல்லை என்று இயக்குனர் ராம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இந்த சினிமா ரசனையை மக்களிடையே எவ்வாறு வளர்க்கலாம்?

ஆர்.அபிலாஷ்: அவரது புகார் தமிழில் விமர்சனம் என்ற பெயரில் கதையை மட்டுமே அலசுகிறார்கள் என்பது. ராம் சொல்வது உண்மைதான். சினிமா என்பது அதன் கதையோ வசனமோ அல்ல. சினிமா ஒரு காட்சிப்பூர்வ ஊடகம். ஒரு படம் எப்படிச் சமூகம், மனித மனம், தத்துவச் சிக்கல்கள், அரசியல் பிரச்சனைகள் ஆகியவற்றைப் பேசுகிறது என்பதை முழுக்க காட்சிப் பிம்பங்கள், ஒளிப்பதிவு, காட்சித் தொகுப்பு, வேறு பல தொழிற் நுட்பங்கள் வழி பேச முடியும்.

இப்படியான சினிமா மொழியின் தாக்கம் கூர்மையானது, வலுவானது; நீண்ட காலம் நம் மனதில் நீடிப்பவை சினிமா உருவாக்கும் பிம்பங்கள்.

பதேர் பாஞ்சாலியில் நவீனம் ஒரு கிராமத்தில் ஊடுருவதைச் சித்தரிக்க ரயிலை, ரயில் வரும் அதிர்வை இரண்டு பிள்ளைகள் தண்டவாளத்தில் காதுவைத்து உணரும் இடத்தைப் பயன்படுத்துவார் சத்ய ஜித்ரே. இது ஒரு தொன்மமாக மாறி நம் நினைவுகளில் நிலைத்து விட்டது. தமிழில் மூன்றாம் பிறையில் பாலு மகேந்திரா இந்தக் காட்சியை ஒரு ஹோமெஜ் போல் பயன்படுத்தி இருப்பார்.

சத்யஜித் ரே காட்டும் ஓர் அழியும் சமூகப் பண்பாட்டு வாழ்வின் உருவகம்தான் அக்காட்சி – மாரில் பாயும் கத்தி போல ரயில் அந்த ஊருக்குள் வருகிறது. ராமின் படங்களில் ரயில் மட்டுமல்ல மனிதர்கள் புது ஊர் ஒன்றுக்கு பயணப்படும் எல்லா வாகனங்களும் இழப்போடு, ஏக்கத்தோடு, எதிர்மறை உணர்வுகளோடு சம்மந்தப்பட்டிருக்கும். கற்றது தமிழில் இருந்து தரமணி வரை இதைப் பார்க்கலாம். இந்தச் சின்ன ஒரு சரடை எடுத்துக் கொண்டு நீங்கள் விரிவாய் அவர் சினிமாவைப் பற்றிப் பேச முடியும். தமிழ் படித்ததால் வேலை இல்லை, வேலை இல்லாதவனுக்கு மதிப்பில்லை, ஐடி தொழில் மனித விழுமியங்களைச் சீர்குலைக்கிறது என்பதெல்லாம் அவர் சினிமாவில் மேல்பூச்சு. அதைக் கடந்து தன் படங்களை விவாதிக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். அது நிகழவில்லையே என ஆதங்கப்படுகிறார்.

நான் சமீபத்தில் இருவர் படத்தின் ஒளிப்பதிவை மட்டுமே கொண்டு அப்படத்தை முற்றிலும் மாறுபட்டு அர்த்தப்படுத்தி ஒரு கட்டுரையை உயிர்மை பத்திரிகையில் வெளியிட்டேன்[2]. நான் சினிமா மொழியைப் பொருட்படுத்தி எழுத முயன்ற முதல் கட்டுரை அது. நான் இதைத் தொடர்ந்து செய்வேனா எனத் தெரியவில்லை. நான் முழுநேர சினிமா விமர்சகன் அல்ல. ஆங்கிலத்தில் Wolfcrow போன்ற யூடியூப் அலைவரிசைகளில் வெளிவரும் சினிமா மொழி அலசல்களைக் காண்கையில் இவையெல்லாம் எப்போது தமிழில் நிகழப் போகின்றன எனும் ஆதங்கம் எனக்கும் ஏற்படுகிறது.

நல்ல விமர்சனப் போக்கு எதிர்கால சினிமாவைச் செழுமைப்படுத்தும். அதையே ராம் கோருகிறார். நியாயம்தான்!

அதியன்: சரி, இதை எப்படி இங்கே தமிழில் தோற்றுவிப்பது?

ஆர்.அபிலாஷ்: கல்விப் புலத்தில் மொழிப் பாடங்களுடன் காட்சி ஊடகங்களின் மொழியையும் கற்பிக்கலாம். வெகுஜன ஊடகங்களில் இது பற்றி எளிய அறிமுகங்கள் கொடுக்கலாம். விகடனில் யாராவது இதைப் பற்றி ஓர் எளிய தொடர் எழுதினாலே (வெறுமனே உலக சினிமா கதையை விவரித்து சுருக்காமல்) அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

தமிழில் சினிமாவின் தொழில்நுட்ப ரீதியான விசயங்களை, அதன் காட்சி வரலாற்றை அறிந்த நபர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் அதை எழுதுவதில்லை. நான் ராமை ஒருமுறை சந்தித்த போது பேரன்பு படத்தின் முதல் நாற்பது நிமிடங்களைப் போட்டுக் காட்டினார். நான் அதன் துவக்க காட்சிகள் பற்றி வினவிய போது, அந்தக் காட்சிகளின் பல்வேறு நுட்பங்களை அவர் ஒரு மணிநேரம் அற்புதமாய் எனக்கு விளக்கினார். காட்சி மொழி, திரைக்கதை பற்றி அவருக்குள்ள ஞானம் என்னை வியக்க வைத்தது. ஆனால் ராம் இதையெல்லாம் எழுதுவதில்லை; அவருக்கு அவகாசமில்லை. இது போன்ற நுட்பங்களை எழுதி பிரசுரிப்பவர்கள், அதைப் பதிப்பிப்பவர்கள் நமக்கு வேண்டும்.

அதியன்: தமிழின் வணிக சினிமாக்கள் மட்டமானவை என்பது பெரும்பாலான அறிவுஜீவிகளின் வாதம். அதே வணிக சினிமாக்களை வைத்தே நம் சமூகத்தின் நடப்புகளை எப்படி உங்களால் அவதானிக்க முடிகிறது?

ஆர். அபிலாஷ்: சமூகப் போக்குகளை வணிக சினிமா உடனுக்குடன் விவாதிக்கிறது. மேலும் நம் சமூக நனவிலியின் கண்ணாடியாகவும் வணிக சினிமா உள்ளது. அதனாலே அதை அலசுவது நிழலில் உறைந்த சமூக முகத்தில் வெளிச்சம் பாய்ச்ச அவசியமாய் உள்ளது.

அதியன்: ஓர் எழுத்தாளராக உங்கள் அடுத்த கட்டப் பயணம்?

ஆர். அபிலாஷ்: நேர்மையாய்ச் சொல்வதானால் தெரியவில்லை. இந்த நொடி வரை எழுத்து எனக்குச் சுகானுபவம் அளிக்கிறது. எழுதும் போது அபாரமான பாய்ச்சலை உள்ளுக்குள் உணர்கிறேன். ஆகையால் நான் என் இறுதி மூச்சு வரை எழுதுவேன் என நினைக்கிறேன்.

மேற்படித் தகவல்கள்

  1. 90களின் தமிழ் சினிமா புத்தக அறிமுகம்
  2. இருவர் திரைப்படம் பற்றி உயிர்மெய்யில் அபிலாஷ் எழுதிய கட்டுரை – பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5

அனைத்து படங்களும் ஆர்.அபிலாஷ் வழங்கியுள்ளன. அனுமதி இல்லாமல் இனப்பெருக்கம் செய்யாதீர்கள்.


பேட்டி எடுத்தவரைப் பற்றி

அதியன் நல்ல இலக்கியங்கள், சினிமாக்கள், இசை போன்றவை மீது பிரியம் கொண்டவன். அபுனைவுகளில் அரசியலையும் வரலாற்றையும் வாசிப்பதில் ஈடுபாடு உண்டு. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” கூற்றுப்படி எந்தவித அடையாளங்களுக்குள்ளும் தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல் வாழ விரும்பிகறவன்.

Did you like what you read? Support us as we explore film cultures from around the world; experience cinema in new ways with us. Let us keep The World of Apu free for all!

Become a Patron!